தொல்காப்பியம் - எழுத்துப்படலப் பேருரை - இராம.சுப்பிரமணியன் உரைத்திறன்
முனைவர் இரா. விஜயராணி
வடவேங்கடம் தென்குமரிஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகில் வாழும் மக்கட்குக் கிடைத்த முதல் இலக்கண நூல் என்ற முதுமையையும், இன்றைய நாளில் பெரிதும் வியந்து பேசுகின்ற மொழியியல், சமூகவியல், மானுடவியல், நிலத்தியல், சூழலியல் மற்றும் உயிரியல் போன்ற பல்வேறு துறைகட்கு வேண்டிய பின்னைய நவினக் கூறுகளையும் தம்முள் ஒருங்கே உடைய நூல்தான் தொல்காப்பியம் என்னும் அரும்பெரும் நூல் ஆகும்.
நூல் தோன்றிப் பலநூறு ஆண்டுகள் கடந்தமையின், நூல் நுவலும் செய்திகளை நுண்மாண் நுழைபுலத்துடன் பிழையற நாம் அறிந்து கொள்ள பெரிதும் துணை நிற்பது, பின்னாளில் அவ்வப்போது எழுதப்பட்ட உரையாசிரியரான இளம்பூரணர் தொடங்கி இன்றைய காலம் வரை பல உரையாசிரியர்கள் நூல் முழுமைக்குமோ, (நமக்குக் கிடைத்த) ஒரு சில பகுதிகட்கு மட்டுமோ உரை செய்து தம் புகழை ஆக்கம் செய்து கொண்டனர்.
நம் காலத்திய தமிழ்ச் சான்றோர்கள் சிலரும் தொல்காப்பியத்திற்கு உரை செய்துள்ளனர். அவர்களுள் பலராலும் அறியப்படாதவராய், ஆயின் யாவரும் அறிந்தேத்த வல்ல முதன்மைத் தன்மையதராய் விளங்கும் பெற்றியை உடையவராய் விளங்குபவர் இலக்கணச் செம்மல், தமிழ்வேள், பேராசிரியர் இராம.சுப்பிரமணியன் ஆவார். எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பெரும் பிரிவுகளையுடைய இந்நூலில் எழுத்திலக்கணத்திற்கு மட்டும் இவர் உரை செய்துள்ளார்.
மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆதலின், அந்நூலின்கண் பயின்று வரும் சொல்லாடல்களும், அவை உணர்த்தும் பொருளும் இன்றுள்ளார்க்குத் தெள்ளிதின் விளங்குதல் அரிதாம். ஆதலின்தான் அவ்வப்போது சில, பல உரைகள் தோன்றி நூலின் பயனை நமக்கு நுண்ணிதின் விளங்குகின்றன.
நூலிற்கு உரை செய்கின்ற மரபு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்திருத்தல் வேண்டும். இதனை,
“சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற
இன்றி யமையா தியைபவை எல்லாம்
ஒன்ற உரைப்பது உரையெனப் படுமே” (தொல்.பொருள்.649)
என்ற நூற்பாவின் வாயிலாகத் தொல்காப்பியரே பதிவு செய்வது கொண்டு அறியலாம். இவ்வாறு புணர்க்கப்படும் உரையைக் காண்டிகையுரை, விருத்தியுரை என்றே பெயர்வகை கொண்டார் பண்டைய வழக்கத்தினர். ஆனால் ஒரு நூலுக்குச் செய்த ஓர் உரையின் கண்ணே நூற்பா அமைந்த தன்மையைக் கொண்டு அதற்கு இயல்புரை, இயைபுரை, காலவுரை, என வகைப்படுத்தி உரைசெய்த பாங்கு பேராசிரியர் இராம.சுப்பிரமணியனையே சாரும்.
