இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கோவலனின் ஆளுமை

முனைவர் பா. பொன்னி


ஆளுமையை ஆங்கிலத்தில் பெர்சனாலிட்டி (Personality) என்ற சொல்லால் குறிப்பிடுவர். நாடக மேடையில் அக்காலத்தில் நடிப்பவர்கள் தாங்கள் ஏற்றிடும் பாத்திரத்தின் இயல்புக்குத் தக்கபடி ஒரு முகமூடியை ( Mask ) அணிந்து தோன்றினர். இத்தகைய முகமூடியைக் குறிக்கும் இலத்தீன் சொல்லான பர்ஸொனா என்பதில் இருந்து இச்சொல் தோன்றியது. இஃது இலத்தீன் மொழிச் சொல்லாகும். இதன் பண்டைய பொருள் ஒருவனின் பண்புகளைக் குறிக்கும் வெளித்தோற்றம் என்பதாகும். சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள கோவலனின் ஆளுமையை உளவியல் நோக்கில் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆளுமையின் வகைகள்

ஆளுமையினைப் பல்வேறு உளவியல் அறிஞர்களும் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தியுள்ளனர். அவ்வகைப்பாடுகளை அறிஞர்களின் கருத்துகள் அடிப்படையில்

 • காரல்யுங் வகைப்பாடு

 • அட்லர் வகைப்பாடு

 • ஆல்போர்ட்டு வகைப்பாடு

 • எரிக்குபிரேம் வகைப்பாடு

 • காட்டல் வகைப்பாடு

 • லிப்பிட் மற்றும் ஒயிட் வகைப்பாடு

 • கேலனின் வகைப்பாடு

  என்று பல்வேறு வகைப்பாடுகளில் ஆளுமையை ஆராய இயலுகின்றது. இருப்பினும் காரல்யுங் பகுப்பின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது.

 • காரல்யுங்

  உளவியல் அறிஞர்களில் குறிப்பிடத்தக்க இடம் வகிப்பவர் காரல்யுங். அவர் மனிதர்களை அவர்களின் பண்புக் கூறுகளின் அடிப்படையில் அகமுகத்தவர் புறமுகத்தவர் என்று இரு வகைகளாகப் பிரிக்கிறார். தனி மனிதனின் உள் ஊக்குத்திறன் (Libido) உள்நோக்கிச் செல்லுமாயின் அவன் அகமுக ஆளுமை கொண்டவன் என்றும் வெளியுலகை நோக்கிச் செல்லுமாயின் அவன் புறமுக ஆளுமை கொண்டவன் என்றும் யுங் விளக்குகிறார்.  அகமுகம்

  மனிதர்களுக்குள் சிலர் தம்மைப் பற்றிய எண்ணங்களிலேயே இருக்கின்றனர். இத்தகைய பண்புக் கூறினை யுங் அகமுகம் (Introversion) என்பார். அகமுகப் பண்புக் கூறினை உடையவர்கள் சமூகச் சூழ்நிலைகளில் இருந்து ஒதுங்கியும் தன்வயப்பட்டும் கூச்சம் மிக்கும் இருப்பர்.

  வாழ்வியற் களஞ்சியம் “இவர்கள் தாமாகச் செய்யக் கூடிய செயல்களில் மட்டுமே அக்கறை காட்டுவர்.பிறர் நட்பு விழையார். தனிமையை நாடுவர்.தத்துவ ஆர்வமும் ஆராய்ச்சித் திறனும் கொண்டிருப்பர். பகற் கனவில் ஈடுபடுவர். மிகையான அவையச்சம் உடையவராக இருப்பர். எளிதில் மனவெழுச்சி வயப்படுவர். கற்பனைத் திறன் மிக்கவராக இருப்பர். எச்செயலையும் திட்டமிட்டுச் செய்வர். நம்பிக்கைக்கு உரியராக இருப்பர்” (1) என்று அகமுகத்தவர்க்கான பண்பு நலனுக்கு விளக்கம் தருகிறது.

  புறமுகம்

  அகமுகப் பண்புக் கூறினுக்கு நோ்எதிரிடையான பண்புக் கூறு புறமுகம் (Extroversion) எனப்படும். புறமுகப் பண்புக் கூறினை உடையவர்கள் நண்பர்களை விரைவில் தேடிக் கொள்பவர்களாகவும் சமூகம் தம்மை ஏற்றுக் கொள்வதைப் பெரிதும் விரும்புபவராகவும் கூச்சமின்றிப் பிறருடன் பழகுபவராகவும் இருப்பர்.

