சங்க இலக்கியத்தில் மடலேற்றம்
முனைவர் பா. பொன்னி
பழக்கம் என்பது ஒரு கற்கும் செயல் ஆகும்.பழக்கம் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறாகக் கருதப்படுகிறது. நனவுடன் தொடங்கப்பட்ட செயல் நாளடைவில் நனவின்றியே நிகழக்கூடியதாக ஆகிவிடும் செயலையே பழக்கம் என்பர். பழக்கத்தின் தொடர்ந்த நிலையே வழக்கமாகும். வழக்கம் சமூகம் சார்ந்த ஒன்றாகும். சமூகத்தில் அதிகமாகப் பின்பற்றப்படும் பழக்கமான நடவடிக்கையே வழக்கமாகும். பழக்க வழக்கங்களைத் தனி மனிதனும், சமுதாயம் என்ற அமைப்பும் இணைந்து உருவாக்குகின்றன. மக்களின் தேவைகளின் அடிப்படையிலேயே பழக்கங்கள் தோன்றுகின்றன. அவை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலையில் வழக்கங்களாக உருப்பெறுகின்றன. தனி மனிதப் பழக்கங்களே நாளடைவில் சமுதாய வழக்கங்களாக உருப்பெற்று வழிவழியாக நிலைத்து வாழ்வு பெறும் நிலையில் மரபுகளாக மாறுகின்றன. அவ்வகையில் சங்ககாலத்தில் வழக்கில் இருந்த மடலேற்றத்தினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
மடல்
ஓர் ஆண் ஒரு பெண்ணைக் களவுடனோ களவின்றியோ அடையும் முறையாக மடலேறுதலைக் குறிப்பிடலாம். காமம் மிக்க தலைவன் பனை மடலால் குதிரையைப் போல் ஓர் உருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையில் ஏந்தி அதன் மேல் யாவரும் அறிய ஊர்ந்து வருதலை மடலேறுதல் என்பர். அங்ஙனம் அவன் வருதலைக் கண்ட ஊரினர் இன்னவளுக்கும் அவனுக்கும் நட்பு உண்டு என்பதனை அறிந்து அதனை வெளிப்படக் கூறிப் பழிப்பர். அது கேட்டுத் தமர் மணம் புரிவிப்பர். இதுவே மடலேறுதல் ஆகும்.
தன்னுடைய காதல் நிறைவேறுவதற்காக இது போன்ற வழிமுறைகளை மக்கள் கையாளுவதனைப் பிற நாடுகளிலும் காணமுடிகிறது. மியான்மர் (பர்மா) நாட்டில் ஒரு குறிப்பிட்டப் பெண்ணை அடைய விரும்பும், ஒரு வாலிபன் புல்லாங்குழலையோ, பிடிலையோ வாசித்துக் கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு முன்பாகப் போய் நிற்பதும் உலவுவதுமாக இருப்பான். இரவு நேரத்தில் அதுவும் நிலாக்காலங்களில் தான் இந்தச் செயல் நடைபெறும். பெண் வீட்டார் உறங்கி விட்டால் வீட்டில் கற்களை எறிந்து வீட்டுக்காரர்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்புவதும் உண்டு. அவன் வாசிக்கும் கீதத்தையும், அந்த கீதத்தின் அந்தரங்க நோக்கத்தினையும் வீட்டார் அறிய வேண்டும் என்பதே அவனுடைய குறிக்கோள்.
தொல்காப்பியம் சுட்டும் மடல்
தொல்காப்பியத்தில் இம்மடலேறுதல் சுட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியர் அகத்திணையுள் பெருந்திணையுள் இம்மடலேறுதலைச் சுட்டுகிறார்.
"ஏறிய மடல்திறம் இளமைதீர் திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே" (தொல்.அகத் - 54)
என்ற நூற்பா இதனை விளக்கும்.