இயல்புரை
நூற்பாவிற்கு அப்பால் செல்லாமல் அதில் பயின்று வந்த சொற்களுக்கு உரிய பதவுரையையோ, பொழிப்புரையையோ மட்டும் கூறுவதை இயல்புரை எனலாம். இவ்வுரை யாவருக்கும் எளிதில் விளங்கும் தன்மையுடன் காணப்படும். வேறு சான்றுகளோ, விளக்கங்களோ தேவையிரா.
எழுத்துப்படலத்துள், பிறப்பியல் என்னும் இடத்தில் காணப்படுகின்ற உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் பிறக்கும் முறைமையைக் கூறும் நூற்பாக்களுக்கு அமைந்த உரையை இதற்குச் சான்று பகரலாம்.
“அவற்றுள்
அஆ ஆயிரண் டங்காந் தியலும்” (தொல்.எழுத்து.85)
“இஈஎஏ ஐயென இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோர் அன்ன
அவைதாம்
அண்பல் முதனா விளிம்புற லுடைய” (தொல்.எழுத்து.86)
“உஊ ஒஓ ஔவென இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும்” (தொல்.எழுத்து.87)
என்னும் நூற்பாக்களுக்கு முறையே, உயிரெழுத்துக்கள் பன்னிரண்டனுள் அகர ஆகாரங்களாகிய அவ்விரண்டெழுத்துக்களும் அங்காக்கப் பிறக்கும். இ, ஈ, எ, ஏ, ஐ. என்றொலிக்கப்படும் அவ்வைந்து பகுதிப்பட்ட எழுத்துக்களும் மேற்கூறிய அகர ஆகாரங்களைப் போல அங்காக்கப் பிறக்கும். அவை மேற்பல்லின் அடியினை நாவின் விளிம்பு பொருத்துதலை உடையன் உ, அ, ஊ, ஒ, ஓ, ஓள என்று ஒலிக்கப்படும் அவ்வைந்து பகுதிப்பட்ட எழுத்துக்களும் அங்காத்தலொடு இதழ்கள் குவியப் பிறக்கும் என இயல்பு உரை செய்துள்ளார் பேராசிரியர் இராம. சுப்பிரமணியன்.
இயைபுரை
ஆழ்ந்த புலமையே உடையவராயினும், அவர்களும் எளிதில் உணர்தல் பொருட்டு வேண்டிய விளக்கமும், மேற்கோளும், சான்றும் காட்டிச் செய்யும் உரையை இயைபுரை எனலாம். சான்றாக
“மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
உரியவை உளவோ புணர்நிலைச் சுட்டே” (தொல்.எழுத்து.112)
என்னும் நூற்பாவிற்கு, மரூஉத் திரளாகிய முன்பின்னாய் மயங்கிய இயல்பினையுடைய மொழியும் புணர்நிலைக் கருத்தின்கண் உரியன உள (ப.198) என இயல்புரை கூறிய இவர், இதனை மிகைகாய்க் கற்றாரும் உணர்தல் அரிதென அறிந்து, மரூஉ மொழியை இயலொடு பொருந்திய மரூஉ, இயலொடு பொருந்தா மரூஉ என வகை செய்து விளங்குகின்றார்.
