மனிதன் x மனிதன் ஒரு மனிதன் தனக்குத் தானே முரண்பட்டு நிற்கும் செயல்களைச் செய்யும் நிலையைக் குறிக்கும். அதாவது சங்க இலக்கியம் ஒரங்க நாடகப் பாங்கில் இயற்றப்பட்டுள்ளதால், அவற்றில் இடம்பெறும் கதைமாந்தர்கள் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய், கண்டோர் என்று நற்றிணையில் இடம் பெறுகின்றனர்.
இக்கதைமாந்தர்களில் தலைவன் தனக்குத்தானே உரையாடிக் கொள்ளும் நிலையைக் குறிக்கும். தலைவன் அகத்திற்குள் ஏற்படும் செயல் தடுமாற்றம் தலைவன் புறத்தில் காண்கின்ற தோற்றத்தின் மூலம் செயல்களில் முரண்பட்டு நிற்பதை அறிய இயலும். அப்பொழுது தலைவன் எந்தச் சூழ்நிலையில் என்ன செய்கின்றான் என்பதை வைத்தே தலைவனைத் தீர்மானிக்க இயலும்.
ஒரு தனிமனிதருக்குள் ஏற்படும் உணர்வுகள் அவரது அகத்தைச் சார்ந்தும், புறத்தைச் சார்ந்தும் இருக்கின்ற பொழுது பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாக நேரிடுகின்றன. ‘காதல், ஏக்கம், பயம், வருத்தம்’ ஆகிய மாற்றங்கள் அகம் சார்ந்து அமைந்து விடுகின்றன. அகத்திற்குள் எழுந்த மாற்றத்தினால் புறத்தில் நிகழவேண்டிய செயலுக்குத் தடையாக அமைந்து விடுகின்றது.
ஒவ்வொரு மனிதரையும் எதிர் கொள்கின்ற பொழுது அவர் இருக்கின்ற மனநிலையினை வைத்துத்தான் முரண்பாட்டைக் குறிப்பிட முடியும். முரண்பாடு “மனிதனின் உள்ளார்ந்த உடன்படாத் தன்மை முரண்பாடு ஆகும். முரண்பாட்டின் இறுக்கமான சிக்கலுற்ற நிலை பிணக்கு, பூசல் எனப்படும். சிலர் முரண்பாட்டைப் (Differences) பிணக்கு என விவரிக்கின்றனர். முரண்பாடு எங்கும் எப்போதும் காணப்படும் ஒருவகை மாதிரியான தோற்றப்பாடே (Typical Phinomina) ஆகும்”.
உளவியல் என்பது மனித மனதின் இயல்புகளை எடுத்தியம்பக் கூடியது. ஒரு மனிதன் அவனுடைய மனத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மனமானது முக்கிய பங்காற்றி வருகின்றது. அத்தகைய வகையில் ஒரு செயலை ஏற்றுக் கொள்வதற்கும், அச்செயலைத் தவிர்ப்பதற்கும் இடையில் நிகழ்கின்ற ஒரு விதமான போராட்டம் பற்றி எடுத்துரைப்பதாக உளவியல் அமைகின்றது.
ஒருவரின் மனதில் ஏற்படுகின்ற மனப்போராட்டம் (Mental Conflict) என்பது ஒருவரின் மனதிற்கும், அறிவுக்கும் இடையில் நடைபெறுகின்ற போராட்டம் என்று குறிக்கின்றர். உளவியல் அறிஞரான கர்ட் லீவின் (Kurt Lewin) மனப்போராட்டம் என்பதினைக் குறிப்பிடும் பொழுது “இரண்டு சமவலிமையுள்ள ஊக்கிகள் நிறைவுபெற இயலாமல் ஒன்று மற்றொன்றிற்குத் தடையாக இருப்பின், மனம் இவற்றிற்கு இடையில் கிடந்து தடுமாறும், போராடும் இத்தகு மன ஊசலாட்டமே மனப்போராட்டமாகும்”. (தா. ஏ. சண்முகம், உளநலவியல்,பக்.40-41) என்று புலப்படுத்தியுள்ளார்.
நற்றிணையில் சிறைக்குடியாந்தயார் பாடிய பதினாறாம் பாடல் பாலைத் திணையில் இயற்றப் பெற்றள்ளது. இப்பாடல் செலவழுங்குவித்தல் என்னும் துறையில் அமைந்துள்ளது. “செலவழுங்குவித்தல் இவற்றில் செலவு என்பது பயணம், அழுங்கல் என்பது கைவிடல் என்பதாகும். செலவழுங்குவித்தல் என்பது பயணத்தைக் கைவிடல் என்பதாகும்”
(தேவிரா, தமிழ் இலக்கணம், ப.235) அதாவது தலைவி மீது உள்ள காதலால் தலைவன் தான் மேற்கொண்ட பயணத்தைத் தவிர்க்கும் பொருட்டு அமைந்த பாடலாகும்.