  புறமுக ஆளுமையினருக்கான பண்பு நலன்களாக “புறமுக ஆளுமையினர் சமூகவயமாதலை விரும்புபவர். சமூக ஏற்புடைமையைப் பெரிதும் மதிப்பவர். உரையாடுவதில் ஆர்வம் கொண்டவர். நட்பு விழைபவர். தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவர். தம் குற்றம் காணாதவர். தலைமை ஏற்க முன்வருபவர். தனிமையை விரும்பாதவர். எதையும் ஆழ்ந்து எண்ணாமல் உள்துடிப்புக்கு ஏற்ப (Impulse) விரைந்து செயல்படுபவர். தேவைக்கு மேல் தன்னம்பிக்கை உடையவராக இருப்பர்” (2) என்று வாழ்வியற் களஞ்சியம் பொருள் தருகிறது.

  இந்த அடிப்படையில் கோவலன் எத்தகைய ஆளுமையை உடையவன் என்பது இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. யுங்கின் வகைப்பாட்டு அடிப்படையில் கோவலனை மேலோட்டமாகப் பார்க்கும் போது கோவலன் புறமுகத்தன்மையை உடையவன் என்ற கருத்து தோன்றுகிறது.  கோவலனின் பண்புநலன்கள்

  சிலப்பதிகாரக் காப்பியத்தில் கோவலனும் கண்ணகியும் திருமண நிகழ்வின் மூலமே அறிமுகப்படுத்தப் படுகின்றனர். கோவலனைக் குறிப்பிடும் போது இளங்கோவடிகள்;

  இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண்ட கவையான்
  அவனுந்தான்
  மண்தேய்த்த புகழினான் ( மங்கலவாழ்த்துப்பாடல் 34-36 )

  என்று முருகனைப் போன்று அழகுடையவன் மண் தேய்த்த புகழினை உடையவன் என்பதாகக் குறிப்பிடுகிறார். இதற்கு உரையாசிரியர்கள் பல்வேறு பொருள்களைத் தந்துள்ளனர். மண் உலக உயிர்களுக்கு உரிய உணவுப்பொருள், உறையுள் பொருள், இருப்பிடப்பொருள், உலோகப்பொருள் ஆகிய அனைத்தையும் கொடுத்து உதவக் கூடியது. கோவலன் அதன் சிறப்பினைத் தன்னுடைய கொடை வன்மையால் குறைத்து விட்டான் என்பதனையே மண் தேய்த்த புகழினான் என்ற அடி சுட்டுவதாகக் குறிப்பிடுவர். மேலும் கோவலனின் பண்புகள் அடைக்கலக் காதையில் மாடலன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. கடக்களிறு அடக்கிய கருணை மறவன் ( அடைக்கலக்காதை 53 )

  செல்லாச் செல்வன் ( அடைக்கலக்காதை 75)

  இல்லோர் செம்மல் ( அடைக்கலக்காதை 90 )

  என்று கோவலன் பலவாறு புகழப்படுகிறான். இவை மட்டும் அல்லாது செய்த தவறினை ஒத்துக் கொள்ளும் மனப்பான்மை தம்மைத் தவறாகப் பேசியவர்களுக்கு கவுந்தி அடிகள் சாபம் கொடுத்த நிலையிலும், அவர்களுக்காகச் சாப நீக்கம் அளிக்கும்படிக் கேட்ட இரக்க குணம் ஆகியவை உடையவனாகக் கோவலன் காணப்படுகின்றான். இப்பண்புகள் அனைத்தும் அவனை புறமுகத்தோனாகவே நம்மை உணர வைக்கின்றன. இருப்பினும் காப்பியப் போக்கில் படிப்படியான அவனது செயல்கள் அவனை அகமுகத்தவனாக அடையாளப்படுத்துகின்றன. அதனை சற்று விரிவாக ஆராய்வோம்.

  அகமுகத்தோர், புறமுகத்தோர் என்பதற்கு விளக்கம் தந்துள்ள அறிஞர்கள் “சூழ்நிலை தூண்டல் ஆகியவற்றால் ஒருவன் சில சமயங்களில் புறமுகத்தோனாகவும், வேறு சில சமயங்களில் அகமுகத்தோனாகவும் காணப்படுவான். தற்காப்புடன் முன்னெச்சரிக்கையாகச் செயல்படும் போது புறமுகனாகச் செயல்படுவான். ஆனால் அவன் இடையூற்றில் இருக்கும் பொழுதும், புற அழுத்தங்களால் தூண்டப்படும் பொழுதும் அகமுகனாகச் செயல்படுவான். இவ்வாறு அகமுகம் புறமுகம் ஆகிய இருபண்புகளும் ஒரு நடத்தைக் கோலத்தின் இருதுருவங்களாக இருக்கின்றன” (3) என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