ஆந்தை, பூந்தை, மீகண், முன்றில் - போல்வன இயலொடு பொருந்திய மரூஉக்கள் ஆகும். (ப.199)
கால உரை
வெவ்வேறு காலத்தில் உரைசெய்த உரையாசிரியர் பலரும் தத்தம் காலத்தில் வழக்கிருந்த சொற்றொடர்களையும், சான்றுகளையும் தத்தம் உரைகளில் காட்டியுள்ளனர். அந்நிலையில் பேராசிரியர் இரா. சுப்பிரமணியனும்,
“மகர விறுதி வேற்றுமை யாயிற்
றுவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே” (தொல்.எழுத்து.311)
என்ற நூற்பாவிற்கு மகர ஈற்றுப் பெயர்ச்சொல்லின் இறுதி மகரம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணாயின் முற்றக்கெட்டு வல்லெழுத்து மிக்கு முடியும்(ப.639) எனக் கூறுகின்றார். அந்நிலையில், “வட்டம்” என்னும் நிலைமொழியை அடுத்து “ஆட்சி” என்னும் சொல் வருமொழியாக வந்தால்,
வட்டம் + ஆட்சி (நிலைமொழி ஈறு கெட்டு)
வட்ட + ஆட்சி (என்றாகி, ஏனைய உயிர்வழி வவ்வும் - என்னும் விதியின்படி,
வட்ட + வ் + ஆட்சி = வட்டவாட்சி
என்றே புணர்ந்திருக்க வேண்டும். அந்நிலையிலேயே வட்டம் + ஆட்சியர் = வட்டவாட்சியர் எனவும், அடையொடு வருவதான மாவட்டம் + ஆட்சி = மாவட்டவாட்சி, மாவட்டம் + ஆட்சியர் = மாவட்டவாட்சியர் என்றே புணர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் மக்கள் வழக்கில் அச்சொற்கள் முறையே வட்டாட்சி, வட்டாட்சியர், மாவட்டாட்சி, மாவட்டாட்சியர் என்றே வழங்கி வருகின்றன. எனவே இந்நூற்பாவிற்கு மேலும் உரை விகற்பமாக, “ஆட்சி” வருங்கால் “வட்டம்” என்பதன் ஈற்று மகரத்தொடு அதனயல் கெடுதலும் ஈண்டே கொள்க (ப.641)
எனக் கூறுகின்றார். அதாவது,
வட்டம் + ஆட்சி
வட்ட + ஆட்சி
வட்ட் + ஆட்சி = வட்டாட்சி
என்றானது என்பார். முன்னர்ச் சொன்ன ஏனைய சொற்களும் இவ்வாறே வழக்கு பெற்றன எனக் கூறும் இவ்வுரைமாட்சி, நூல் பாயிரத்துள் பயின்றுவரும் “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்” என்னும் நிலையிலிருந்து வழுவாமல் உரை செய்துள்ளார் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
“இகர இறுபெயர் திரிபிடன் உடைத்தே”
என்னும் நூற்பாவிற்கு, உயர்திணைப் பெயர்களுள் இகர ஈற்றுப் பெயர்கள் திரிந்து முடியும் இடத்தினையும் உடையனவாகும் என உரை செய்து,
எட்டிச் சாத்தன், நம்பிப் பிள்ளை என்பனவற்றைச் சான்றுகளாகக் காட்டுவார் ஏனையோர்.
ஆனால் பேராசிரியர் இராம. சுப்பிரமணியனோ, இங்குக் காட்டிய எட்டி, நம்பி என்பன ஒருவர் பெறும் சிறப்புப் பட்டப் பெயர்கள்.
‘இடனுடைத்து’ என்றதனான் பெண்களுட் சிறந்தவர்க்கு வழங்கும் ‘நங்கை’ என்னும் ஐகார ஈற்றுப் பெயரும் மிக்கு முடிதல் கொள்ள வேண்டும் என்பார்.
மேலும், பிற்காலத்து நம்பி, நங்கை என்பன உயர்திணைப் பெயர்களாயும், செட்டி என்பது இனப் பெயராயும் வழங்கலாயின. அவ்வாறு வழங்குமிடத்து இயல்பாகும் என்பதனை மறுத்தற்கில்லை.
நம்பி குறியன்
நங்கை குறியள்
செட்டி குறியன்
இவற்றுள் செட்டித் தெரு என்றால், செட்டி என்பது சிறப்புப் பெயர். செட்டி தெரு என்றால், செட்டி என்பது இனப் பெயர் எனப் பொருள்படும்.