ஆயினும் களவியலில் தலைவனது கூற்று நிகழும் இடங்களையும் காதல் மிகுதியினால் ஆற்றாத தலைவனது இயல்பினையும் குறிப்பிடும் போது;
"மடல்மா கூறும் இடனுமார் உண்டே" (தொல் .களவியல் - 99)
என்று தலைவனுக்கு உரிய இயல்புகளுள் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார். ஏறிய மடல் திறம் என்று மடல் ஏறியதாகக் குறிப்பிட்டால், அது பெருந்திணைக்கு உரியது எனலாம். மடல் ஏறுவேன் என்று கூறி மடல் ஏறும் நிகழ்வு நடைபெறாது இருந்தால், அது ஐந்திணைக்கு உரியது என்று கொள்ளலாம்.
சங்க இலக்கியத்தில் மடல்
சங்க இலக்கியத்தில் மடல் குறித்த 16 பாடல்களைக் காணமுடிகிறது. குறுந்தொகையில் 14, 17, 32, 173, 182 ஐந்து பாடல்களும், நற்றிணையில் 146, 152, 220, 342, 377 ஆகிய ஐந்து பாடல்களும், மடல் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. கலித்தொகையில் 58, 61, 138, 139, 140, 141 ஆகிய ஆறு பாடல்களிலும் மடல் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகிறது.
மடல் ஏறும் சூழல்
தொல்காப்பியர் களவியலில் தலைவனுக்கு உரிய பண்புகளைச் சுட்டிச் சொல்கிறார். தலைவனின் பண்புகளாக
"பெருமையும் உரனும் ஆடூஉ மேன"
(தொல்.களவியல் -நூ.7)
என்று குறிப்பிடுகிறார்.
இதற்கு உரை எழுதும் இளம்பூரணர் பெருமையாவது பழியும் பாவமும் அஞ்சுதல். உரன் என்பது அறிவு என்று விளக்கம் தருகிறார். இத்தகைய சிறப்பு உடைய தலைவன் எத்தகைய சூழலில் மடலேறுவேன் என்று கூறுகிறான் என்பதனை ஆராய வேண்டியுள்ளது.
* தலைவன் தன் குறை மறுக்கப்பட்ட சூழல்
* தான் மட்டுமே விரும்பி தன்னை விரும்பாத பெண்ணை அடைய விரும்பும் சூழல்
போன்ற சூழலில் தலைவன் மடலேறத் துணிகின்றான்.
குறைமறுக்கப்பட்ட சூழல்
தலைவனின் குறையை தோழி மறுக்கின்ற சூழலில் தலைவன் மடலேறுவேன் என்று கூறுவது உண்டு. இப்பொருளில் குறுந்தொகையில் உள்ள ஐந்து பாடல்களும் நற்றிணையில் உள்ள 146, 152, 377 ஆகிய பாடல்களும் குறை மறுக்கப்பட்ட சூழலில் தலைவன் கூற்றாக அமைந்துள்ளன. குறுந்தொகை 14 ஆம் பாடலில் தலைவன் வெளிப்படையாக மடலேறுவேன் என்று கூறுவது போல் அமையவில்லை. துறை அவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது.
"அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே" - தொல்கபிலர்
(குறுந் - 14)
இப்பாடல் அடிகளில் பெறுகதில் அம்ம யானே என்பதற்கு மடல் ஊர்ந்தாகிலும் தலைவியை அடைவேன் என்ற குறிப்புப் பொருள் காணப்படுவதாக துறை வகுத்தவர்கள் குறிப்பிட்டுள்ளமையை மடன்மா கூறும் இடனுமாருண்டே என்பதனால் தோழி குறை மறுத்துழித் தலைமகன் மடலேறுவேன் என்பது படச் சொல்லியது என்பதனால் அறிய முடிகிறது.