தலைவன் தலைவி தந்த இன்ப நுகர்ச்சியில் ஈடுபாடுடையவனாக இருக்கின்றான். ஆகையால் தலைவன் தன் நெஞ்சினை விளித்து அதனோடு உரையாடிய நிகழ்வாகப் பாடல் புனையப் பெற்றிருக்கிறது. திருமணம் முடித்த பிறகு இல்லற வாழ்க்கைக்காகப் பொருள் தேடச் செல்வது வழக்கம். ஆனால் தலைவன் தலைவியோடு கூடியிருந்த இன்ப வாழ்க்கையை மனதில் நினைத்துக்கொண்டு அவ்வின்பத்திலேயே மூழ்கியிருக்கின்றான். அப்போது
புணரில் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியில் புணராது புணர்வே யாயிடைச்
சேர்பினுஞ் செல்லா யாயினு நல்லதற்
குரியை வாழியென் னெஞ்சே பொருளே.
என்று குறிப்பிடுகினறான். தலைவன் தன் நெஞ்சிற்குப், பொருள் தேடச் செல்லாமல் இருப்பதே நல்லது என்கின்றான். தலைவியை விட்டுப் பொருள் தேடச் செல்ல வேண்டிய தருணம் வந்ததும், தலைவன் மனதிற்குள் பொருள் தேடச் செல்வதா, தலைவியை விட்டுப் பிரிவதா என்ற மனப்போராட்டம் நிகழ்கின்றது.
வாடப்பூவின் பொய்கை நாப்பன்
ஓடுமீன் வழியிற் கெடுவ யானே
என்று தலைவன் உரைக்கின்றான். அப்போது தலைவன் தன் நெஞ்சிடம் உரையாடும் பொழுது யான் அறிந்தவரையில். தன் தலைவியிடமிருந்து கிடைக்கப்பெற்ற இன்பநுகர்வு, பொய்கையில் இருக்கின்ற (குளத்தில்) வாடாத மலர்களைப்போன்றது. அப்பொய்கையில் வாழ்கின்ற மீன் புதுநீர் வருகையால் இருக்கும் இடம் அறியாமல் அப்புதுநீரோடு சென்று வாழ்வதறியாமல் தன் வாழ்க்கையை தொலைத்துவிடும். அந்த மீன் போல் நான் இருக்கக் கூடாது. ஆகையால் என் நெஞ்சே,
விழுநீர் வியலகந் தூணி யாக
எழுமா ணளக்கும் விழுநெதி பெறினுங்
கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனன்
எனைய ஆகுக வாழிய பொருளே.
என்று உரைக்கின்றான்.
தலைவன் நெஞ்சிடம் உரைக்கும் பொழுது இவ்வுலகில் பெரிய கடல் சூழ்ந்த பரந்த நிலத்தை அளக்கும் மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் வரையில் அளக்கத்தக்க பெரும் பொருள்கள் கிடைத்தாலும் அப்பொருளை நான் விரும்பமாட்டேன் என்று நெஞ்சிற்கு உரைக்கின்றான்.
இல்லற வாழ்வினை நடத்துவதற்குப் பொருளானது இன்றியமையாதது, ஆனால் மிகப்பெரிய பொருள் கிடைத்தாலும் அந்தப் பொருளை வேண்டாம் என்று எண்ணித் துணிகின்றான். தலைவன் மனத்தில் தலைவி அளித்த இன்பநுகர்வே காரணமாக அமைந்து விடுகின்றது. இறுதியில் பொருளைவிடத் தலைவி தரும் இன்பமே சிறந்தது என்று பொருள் தேடுவதைத் தவிர்த்து விடுகின்றான்.
நற்றிணையில் முடத்திருமாறன் பாடிய 105 வது பாடலில் பொருள் தேடிப் புறப்பட்ட தலைவன் இடைச்சுரத்துத் தலைவியை நினைத்து திரும்பிவிட எண்ணுகிறான். அப்போது தலைவன் மனதிற்குள் ஏற்படும் மனப்போராட்டத்தை தன் நெஞ்சானது இகழ்ந்து கூறுவதைப் பின்வரும் பாடல் சுட்டுகிறது.
முளிகொடி வலந்த முள்அரை இலவந்து
ஓளிர்சினை அதிர வீசி விளிபட
வெல்வளி வழங்கும் வேய்பயில் மருங்கில்
கடுநடை யானை கன்றொடு வருந்த
நெடுநீர் அற்ற நிழலில் ஆங்கண்
அருஞ்சுரக் கவலைய என்னாய் நெடுஞ்சேன்
பட்டனை வாழிய.