  இதன் அடிப்படையில் கோவலனின் பண்பு மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகிறது. கோவலனின் பண்பு மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் அவனது உணர்வெழுச்சிகளே எனலாம்.  உணர்வெழுச்சிகள்

  உணர்வெழுச்சிகள் இல்லாத பண்பாடு எதுவும் இல்லை எனலாம். உணர்வெழுச்சி செயற்பாடுகள் சொற்களைப் போன்றவை அல்ல. மனித இயல்பின் ஓர் அங்கமாகத் திகழ்பவை.உணர்வெழுச்சிகளை

 • அடிப்படை உணர்வெழுச்சிகள்

 • உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள்

  என்ற இருநிலைகளில் பகுப்பர். இவற்றுள் உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள் கோவலனிடம் மிகுந்திருப்பதை அறிய இயலுகின்றது. அதன் அடிப்படையிலேயே கோவலனின் ஆளுமையும் மாற்றம் அடைகிறது.

 • உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள்

  உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள் பண்பாட்டு வேறுபாட்டை வெளிப்படுத்துவனவாக அமைபவை.

 • காதல்

 • குற்றவுணர்வு

 • அவமானம்

 • திகைப்பு

 • கௌரவம்

 • ஏக்கம்

 • பொறாமை

  ஆகியவை உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள் ஆகும். (4)

  இவ்வுணர்ச்சிகளில் திகைப்பு, ஏக்கம் தவிர்த்த ஏனைய உணர்வெழுச்சிகள் கோவலனிடம் மிகுந்திருப்பதனை நாம் அறியமுடிகிறது.

 • காதல்

  காதலில் காணப்படும் மையஅம்சங்களாக “ஒருவர் மீதுள்ள வலிமையான பாலுணர்வு ஈர்ப்பு காதலர் இல்லாத போது ஏற்படும் வேதனை ஏக்கம் முதலிய உணர்வுகள், அவனோ, அவளோ இருக்கும் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பம், இவையன்றி காதல் பரிசு தருதல், பாட்டு கவிதை மூலம் காதலை வெளிப்படுத்துதல் முதலிய காதல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றையும் சோ்க்கின்றனர்” (5) என்பர். அவ்வகையில் கோவலனிடம் பாலுணர்வு மிகுந்திருப்பதனைக் காணமுடிகிறது.


  பாலுணர்ச்சி

  மனித வாழ்வில் பாலுணர்வின் இன்றியமையாமையை அறிஞர்கள் பல்வேறு விதமாக விளக்கியுள்ளனர். “மக்களுடைய அகப்புறச் செயல்களுக்கு அடிப்படையாக அமையும் உணர்வுகளில் தலைமை சான்றன இரண்டு. ஒன்று பசியுணர்வு பிறிதொன்று பாலுணர்வு. இவ்விரு உணர்ச்சிகளையும் மையமாகக் கொண்டே வாழ்வின் இயக்கம் அமைகிறது” (6) என்று குறிப்பிடுவர்.

  “மனித வாழ்வுக்கு உண்ணும் உணவைப் போல், பருகும் நீரைப் போல் இன்றியமையாது வேண்டப்படுகின்ற ஓர் இயற்கையான தேவையே பாலுறவு” (7) என்று பாலுறவின் முதன்மையைச் சுட்டுவர்.

  அந்த இயற்கையான பாலுணர்வு கோவலனிடம் மிகுந்திருப்பதனை நாம் காப்பியப் போக்கிலே காணமுடிகிறது. கண்ணகியிடம் அவன் பேசும் உலவாக்கட்டுரையும், மாதவியின் மீது அவன் கொண்ட காமத்தின் மிகுதியும் இதனை விளக்குவதாக அமைகின்றது.

  கோவலனின் பரத்தமை

  பிராய்டு பாலுணர்ச்சி சக்திக்கு லிபிடோ (Libido) எனும் இலத்தீன் சொல்லைச் சுட்டுகிறார். உளநரம்பு நோய்களுக்கு மூலக்காரணியாகப் பாலுணர்ச்சி இருப்பதையறிந்த பிராய்டு உள இயக்கங்களை விவரிக்கும் போது, அதை உள ஆற்றலாகக் கொண்டு லிபிடோ என்னும் பெயரில் விவரிக்கின்றார்.