தலைவன் விரும்பி தலைவி விரும்பாத சூழல்
தலைவன் தலைவியை விரும்பி, தலைவி விரும்பாத சூழலிலும் தலைவன் மடலேறி தலைவியை அடைய முயற்சி செய்வதனைப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. தலைவன் தோழியிடம் குறைநோ்ந்த பின், தோழி தலைவியிடம் அவன் நிலையை உடைக்கின்றாள். ஆனால் தலைவி விருப்பம் இன்றி இருக்கும் நிலையை
"மா என மதித்து மடல் ஊர்ந்து ஆங்கு
மதில் என மதித்து வெண்தோ் ஏறி
என்வாய் நின் மொழி மாட்டேன் நின்வயின்
சேரி சேரா வருவோர்க்கு என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்" - மோசிகீரனார்
(நற் - 342)
என்ற பாடல் அடிகளால் அறியமுடிகிறது. தலைவி விருப்பம் கொள்ளாமல் தலைவன் தான் மட்டும் காமநோயால் வருந்துவதாகக் குறிப்பிடுவதனை
"தேமொழி மாதர் உறாஅது உறீஇய
காமக் கடல் அகப்பட்டு"
(கலி-139 16-17)
என்ற அடிகளால் அறிய முடிகிறது.மேலும்;
"வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள்"
(கலி - 141 12-14)
என்று தலைவியை நிந்திக்கும் தன்மையையும் காணமுடிகிறது. ஆகவே தலைவிக்கு விருப்பம் இல்லாச் சூழலிலும் தலைவன் மடலேறி தலைவியை அடைந்தமையை அறிய முடிகிறது. தலைவன் மடலேறியமையைக் கண்டு இரங்கி, தலைவி தன் இசைவைத் தெரிவித்தமையை
"அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின்
துன்பத்தில் துணையாய மடல் இனி இவள் பெற
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள்"
(கலி - 138 27-29)
என்ற அடிகள் தலைவி தன் இசைவைத் தெரிவித்தமையை விளக்குகின்றன.
மடல்ஏறும் முறைமை
குறுந்தொகை 17ஆம் பாடல் தலைவன் மடலேறும் முறைமையைக் குறிப்பிடுகிறது.
"மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே". - பேரெயின் முறுவலார் (குறுந்-17)
காமநோய் முதிர்வுற்றால் பனை மடலையும் குதிரையாகக் கொண்டு ஆடவர் அதன் மேல் ஊர்வர். குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூவினைத் தலையில் சூடும் மாலையாகக் கொள்வர். தெருவில் பலராலும் தூற்றி ஆரவாரிக்கவும் படுவர். அப்படியும் தம் கருத்து நிலைபெறவில்லை என்றால் வரைபாய்தல் முதலிய வேறு செயல்களையும் செய்வர்.
தலைவனின் தோற்றம்
மடலேறும் தலைவன் எருக்க மாலை ஆவிரம் பூ மாலை முதலியவற்றை அணிந்து வருதல் வழக்கமென்று உ. வே. சா. அவர்கள் குறிப்பிடுவார்.
"மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப" (குறுந் - 17)
என்ற பாடல் அடிகளில் பனை மடலால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி எருக்கம் பூவினைச் சூடியமையை அறியமுடிகிறது.
"பெருந்தார் மார்பிற் பூட்டி
வெள்ளென் பணிந்து பிறர் எள்ளற்தோன்றி" (குறு - 182 2-3)
என்ற அடிகளால் தலைவன் எலும்பு மாலையை அணிந்தமையை அறிந்து கொள்ள முடிகிறது.
"பொன்னோ் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமா
பூண்மணி கறங்க" (குறுந் 173 1-3)
என்ற பாடல் அடிகளால் ஆவிரை பூவினைச் சூடியமையையும், குதிரையின் கழுத்தில் மணி கட்டியமையையும் அறிய முடிகிறது.
"பூவல்ல பூளை யுழிஞையோ டியாத்த" (கலி -139)
"அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் கண்ணி" (கலி 138 8-10)
மேற் சுட்டிய அடிகளின் வாயிலாக எருக்கம் பூ, ஆவிரைப் பூ, உழிஞைப் பூ, பூளைப் பூ போன்ற பூக்களைச் சூடியமையை அறிய முடிகிறது.
தலைவனின் செயல்
மடலேறும் தலைவன் தலைவிக்குப் பழி உண்டாகும் செயலைக் செய்ய இருப்பதாகக் கூறுவதனை
"இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படுபழியே" (கலி 58 - 22-23)
என்ற அடிகளால் இதனை அறியமுடிகிறது.
"பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ
என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக
நன்னுதல் ஈத்த இம் மா?" (கலி- 140 13-16)
என்ற அடிகளால் தலைவன் மடலில் அமர்ந்து பாடவும், மா அசையுமாறு ஆடவும் தயாராக இருக்கும் தன்மையை அறியமுடிகிறது.
அவன் இத்தகைய செயலைப் புரியும் போது ஊரார் அமைதியாக இருப்பின் தன்னுடைய நோக்கத்திற்குத் துணை செய்வதனை, அவர்களுடைய அறமாகக் கூறுவதனை
"உயர்நிலை உலகம் உறீஇயாங்கு என்
துயர் நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே" (கலி 139 36-37)
என்ற அடிகளால் அறியலாம்.
"இருளுறு கூந்தலாள் என்னை
அருளுறச் செயின் நுமக்கு அறனுமார் அதுவே" (கலி 140.33-34)
என்ற அடிகளும் இதற்குச் சான்றாக அமைகின்றன.
கண்டோர் செயல்
மடலேறும் முறையினை சங்க காலத்தவா் போற்றவில்லை.அதனை எள்ளி நகையாடவே செய்துள்ளனர்.
"விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி
வெள்ளென் பணிந்து பிறர் எள்ளற் தோன்றி" (குறு. 182 1-3)
என்ற பாடல் அடிகள் இதனை விளக்கி நிற்கின்றன.
"கண்டுங் கண்ணோடாதிவ் வூர்" (கலி 140 - 20)
"உணர்ந்தும் உணராதிவ்வூர்" (கலி 140 24)
"அறிந்தும் அறியாதிவ் வூர்" (கலி 140 - 29)
என்ற அடிகள் மக்கள் ஆதரவு தராத நிலையையே விளக்குகின்றன.
பெற்றோர் செயல்
தலைவியை அடையப் பெறாத நிலையில் தலைவன் மடலேறியதைக் கண்டு, பெற்றோர் மணம் புரிவித்தலும் உண்டு. கலித்தொகை 141 ஆம் பாடல் இதனை விளக்குகிறது. தலைவன் மடலேறி தலைவியைக் குறித்துப் பலவாறு பாடிய நிலையில் பாண்டிய மன்னனுக்கு அஞ்சி பகைவர் திறைப் பொருளைக் கொணர்ந்து அளிப்பது போல தம் குடிக்குப் பழுது நேரிடும் என்று அஞ்சி, அந்த இடத்திலேயே தலைவியை தலைவனுக்குக் கொடுத்தமையை
"வருந்த மா ஊர்ந்து மறுகின்கண்பாட
திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே
பொருந்தாதார் போர்வல் வழுதிக்கு அருந்திறை
போல கொடுத்தார் தமர்"
(கலி.140 22-25)
என்ற பாடல் அடிகள் விளக்குகின்றன.
பெண்கள் மடலேறாமை
பெண்கள் மடலேறக் கூடாது என்பதனை தொல்காப்பியர்
"எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான" (அகத்திணையியல்- 38)
என்ற நூற்பாவில் சுட்டுகிறார். இதன் மூலம் அச்சமூகம் மகளிர் மடலேறுவதனை விலக்கியது எனலாம்.