இவ்வாறு தம் கால வழக்காற்றுச் சொற்களுக்கும் இலக்கணம் பயிற்றி உரைகூறலின் இவ்விடத்தைக் கால உரைக்குச் சான்று பகரலாம்.
உவமை கூறி உரை செய்தல்
உரை கூறும் முறைகளுள் பலருக்கும் எளிதில் புரிவதும், யாவருக்கும் உவகை செய்வதும் உண்டெனின் அது உவமையின் வாயிலாக எளிதில் விளங்குவதே ஆகும். அவ்வுத்தி முறையைத் தம் உரையின் பல இடங்களிலும் நயம்படக் கையாண்டுள்ளார் பேராசிரியர் இராம. சுப்பிரமணியன்.
முதல் இயல் நூன்மரபு. நூன்மரபில், என்பதற்கான விளக்கத்தைக் கூற முற்படும் இவர், “எழுத்துக்களின் இயலை (இலக்கணம்) ஒருவகையான உணர்த்தலின் இது நூன்மரபு எனப் பெயர் பெற்றது. ஈண்டு நூல் என்பது எழுத்தினைக் குறிக்கும். பன்னுனைப் பஞ்சு திரண்டு நூலாதல் போலச் செவிப் புலனாம் நுண்ணணு பல திரண்டு எழுத்தொலி ஆகலின் எழுத்தினை நூல் என்றார். இஃது உவமை ஆகுபெயர் (ப.1) எனக் கூறுவதும்,
“ஆஈ ஊஏஐ
ஓஔ என்னும் அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப”
(தொல்.எழுத்து.4)
என்னும் நூற்பாவிற்கு, நெட்டெழுத்துக்களுள் தமக்கு இனமாய குற்றெழுத்துக்களை உடையன ஐந்தெழுத்துக்களே. ஐ, ஔ இரண்டனுக்கும் இனமாய குற்றெழுத்துக்கள் இல்லை; என்றாலும், மாத்திரை ஒப்புமையான் அவை இரண்டும் நெடில் எனப்பட்டன.
தாய்க்கு ஒரு மகனாகிய ஒருவன், பிறரொடு சேர்ந்து விளையாடுங்கால் உடனிருப்பாருக்கேற்பச் சிறியன், பெரியன் என அவன் அழைக்கப்படுதல் போல்வதொரு நிலை.
இவை இரண்டும் மொழிமுதற்கண் ஒன்றரை மாத்திரையாய் ஒலிக்கும். ஐகாரம் மட்டும் இடை, கடைகளில் ஒரு மாத்திரையாய் ஒலிக்கும். ஔகாரம் முதற்கண் அன்றி வாராது.
அகர இகரம் சேர்ந்து ஐகாரம் போலவும், அகர உகரம் சேர்ந்து ஔகாரம் போலவும் ஒலித்தலின், அளபெடுக்குங்கால் இவை இரண்டும் முறையே இகர, உகரங்களை இனமாய்ப் பெறும்.
(ப.23) என உவமை கூறும் இடங்களில் இவர்தம் உரை ஏனையோரின் உரைகளில் இருந்து சற்று தனித்த சிறப்புடையதாக விளங்குகின்றது.
நிறைவாக
உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியுள் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்ட தொல்காப்பியத்திற்குச் சில நூற்றாண்டுகட்கு முன்பு தொடங்கி, இற்றைநாள் வரை பலரும் உரை செய்துள்ளனர். அவர்களுள் தற்காலத்துள் உரை செய்தாருள் ஒருவராகிய பேராசிரியர் இராம. சுப்பிரமணியனின் உரை ஈண்டு ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்தம் உரைத்திறனில் இயல்புரை, இயைபுரை, காலவுரை, உவமை கூறி உரை செய்யும் முறை ஆகிய பாங்குகள் ஏனைய உரையாசிரியர்களிடம் இருந்து தனித்து விளக்கும் பான்மை போன்றன இக்கட்டுரையின் வாயிலாக விளக்கப்பட்டது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.