  லிபிடோ எனும் இலத்தீன் சொல்லிற்கு வேட்கை என்று பொருள். குறிப்பாகப் பாலியல் வேட்கை என்று பொருள்படும். இந்த வேட்கை பாலுணர்ச்சியின் முக்கியப் பண்பாக விளங்குகிறது” (8) என்று குறிப்பிடுவர்.

  கோவலனின் அறிமுகத்தின் போது
  மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
  பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
  கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கிக்காதலால்
  கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் (மங்கலவாழ்த்துப்பாடல் 36 - 39)

  என்று குறிப்பிடுவதின் வழி பெண்களுக்கும், அவனுக்கும் இருந்த தொடர்பினை அறியமுடிகிறது. மேலும்;

  நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துத்
  குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
  திரிதரு மரபிற் கோவலன் போல
  இளிவாய் வண்டினொ டின்னிள வேனிலொடு
  மலய மாருதம் திரிதரு மறுகில் (இந்திரவிழவூரெடுத்தகாதை 199-203)

  என்ற அடிகளில் கோவலன் சுற்றித் திரிவது போல மலயமாருதம் சுற்றித் திரிந்தது என்ற கருத்து அவனது பரத்தமைத் தன்மையை விளக்குகிறது எனலாம்.


  கண்ணகியிடத்து அவனது வேட்கை

  கோவலனின் பாலியல் வேட்கை குறித்து பேராசிரியர் ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் “இன்ன நலம் பலவும் உடையனாயினும் இக்கோவலன் கண்ணகி பாற்றீராக் காதற் காமம் கொண்டு அவளது நலம் புனைந்து பாராட்டியும் ஓதுவதை நோக்கின் பெருங்காமத்தான் என்பது புலனாகிறது” (9) என்று குறிப்பிடுவார்.

  தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்
  தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
  கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை (மனையறம் படுத்த காதை 35-37)

  என்ற அடிகளில் தாரும் மாலையும் மயங்கி இன்புற்ற பின்னரே கோவலன் கண்ணகியை பலபடப் பாராட்டுகின்றான். பாராட்டிய பின்னர் மீண்டும் கூடி மகிழ்ந்த தன்மையை

  உலவாக் கட்டுரை பலபாராட்டித்
  தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
  வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள் (மனையறம் படுத்த காதை 81-83)

  என்ற அடிகள் உணர்த்துகின்றன.

  “பாலுணர்வும் காதலும் நாணயத்தின் இருபகுதிகள் போன்றன. காதல் உணர்வை வெளியிடுவதற்குப் பாலுணர்ச்சி துணை புரிகிறது. காதலுணர்ச்சியின்றி மனநிறைவு தரும் பாலுணர்ச்சி இல்லை. பாலுணர்ச்சியின்றி உண்மைக் காதலுணர்ச்சி இல்லை. இவ்விரு உணர்ச்சிகளும் இயற்கையின் உந்துதலால் ஆனவை” (10) என்பர். ஆனால் கோவலனின் வார்த்தைகளில் காமம் வெளிப்படும் அளவிற்குக் காதல் புலப்படவில்லை என்பதனை அதனை வாசிப்போர் புரிந்து கொள்ள இயலும்.

  ஊடலும் கூடலும்

  மனிதனுடைய செயல்கள் அனைத்திற்கும் பாலுணர்வே அடிப்படை என்பதனை “மனிதனின் உளவாழ்வுக்குப் (mental life) பாலுணர்ச்சியே ஆதாரமாகும். அவனின் தனித்த குணங்கள்(individual characters), குடும்ப உறவுகள்(social relations), சமுதாய உறவுகள்(family relations) ஆகிய அனைத்தும் பாலுணர்ச்சி அடிப்படையில்தான் நிகழ்கின்றன. மேலும் உளவாழ்வின் உந்து சக்தியாக பாலுணர்ச்சி விளங்குகிறது” (11) என்பர். கோவலன் கண்ணகி இடத்தும் மாதவி இடத்தும் காமம் மிகுந்தவனாகவே காணப்படுகின்றான்.

  ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
  கூடி முயங்கப் பெறின்

  என்பது வள்ளுவர் வாக்கு. காதலர் தமக்குள் ஊடல் கொண்டு, பின் இணையும் போதே முழுமையான இன்பம் பிறக்கும் என்பது வள்ளுவர் கருத்து. ஆனால் சிலம்பில் பல இடங்களில் கூடல் அதன் பின்னர் தான் ஊடல் சுட்டப்படுகிறது.

  கூடலும் ஊடலும் கோவலற்களித்து (கடலாடு காதை 109)

  கலவியும் புலவியும் காதலர்க்களித்து
  அந்திமாலை (சிறப்புச்செய் காதை 32)

  இது கோவலனின் குறைபாட்டினைச் சுட்டுகிறது எனலாம்.