"நனவினான் ஞாயிறே காட்டாய் நீ
பனையீன்ற மாவூர்ந் தவன்வரக் காமன்
கணையிரப்பேன் கால்புல்லிக் கொண்டு" (கலி 147 58-60)
என்ற பாடல் அடிகளில் கலித்தொகைத் தலைவி ஒருத்தி மடல்ஊர்தல் குறித்துக் கூறுவதாக அமைக்கப் பட்டுள்ளது. தலைவன் வரைவிடைப் பிரிந்து பிரிவு நீட்டித்த போது, பிரிவாற்றாத தலைவி நாணுவரையிறந்து கலங்கி மொழிந்ததாகவும், அப்போது தலைவன் வரவே அவள் தெளிவடைந்ததாகவும், அக்காட்சியைக் கண்டோர் கூற்றிலே வைத்து இப்பாட்டு எழுதப்பட்டு இருப்பதாகவும் அதன் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், மடலேறுவதையே பொருளாகக் கொண்டு தலைவி கூற்றாகவே இப்பாடல் முழுவதும் அமையவில்லை. தலைவி மடலேறுவதாகக் கூறுவது அகப்பொருள் மரபு அன்று. ஆகவே தலைவி மடல் பற்றிப் பேசுவதாக மடடுமே இப்பாடல் அமைந்துள்ளது. பிற்காலத்தில் திருமங்கையாழ்வாரால் படைக்கப்பட்ட பெரிய திருமடல், சிறிய திருமடல் இரண்டும் தலைவி மடலூர்வதாகக் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணம் அதில் பாட்டுடைத்தலைவராக திருமால் படைக்கப்பட்டு இருப்பதே எனலாம்.
உளவியல் காரணம்
மனித உள்ளத்தில் காணப்படுகின்ற உணர்ச்சிகளை உளவியலார் வாழ்வுணர்ச்சிகள், சாவுணர்ச்சிகள் என்னும் இரண்டு வகையில் அடக்குவர். இன்பம் வந்தால் மகிழ்ச்சி அடைவதும், துன்பம் வந்தால் துவண்டு போவதும் மனித மனத்தின் இயல்பு. அதன் அடிப்படையிலேயே இவ்வகைப்பாட்டினை அமைத்துள்ளனர். பிராய்டு சாவுணர்ச்சி மனிதனின் உள்ளுணர்ச்சிகளுள் ஒன்று என்று குறிப்பிடுகிறார். இதன்படி மனிதனின் நனவிலிக்குள் வாழ்வுணர்ச்சிகள், சாவுணர்ச்சிகள் இரண்டும் உள்ளன. உடலியல் வாழ்விற்குத் தேவையான பசி, தாகம் இவையல்லாது, வாழ்க்கைக்கு எதிரான உணர்ச்சிகளான சாவு விழைவு (Death wish), மூர்க்கம் (Aggression), அழிப்பு அல்லது சிதைப்பு ( Destruction ) போன்றவை சாவுணர்ச்சிகளாகும் என்ற குறிப்பிடுவர்.
தாக்குதல் எண்ணம் ஒருவரிடம் இருப்பது இரண்டு வகைகளில் வெளிப்படலாம் என்பர்.
1. பிறரைத் தாக்கும் மனோபாவம்
2. தன்னைத் தானே தாக்கிக் கொள்ளும் மனோபாவம்
தன்னைத்தானே தாக்கிக் கொள்ளும் மனோபாவத்தின் போது தன் உடை, தோற்றம் முதலியவற்றில் அலட்சியம், பேச்சு, நடை, உடை பாவனைகளில் அக்கறையின்மை, தன்னைத் தானே ஓயாமல் கடிந்து கொள்ளும் மனோபாவம் ஆகிய செயல்பாடுகள் தோன்றும் என்று குறிப்பிடுவர். தன்னுடைய கருத்திற்கு ஒவ்வாதவரை எதுவும் செய்ய இயலாத போது, மனித மனம் தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள விரும்பும் என்று குறிப்படுவர். அவ்வகையில் மடலேறக் கூடிய தலைவனின் மனநிலை சாவுணர்ச்சியின் அடிப்படையில் இயங்குவதாகக் கொள்ள இடம் உள்ளது.
தலைவன் தலைவி மீது கொண்ட மிகுதியான அன்பினால், மடலேறியாவது தலைவியை அடைய வேண்டும் என்னும் அவனது எண்ணத்தின் வெளிப்பாடாகவே அம்மடலேறுதல் அமைந்துள்ளது. விருப்பம் இல்லாத பெண்ணை வற்புறுத்தி அடைவதும் அதன் நோக்கமாக அமைந்துள்ளது. தற்காலத்திலும விரும்பிய பெண்ணை அடைவதற்காகப் பல குறுக்கு வழிகளை ஆடவர் முயற்ச்சிப்பது உண்டு. அது மடலேறுதலின் வளர்ச்சிநிலை எனலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.