இப்பாடல் தலைவனின் மனப்போராட்டதை வெளிப்படுத்துகின்றது. பொருள்தேடச் சென்ற தலைவன் சுர வழியில் செல்லும் பொழுது தன்நெஞ்சிடம் உரையாடுகின்றான். அப்பொழுது முட்கள் பொருந்திய அடியை உடைய இலவமரத்தில் காய்ந்த கொடிகள் சுற்றியுள்ளன. இக்காய்ந்த கொடிகளைக் கண்டதும் தலைவன் மனதில் தலைவியோடு கூடியிருந்த நாம் இப்போது தனிமையில் இருக்கும் நிகழ்வினை எண்ணி மனம் வருந்துகிறது. “இலவமரத்தில் இருக்கும் காய்ந்த கொடிகள் போன்று மனத்தில் உள்ள ஆசைகளை எல்லாம் தொலைத்து காய்ந்த கொடி” போன்று மனமானது சுட்டப்படுகிறது.
இலவமரத்தில் இருக்கும் காய்ந்த அம்மரக்கிளைகள் நடுங்கும்படி பெருங்காற்றானது வீசி அம்மரத்தினை முறிக்கின்றது. இல்லற வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் தேட வேண்டும் என்ற பெரும் காற்றானது என்னுடைய வாழ்வில் வீசி என்னுடைய வாழ்வையே நடுங்க வைக்கின்றது. மூங்கில்கள் அடர்ந்திருக்கும்; அப்பக்கத்தில் விரைந்து செல்லும் பெண் யானை தன் கன்றோடு வருந்தி நிற்கிறது. அவ்வழி நீரும் நிழலும் அற்ற வழியாகும். சுரத்திடத்துள்ள கடத்தற்கரிய அந்நெறிகளை நீ எண்ணமாட்டாய்.
--- --- --- --- --- --- --- நெஞ்சே குட்டுவன்
குடவரைச் சுனைய மாயிதழ்க் குவளை
வண்டுபடு வான்போது கமழும்
அஞ்சில் ஓதி அரும்படர் உறவே.
தலைவன் தன் நெஞ்சிடம், “நெஞ்சே குட்டுவனது மேற்குமலைப்பகுதியில் காணப்படுகின்ற சுனையில் மலர்கள் மலர்ந்துள்ளது. அம்மலர்களில் பெரிய இதழையுடைய குவளை மலர்களில் வண்டுகள் மொய்க்கின்றன. அம்மலரைச் சூடுவதால் என்னுடைய காதலியின் அழகிய கூந்தல் நறுமணம் கமழ்கின்றது. இந்த நறுமணம் அவளுக்குப் பெரும் துன்பத்தினை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் நெஞ்சே நீ நெடுந்தூரம் வந்துவிட்டாய்” என்று தலைவன் நெஞ்சிற்குச் சொல்லிப் பின்னர்; இடையிலேயே பொருள் தேடுவதைத் தவிர்த்து இல்லம் திரும்புகின்றான்.
இப்பாடலில் பாலைநிலத்தில் நிகழும் சுரத்தின் கொடுமையும் குறிஞ்சி நிலத்தின் வளமையும் கண்டு தலைவன் மனதிற்குள் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மனிதன் தனக்குள் மனப்போராட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதனால் தொடர்ந்து பொருள்தேடச் செல்லாமல் பின்பு பாதி வழியிலேயே திரும்பி விடுகின்றான். இதனால் தலைவன் தனக்குத் தானே முரண்பட்டுக் காணப்படுகின்றான்.
நற்றிணையில் செலவழுங்கல் என்னும் துறையில் அமைந்த பாடல்கள் ஒரு தனிமனித உணர்வுகளில் ஏற்படுகின்ற எண்ண ஓட்டங்களையும் அதனடிப்படையிலான மனித செயல்பாட்டு மாற்றத்தையும் சுட்டுகின்றன. இப்பாடல்களில் தனிமனிதன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற நிலையைக் காணமுடிகிறது. அதனால் மனிதன் முரண்பட்டு நிற்கும் நிலையும் அறியமுடிகின்றது. இத்துறையில் அமைந்த பாடல்களில் சமவலிமை உடைய இரண்டு செயல்கள் காணப்படுகின்றது. இவற்றில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்வதற்குத் தகுந்தவாறு மனிதனின் மனம் காணப்படுகின்றது. இவ்வாறு மனித மனத்தின் உள்ளார்ந்த உடன்படாத் தன்மையைச் செலவழுங்கல் துறையில் அமைந்த பாடல்களில் காணமுடிகின்றது.