  குற்றவுணர்ச்சி (Guilty Conciousness)

  குற்றவுணர்ச்சி என்பதனை “சூப்பர் ஈகோ என்று சொல்லப்படும் அதி தன்முனைப்பு அல்லது மனசாட்சியின் கட்டளையை நிறைவேற்ற முடியாததாலோ அல்லது அதை மீறி நடப்பதாலோ உண்டாகும். தான் தவறு செய்து விட்டோம் என்று நினைக்கும் ஒரு மனோபாவம்” (12) என்பர். இந்தக் குற்றவுணர்ச்சியைக் கோவலனிடத்து வெளிப்படுவதனைப் பல இடங்களில் காணமுடிகிறது.

  கானல்வரிப் பாடலால் மாதவியைப் பிரிந்த பின்னர் கோவலன் கண்ணகியிடம் திரும்புகிறான். அவளது மேனி வாட்டம் கொண்டு இருப்பதனைக் கண்ணுற்று

  வாடிய மேனி வருத்தங்கண்டு யாவும்
  சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
  குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
  இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன (கனாத்திறம் உரைத்த காதை 68-71)

  என்று குறிப்பிடுவது அவனுடைய குற்றவுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது எனலாம். அக்குற்றவுணர்ச்சியின் விளைவினாலேயே அவன் பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும், யாரிடமும் கூறாமல், நடு இரவில் மனைவியை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு பொருள் தேடும் பொருட்டு மதுரையை நோக்கிச் செல்கின்றான்.

  கொலைக்களக் காதையில் அவனது குற்றவுணர்வு முழுமையும் புலப்படுகிறது.

  மையீரேதியை வருகெனப் பொருத்திக்
  கல்லதர் அத்தம் கடக்க யாவதும்
  வல்லந கொல்லோ மடந்தைமெல் அடியென
  வெம்முனை அருஞ்சுரம் போந்தற் கிரங்கி
  எம்முது குரவர் என்னுற்ற னர் கொல்?
  மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ
  யானுளங் கலங்கி யாவதும் அறியேன்
  வறுமொழி யாளரோடு வம்பப் பரத்தரொடு
  குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
  பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்
  நச்சுக் கொன்றேற்கு நன்னெறி யுண்டோ?
  இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்
  சிறு முதுகுறைவிக்குச் சிறுமையும் செய்தேன்
  வழுஎனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
  எழுகென எழுந்தாய் என்செய்தனையென (கொலைக்களக் காதை 56-70)

  இவ்வரிகள் கோவலனின் குற்றவுணர்வினை வெளிக்காட்டுவதாக அமைகின்றன.

  “ஒருவரிடம் தான் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம் உருவாவதற்கும் பின்னணியாகக் குற்றவுணர்வு அமைகிறது. அகநிலையில் குற்றவுணர்வே தண்டிப்பதை எதிர்பார்க்கிறது. நனவிலிக்குள் பொதிந்துள்ள உணர்வுகளில் குற்றவுணர்வு ஒன்று என ஃப்ராய்ட் கூறுகிறார்.” (13)

  சிலப்பதிகாரத்தில் கோவலன் காணும் கனவு இடம் பெறுகிறது.

  கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்
  காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
  நாறுஐந் கூந்தல் நடுங்குதுயர் உய்தக்
  கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
  அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
  பிணிப்பறுத் தோர்தம் பெற்றி எய்தவும்
  மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
  காமக் கடவுள் கையற்றேங்க
  அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
  மணிமேகலையை மாதவி அளிப்பவும்
  நனவு போல நள்ளிருள் யாமத்துக்
  கனவு கண்டேன் (அடைக்கலக்காதை 95-106)

  இந்த அடிப்படையில் கோவலனின் கனவு அவனது தண்டிப்பு விழைவின் வெளிப்பாடே எனலாம்.


  அவமானம்

  குற்றவுணர்வும் வருத்தமும் நெருங்கிய தொடர்புடையது எனலாம். கிரிஸ்டியன் ஹெயின்ரத் (Christian Heinroth, 1733 - 1843) என்பவர் வருத்தம் (Melencoly) பற்றிச் சிந்தித்தவர் ஆவார். “மனிதனது வருத்ததிற்குப் பின் புலமாகக் குற்றவுணர்வு (guilt) இருக்கிறது. அந்த உணர்வு இருப்பது நோயாளிக்குத் தெரியாது. அதாவது நோயாளியின் நனவு அறியாத நிலையில் அவனுக்குள்ளேயே குற்றவுணர்வு இருக்கிறது. அந்த குற்றவுணர்வு தான் வருத்தமாக வெளிப்படுகிறது” (14) என்பர். இந்தக் குற்றவுணர்வும் வருத்தமுமே அவமான உணர்வினை ஏற்படுத்துகின்றன.

