நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் உவமை இன்பம்
முனைவர் செ. ரவிசங்கர்
முன்னுரை
தமிழ் மொழி பக்தி மொழி என்ற அடையைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணமாக விளங்குகின்ற நூல்களில் நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் ஒன்றாகும். வைணவ சமயத்தை வெளிப்படுத்தும் நூல் இது என்றால் இது மிகையல்ல. வைணவ சமயத்தின் முழுமுதல் கடவுளான திருமாலை மையமாக வைத்து படைக்கப்பட்ட நூல். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்களை 12 ஆழ்வார்கள் இயற்றியுள்ளனர். இந்நூலில் மொத்தம் 3884 பாடல்கள் உள்ளன என்றும் 3776 பாடல்கள் தான் உள்ளன என்றும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்கின்ற பெயர் கொடுத்து அழைக்கப்படுகிறது. இந்நூலில் ஐந்தாவது ஆழ்வாராக வைத்துப் போற்றப்படுகின்ற நம்மாழ்வாரின் திருவிருத்தம் பகுதியில் இடம்பெற்றுள்ள உவமையை இக்கட்டுரை ஆராய்கிறது.
நம்மாழ்வார்
நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் பிறந்தவர். 16 ஆண்டுகள் தவநிலை மேற்கொண்டவர் இவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எண்ணும் நான்கு நூல்களை இயற்றியுள்ளார். இவரை வைணவ சமய வாதிகள் (நம்மாழ்வாரை) உயிராகவும் ஏனைய ஆழ்வார்களை உடலாகவும் கொள்வது மரபாகக் கொண்டுள்ளனர். இவர் 35 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார்.
நம்மாழ்வார் திருமால் திருவடியில் எப்போதும் விளங்குவதாக வைணவ சமயம் கூறுகிறது. அதற்குக் காரணம் நம்மாழ்வார் சாதாரண குழந்தையைப் போல் பிறக்கவில்லை ‘அவர் பிறந்த நாளிலிருந்து மற்றக் குழந்தையைப் போல் அழுது உண்ணவில்லை, அழவில்லை, கண்களைத் திறந்து பார்க்கவில்லை’ என்று பி. சுப்பிரமணியன் கூறுகிறார். இதன் மூலம் அவர் கடவுள் பிறவி என்று கூறலாம்.
மேலும் இவர் வளர்ந்த விதம் வியப்பை ஏற்படுத்துகிறது. உண்ணாத அழாத கண்ணைத் திறக்காத நம்மாழ்வாரைப் பெற்றோர்கள் குருகூர்ப் பெருமாள் ஆலயத்தில் கிடத்தி வருந்தி வணங்கினர். அந்தக் குழந்தை நகர்ந்து நகர்ந்து அருகில் இருந்த புளியமரத்தின் பொந்திற்குள் சென்றது. அங்குதான் 16 ஆண்டுகள் ஞான யோகத்தில் (நம்மாழ்வார்) குழந்தை வளர்ந்தது. இவ்வாறாக இவரைப் பற்றிய செய்திகளை அறிஞர்கள் கூறுகின்றனர்.
திருவிருத்தத்தில் உவமை
உலகில் எல்லாப் படைப்பாளர்களும் உவமையை அமைத்துத்தான் தனது படைப்பை விளக்குகின்றனர். அந்த வகையில் நம்மாழ்வாரும் தமது படைப்பில் உவமையை மிகத் தெளிவாக எடுத்துக் கையாண்டுள்ளார்.
கருடாழ்வார் சினம்
திருமாலின் வாகனம் கருடாழ்வார் இந்தப் பறவை மிகுந்த சினம் கொண்டது என்பதை அறிவிக்க நம்மாழ்வாருக்கு உவமைத் தேவைப் படுகிறது. அதற்குப் பயன்படும் பொருளை உவமையாகப் பாடலில் அமைத்துள்ளார்.
“குழல் - கோவலர் மடப் பாவையும்
மண்மகளும் திருவும்
நிழல் போல்வனர் கண்டும் நிற்கும் கொல்
மீளும் கொல் தண் அம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல்
விண்ணோர் தொழ கடவும்
தழல் போல் சினத்த அப் புள்ளின் பன்
போன தனி நெஞ்சமே!”
இப்பாடலில் கருடாழ்வாரின் சினம் தீயைப் போல உள்ளது என்கிற செய்திகளைத் தருகிறார் ஆசிரியர். அதாவது பிற தெய்வங்கள் எல்லாம் பெரும்பாலும் சினம் கொண்ட தன்மையை உடைய விலங்குகளான சிங்கம், பாம்பு, புலி போன்றவற்றைப் உடன் வைத்திருக்கின்றன. அந்த அடிப்படையில் கருடாழ்வார் சினம் கொண்ட தன்மையை உடையது என்று நம்மாழ்வார் படைத்திருக்கிறார் என்று கூறலாம்.
திருமாலின் கண்கள்
நம்மாழ்வார் திருமாலின் கண்களை ஒப்பிடும் போது, மிகையான கற்பனையைக் கொண்டு விளக்குகிறார். உயர்வானப் பொருளை உவமையாகக் கொள்ள வேண்டும் என்பது தமிழர் மரபு. ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காளே’ என்று தொல்காப்பியரும் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் இது உரையில் கூறாத பொருளாகக் கண்ணிற்கு தரும் உவமை சிறப்புடையதாக அமைகின்றது.