  கோவலன் தன்னுடைய நடவடிக்கைகளுக்காக அவமானம் கொள்கின்றான். அதன் விளைவினாலே பெற்றோர்கள், நண்பர்கள் யாரிடமும் கூறாமல் மதுரைக்கு இழந்த பொருட்களை மீட்கச் செல்கின்றான். பொற்கொல்லனிடம் சிலம்பை விற்கக் கொடுத்த நிலையிலும் தன்னுடைய குலத்தைப் பற்றி அவன் குறிப்பிடவே இல்லை. அவன் தன்நிலை குறித்து அவமானம் கொண்டதனாலேயே அவ்வாறு செயல்பட்டான் எனலாம்.

  பொறாமை

  உயிரிகளிடம் காணப்படும் இருபாலினத் தன்மைக்கு (Androgyny) இங்கு பின்வரும் விளக்கத்தினைக் கொடுத்துள்ளார். ஆண்களிடம் அமைந்துள்ள பெண்மைப் பண்புகளை இங்கு அனிமா (Anima) என்றும் பெண்களிடம் அமைந்துள்ள ஆண்மைப்பண்புகளை அனிமஸ் (Animus) என்றும் குறிப்பிட்டார்.

  பொதுவாக ஊடுதல் என்பது மங்கையர்க்கான இயல்பு. ஆனால் கோவலனிடம் அந்த ஊடும் பண்பினைக் காணமுடிகிறது.

  மாதவி இந்திரவிழாவில் நடனம் ஆடுகிறாள். அவளது நடனத்தைக் கண்டு அனைவரும் அவளைப் புகழ்கின்றனர். கோவலனால் அதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதனால் ஏற்பட்ட பொறாமையின் விளைவாலேயே அவளுடன் ஊடல் கொள்கின்றான். இதனை

  ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
  ஊடல் கோலமொடு இருந்தோன் உவப்ப (6-74 75)

  என்ற அடிகள் உணர்த்துகின்றன.

  அவனது மனநிலையை மாற்றுவதற்காகவே மாதவி அவனுடன் செல்கிறாள். இந்த இடத்தில் அவர்கள் இருவர்க்கும் இடையில் ஏற்கனவே ஊடல் இருந்தமையை கானல்வரிப் பாடல் புலப்படுத்துகின்றது.

  கானல்வரிப்பாடல் முடிந்த பின்னர்
  பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழுதுமென்று (கானல் வரி 52)

  என்று கோவலன் அழைத்த போது, மாதவி உடன் எழுந்து செல்லவில்லை. அஃது அவனுக்கு மனத்துன்பத்தைத் தருகிறது. இதனாலேயே எழுக என எழுந்தாய் என்று கண்ணகியைப் பாராட்டுகிறான். சலதியோடு ஆடி என்று மாதவியை இழிவாகப் பேசுகின்றான். அவனுள் இருந்த பொறாமையே அவனது இயல்பினை மாற்றியது எனலாம்.

  கௌரவம்

  கோவலன் தன்னுடைய பொருட்களை எல்லாம் தொலைத்து விடுகிறான். இழந்த பொருளினை திரும்பவும் மீட்பதற்காகக் கண்ணகியை உடன் அழைத்துக் கொண்டு மதுரை மாநகர் நோக்கிச் செல்கின்றான். அவனுடைய தந்தை மாசாத்துவான். மிகப் பெரிய செல்வந்தர். அவரை அறியாதவர்கள் இருக்க இயலாது. அவருடைய மகன் என்று கோவலன் கூறிச் சென்றால், அவனுக்கு மதுரையில் உள்ள வணிகர்கள் உதவி இருப்பர். ஆனால் நல்ல நிலையில் இருந்து நிலை மாறிய கோவலன், அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை. கவுந்தியடிகளும் மாடலனும் கோவலனை வணிகரிடத்து செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர். இதனை

  அறத்துறை மாக்கட்கு அல்ல திந்தப்
  புறச் சிறை யிருக்கை பொருந்தா தாகலின்
  அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்
  உரையின் கொள்வரிங்கு ஒழிகநின் இருப்புக்
  காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
  மாடமதுரை மாநகர் புகுகென
  மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும்
  கோவலன் தனக்குக் கூறுங் காலை (அடைக்கலக்காதை 107-114 )

  என்னும் அடிகள் விளக்குகின்றன.

  ஆயினும், அவனது கௌரவம் இடம் கொடுக்காததனாலேயே கண்ணகியை ஆயர்குலப் பெண்களிடம் விட்டுவிட்டு அவன் மட்டும் காற்சிலம்பை விற்கச் செல்கின்றான்.

  கோவலனின் வாழ்வியல் நிகழ்வுகளைக் காணும் நிலையில் கண்ணகியை விட்டு விட்டு, அவன் மாதவியிடம் சென்றதனால் மட்டும் ஏற்பட்ட சிக்கல்களாக அவை தோன்றவில்லை. ஒரு ஆண் பலரை மணப்பது என்பது அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஆயினும் கோவலன் கண்ணகியை முழுதாகப் பிரிந்து, மாதவியிடம் இருந்த நிலை ஒன்றே சிக்கலாக அமைகிறது. சமூக ஏற்புக்கு ஏற்ப அவன் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பிய நிலையில், அவனது மனத்தடுமாற்றங்கள் அவனது ஆளுமையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே காப்பியத் தொடக்கத்தில் கோவலனின் செயல்பாடுகள் அவனைப் புறமுகத்தன்மை கொண்டவனாக அடையாளப்படுத்துகின்றன. ஆனால் காப்பியப் போக்கில் அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் அவனது புறமுகத்தன்மையை இழக்கச் செய்கின்றன. ஆகவே அவன் அகமுகத்தன்மையையும் கொண்டு, இரண்டிற்கும் இடைப்பட்ட ஆளுமை கொண்டவனாக மாற்றம் பெறுகிறான் என்பதனை மேற்சுட்டப்பட்ட கருத்துகள் வழி அறியமுடிகிறது.

  அடிக்குறிப்புகள்

  1. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி 1 ப. 66

  2. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி 1 ப.66

  3. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி 1 ப.67

  4. தி. கு. இரவிச்சந்திரன், உணர்வெழுச்சிகள் ப.32

  5. தி. கு. இரவிச்சந்திரன், உணர்வெழுச்சிகள் ப.28

  6. பெருதியாகராசன், சங்கக் குறிஞ்சித் திணைப்பாடல்கள் ஒரு மதிப்பீடு ப.92

  7. சகரியா பூனன், பால்உணர்வும் திருமணமும் ப. 16

  8. தி. கு. இரவிச்சந்திரன், சிக்மணட் பிராய்டு உளப்பகுப்பாய்வு ப.151

  9. பேராசிரியர் ஔவை துரைசாமிப்பிள்ளை, சிலப்பதிகார ஆராய்ச்சி ப.2

  10. இர.மனுவேல், தற்காலத்தமிழ்ச் சமூக நாவல்களில் பாலுணர்வு பக்-12-13

  11. தி. கு. இரவிச்சந்திரன், சிக்மணட் பிராய்டு உளப்பகுப்பாய்வு ப.150

  12. சந்திரமோகன், சிந்தனையாளர் பிராய்டு ப.151

  13. தி. கு. இரவிச்சந்திரன், சிக்மணட் பிராய்டு உளப்பகுப்பாய்வு ப.364

  14. தி. கு. இரவிச்சந்திரன், சிக்மணட் பிராய்டு உளப்பகுப்பாய்வு ப.122.

  *****


  இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

  இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p94.html
  

    2024
    2023
    2022
    2021
    2020
    2019
    2018
    2017


  வலையொளிப் பதிவுகள்
    பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

    எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

    சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

    கௌரவர்கள் யார்? யார்?

    தமிழ் ஆண்டுப் பெயர்கள்

    பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

    வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

    பண்டைய படைப் பெயர்கள்

    ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

    மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

    மரம் என்பதன் பொருள் என்ன?