“ நீலத் தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் - பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான், விசும்புக்கும் பிரான், மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணினின் கோலங்களே”
என்று பாடலைப் புனைந்துள்ளார். திருமாலின் கண்கள் அவற்றின் அழகு நீலமான பெரிய மலையின் உச்சியில் உள்ள செந்தாமரை பூத்துள்ள பெரிய தடாகங்கள் போல விளங்குகின்றனவாம். நம்மாழ்வாருக்கு இந்த உவமை தெய்வத்தின் மீது கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது. மேலும் தடம் போல் என்றும் உவமை மிக அருமையான தொன்றாக இடம்பெற்றுள்ளது. திருவிருத்தத்தில்
“வன்காற்று அறைய ஒருங்கே மறித்து கிடந்து அலர்ந்த
மென்கால் கமலத் தடம்போல் பொரிந்தன மண்ணும் விண்ணும்
என்காற்கு அளவின்மை காண்மின் என்பான்ஒத்து வான்நிமிர்ந்த
தன் கால் பணிந்து என் பால் எம்பிரான் தடம் கண்களே!”
இப்பாடலில் நம்மாழ்வார் மீது கடைக்கண்கள் திருமால் காட்டிவிட்டார் என்பதனால் நம்மாழ்வார் திருமாலின் கடைக்கண்ணை சாய்ந்து கிடந்து மலர்ந்த மெல்லிய நானத்தை உடைய தாமரைத் தடாகத்திற்கு ஒப்பிடுகிறார்.
இவ்வாறாக நம்மாழ்வார் திருமாலின் கண்களைத் தாமரைத் தடாகத்திற்கு உவமை அமைத்துப் பலப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் ஒரு பாடலில்
“வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய
துன் மென் கமலத் தடம் போல்”
என்று எழுதியுள்ளார். இது போல உவமையை நம்மாழ்வார் புனைந்து பாடியுள்ளதால் திருமால் எப்போதும் குளிந்த தன்மையில் இருப்பவர் என்பதைக் காட்டுகிறது.
மலையும் திருமாலும்
நம்மாழ்வார் மிகத் தெளிவாக உவமையை அமைத்துள்ளார். திருமாலைப் பற்றி உவமை அமைக்கும் போது, அவரின் ஒரு பகுதியான கண்ணை மலையின் உச்சியில் உள்ள தடாகத்திற்கு ஒப்பிட்டார், ஆனால் அவரின் உடம்பிற்கு உவமை தரும்போது அந்த மலையையே உவமையாக்கியுள்ளார்.
“கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ, எம்பிரானது எழில் நிறமே!
இப்பாடலில் மலையை திருமாலின் உடல் முழுவதற்குமாக உவமை கூறியுள்ளார் நம்மாழ்வார் இப்போக்கினைத் தொல்காப்பியர்
“முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய”
என்று கூறுகின்றார். அந்த வகையில் மலை என்பது முதல் திருமாலின் உடல் என்பதும் முதல். எனவே முதலுக்கு முதலை உவமையாகக் கூறியுள்ளார்.
உலகமும் நெற்றியும்
திருமால் இந்த உலகத்தைக் காப்பாற்றியவன் ஒரு முறை சிறு வயதில் இந்த உலகத்தை உண்டு, பின்பு உமிழ்ந்து காப்பாற்றினலன் என்பது நம்மாழ்வார் தருகின்ற செய்தி. இந்தச் செய்தியைக் கூற வந்த நம்மாழ்வார் பெண்ணின் நெற்றியோடு உலகை ஒப்பிட்டு பாடலில் அழகியலை உண்டு பண்ணுகிறார்.
“பண்டு பலபல வீங்கு இருள் காண்டும் இப்பாய் இருள்போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் பாள வண்ண
வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண்நேர் அன்ன ஒண் நுதலே!”
இங்கு திருமால் காப்பாற்றிய உலகு போன்ற நெற்றியை உடைய பெண் என்று நம்மாழ்வார் பாடியது மிகையாக இருந்தாலும் இப்பாடல் பெருமாளின் சிறப்பை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. அதற்கு உவமை பயன்பட்டுள்ளது.
கருக்காய் கடிப்பவர்
திருமாலின் மீது அன்புருகி நம்மாழ்வார் பல்வேறு விதமான உவமையைக் கையாண்டு பாடலைப் பாடியுள்ளார். பெருமானை அடைய முடியாதவராக இருக்கும் நம்மாழ்வார் திருநாமத்தையாவது தருசிக்க முயன்றேன் என்பதை அழகான உவமை கொண்டு விளக்குகிறார்.
“இருக்கு ஆர்மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த
திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா
ஒழுக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமச் சொல் கற்றனமே!
இப்பாடலில் திருமாலை அடைய முடியாதவர் அவரின் நாமத்தையாவது தரிசிக்க முயற்சிக்கிறார்கள் என்கின்ற உலகியலைக் கூறுவதற்கு ‘பழம் கிடைக்காதவர் பிஞ்சைத் திண்பது போல’ என்கின்ற உவமையைத் தெளிவாகக் கையாண்டுள்ளார்.
முடிவுரை
தமிழ் இலக்கிய உலகில் வைணவப் பாசுரங்கள் இன்னிசையாகப் பாடப்படும் அற்புதப் பாடல்கள் தமிழ் பக்தி இலக்கியங்களில் மிகப்பெரிய சொத்து நம்மாழ்வாரின் பாடல்கள் அவற்றில் உவமையைப் பற்றி இக்கட்டுரை சில துளிகளைக் காட்டுகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.