    நீதி சதகம் கூறும் நீதிகள்

    மூன்று மரங்களின் விருப்பங்கள்

    மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

    மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

    யானை - சில சுவையான தகவல்கள்

    ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

    புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

    நான்கு வகை மனிதர்கள்

    தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

    மாபாவியோர் வாழும் மதுரை

    கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

    தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

    குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

    மூன்று வகை மனிதர்கள்

    உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


  சிறப்புப் பகுதிகள்

  முதன்மைப் படைப்பாளர்கள்

  வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


  சிரிக்க சிரிக்க
    எரிப்பதா? புதைப்பதா?
    அறிவை வைக்க மறந்துட்டானே...!
    செத்தும் செலவு வைப்பாள் காதலி!
    வீரப்பலகாரம் தெரியுமா?
    உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
    இலையுதிர் காலம் வராது!
    கண்ணதாசனின் நகைச்சுவைகள்
    குறைச்சுத்தான் எடை போடறாரு...!
    அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
    குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
    இடத்தைக் காலி பண்ணுங்க...!
    சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
    மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
    மாபாவியோர் வாழும் மதுரை
    இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
    ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
    அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
    ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
    கவிஞரை விடக் கலைஞர்?
    பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
    கடைசியாகக் கிடைத்த தகவல்!
    மூன்றாம் தர ஆட்சி
    பெயர்தான் கெட்டுப் போகிறது!
    தபால்காரர் வேலை!
    எலிக்கு ஊசி போட்டாச்சா?
    சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
    சம அளவு என்றால்...?
    குறள் யாருக்காக...?
    எலி திருமணம் செய்து கொண்டால்?
    யாருக்கு உங்க ஓட்டு?
    வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
    கடவுளுக்குப் புரியவில்லை...?
    முதலாளி... மூளையிருக்கா...?
    மூன்று வரங்கள்
    கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
    நான் வழக்கறிஞர்
    பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
    பொழைக்கத் தெரிஞ்சவன்
    காதல்... மொழிகள்
  குட்டிக்கதைகள்
    எல்லாம் நன்மைக்கே...!
    மனிதர்களது தகுதி அறிய...
    உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
    இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
    அழுது புலம்பி என்ன பயன்?
    புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
    கடவுளைக் காண உதவும் கண்ணாடி
    தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
    உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
    ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
    அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
    கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
    எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
    சிங்கத்திற்கு வாழைப்பழம்!
    வலை வீசிப் பிடித்த வேலை
    சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
    இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
    கல்லெறிந்தவனுக்கு பழமா?
    சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
    வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
    ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
    அக்காவை மணந்த ஏழை?
    சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
    இராமன் சாப்பாட்டு இராமனா?
    சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
    புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
    பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
    தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
    கழுதையின் புத்திசாலித்தனம்
    விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
    தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
    சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
    திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
    புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
    இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
    ஆணவத்தால் வந்த அழிவு!
    சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
    சொர்க்க வாசல் திறக்குமா...?
    வழுக்கைத் தலைக்கு மருந்து
    மனைவிக்குப் பயப்படாதவர்
    சிங்கக்கறி வேண்டுமா...?
    வேட்டைநாயின் வருத்தம்
    மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
    கோவணத்திற்காக ஓடிய சீடன்
    கடவுள் ரசித்த கதை
    புத்தர் மௌனமாக இருக்கலாமா?
    குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
    சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
    தேங்காய் சிதறுகாயான கதை
    அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
    அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
    கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
    சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
    அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
    விமானத்தில் பறந்த கஞ்சன்
    நாய்களுக்கு அனுமதி இல்லை
    வடைக்கடைப் பொருளாதாரம்
  ஆன்மிகம் - இந்து சமயம்
    ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
    தானம் செய்வதால் வரும் பலன்கள்
    முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
    பிரதோஷம் எப்படி விஷேசமானது?
    விநாயகர் சில சுவையான தகவல்கள்
    சிவராத்திரி விஷேசமானது ஏன்?
    முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
    தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
    கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
    எப்படி வந்தது தீபாவளி?
    தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
    ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
    ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
    அனுமனுக்கு வடை மாலை ஏன்?
    திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
    விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
    கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
    சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
    முருகா என்றால் என்ன கிடைக்கும்?
    குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
    விபூதியின் தத்துவம்
    கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
    தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
    கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
    இறைவன் ஆடிய நடனங்கள்
    யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
    செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
    கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
    விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
    இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
    நவராத்திரி பூஜை ஏன்?
    வேள்விகளும் பலன்களும்
    காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
    பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
    அம்பலப்புழா பால் பாயாசம்
    துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
    சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
    ஈசன் உபதேசித்தத் தலங்கள்
    பரமபதம் விளையாட்டு ஏன்?
    வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
    பதின்மூன்று வகை சாபங்கள்
    இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
    சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
    பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
    சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
    உணவு வழித் தோசங்கள்
    திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
    மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
    பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
    நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
    சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
    மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
    இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
    பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
    கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
    அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
    தீர்க்க சுமங்கலி பவா


  தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                          


  இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
  Creative Commons License
  This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License