சங்க கால மக்களின் ஆடைகளும் ஆடை உடுத்தும் முறைகளும்
நா. பொ. செந்தில்குமார்
மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் இன்றியமையாதது ஆடை. ஆதலால்தான் ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் என்று குறிப்பிடுகின்றனர். ஆடை மனிதனின் அடிப்படைத் தேவையாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் விளங்குகிறது. இலக்கியங்களில் ஆடைகள் பற்றிய பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. உடுக்கை, துணி, ஆடை, உடுப்பு, குப்பாயம், மெய்ப்பை, பட்டுடை, கலிங்கம், புடவை, கச்சு, தானை, படாம் என்பன சங்க காலத்தில் ஆடையைக் குறிக்கும் சொற்களாகும். இத்தகைய ஆடை வகைகளையும் உடுத்தும் முறைகளையும் ஆய்வதாக இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.
ஆடையின் தோற்றம்
ஆடையின் தோற்றம் பற்றி ஆராயும் போது, என்று தோன்றியது என்பதற்கு ஒரு தெளிவான விடை கிடைக்கப்பெறவில்லை. ஆனால் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு ஆடையை அணிந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் பலர் கருதுகின்றனர். தட்பவெட்பநிலைக்கு ஏற்றவாறும், பிற விலங்குகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கும் அடையாளச் சின்னத்திற்கும் கவர்ச்சி மற்றும் அழகுபடுத்திக் கொள்வதற்கும் மனிதன் ஆடையை பயன்படுத்திருக்க வேண்டும். இதுவே ஆடை தோற்றத்திற்குக் காரணமாக அமையலாம். என்றாலும் இது முதன்மைக் காரணமாக இடம் பெறுவதில்லை.
ஆடையும் சூழலும்
மான உணர்வைத் தற்காத்தல், அழகினை மிகைப்படுத்திக் காட்டல், காலநிலைக்கு ஏற்றவாறு உடல் நிலைகளைப் பாதுகாத்தல், கலை உணர்வை வெளிப்படுத்துதல், தன் மேம்பாட்டினை உயர்த்திக் காட்டுதல் ஆகியவை ஆடை அணிவதற்கான சூழலாக அமைகின்றன. காலச்சூழலுக்கு ஏற்றவாறு தமிழர்கள் ஆடைகளை அணிந்துள்ளனர். அவ்வகையில் குறைந்த அளவு ஆடைகள் உடுத்தியவர்கள் பண்பாட்டுக் கலப்பின் காரணமாக இன்று அதிக ஆடைகளை உடுத்துகின்றனர். ஆண்கள் அணியும் ஆடைகளைப் பெண்களும் அணியும் வழக்கம் இன்றையச் சூழலில் காணப்படுகிறது. எனவே, காலந்தோறும் ஏற்படும் அரசியல், பொருளாதாரம், சமயம் போன்ற சூழல்களுக்கு ஏற்ப ஆடைகளும் உடுத்தும் முறைகளும் மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன.
“உண்ணுதல் தன் விருப்பத்திற்கேற்ப அமையலாம். ஆனால் உடுத்துதல் பிறர் விருப்பத்திற்கேற்ப அமைய வேண்டும்”
(தமிழர் ஆடைகள் ப.89)
என்பது மக்களின் பொதுவான எண்ணமாகும்.
நீலகிரி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் தோடர் இன மக்கள் கழுத்திலிருந்து கணுக்கால் வரை ஆடைகளைப் போர்த்திக் கொள்ளும் முறையில் உடுத்துகின்றனர். ஆனால், “அந்தமான் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் ஒரு பிரிவினர் இடுப்பில் ஒரு நார் பட்டையை மட்டும் கட்டிக்கொண்டு பிறந்த மேனியாகத் திரிகின்றனர்”
(தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள் ப.94)
என்று மீரா. முகைதீன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து உடல் முழுவதும் மறைத்து ஆடை அணியும் ஒரு பிரிவினர் இருக்கும் இதே காலகட்டத்தில் மற்றொரு பிரிவினர் அதற்கு எதிர் மறையாக இருக்கும் நிலையையும் காணமுடிகிறது.
புலவர்களின் இலக்கியப் பதிவிலிருந்து அக்கால மக்கள் என்னென்ன உடைகளை உடுத்தியிருந்தனர் என்பதை அறியலாம். ஆனால் அவர்கள் எவ்விதம் அணிந்திருந்தனர் என்பதைத் தெளிவாக அறிய முடியவில்லை என்றாலும் ஆடைகளைப் பதிவு செய்த இலக்கியங்கள் வழியே ஓரளவு அறிய முடிகின்றது.
ஆடைகள் அணிந்த இடத்தினைக் குறிக்கும் விதமாகவும், ஆண்கள் பெண்கள் மறைத்துக் கொண்ட இடத்தினை வெளிப்படுத்தும் கருவியாகவும் விளங்குகின்றன. இவற்றின் மூலம் உடலின் எப்பகுதிகளை மறைக்க ஆடைகளைப் பயன்படுத்தினர் என்பதை அறியலாம்.
“அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண்
பல்பூம் பகைத் தழை நுடங்கும்அல்குல்”
(நற்றிணை 8)
“நுரை புரை கலிங்கம் ஒரு முலை புதைப்ப”
(பெருங்கதை 2.5.86)
மேற்கண்ட அடிகளில் தழை ஆடை இடுப்புப் பகுதியை மறைப்பதற்கும், கலிங்கம் மார்புப் பகுதியை மறைப்பதற்கும் பயன்படுத்தியுள்ளனர்.
என்பதை அறிய முடிகிறது.
புலவர்கள் இலக்கியங்களில் பதிவு செய்யும் வினைகளைக் கொண்டு உடைகளை உடுத்தினரா அல்லது போர்த்தினரா என்பதை ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில்; தைஇ, உடீஇ, அணிந்து, சேத்து, போர்த்த, மறைத்த, சூழ்ந்த, சுற்றிய, திருத்திய, சாத்திய, ஏந்திய போன்ற வினைகள் அமைகின்றன.
போர்த்த, மறைத்த என்னும் வினைகள் போர்வையைக் குறிப்பதாகும். சூழ்ந்த, திருத்திய போன்ற வினைகள் மேலாடையைக் குறிப்பன ஆகும்.
கச்சு, கச்சை என்பன இருக்கிக்கட்டப்பட்ட உடைகளைக் குறிப்பதாகும்.
இவ்வினை வடிவங்கள் இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.
குழந்தைகள் ஆடைகள்
தமிழ் இலக்கியங்களில் பெரியோர்கள் அணியும் ஆடைகள் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால், குழந்தைகள் அணியும் ஆடைகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும், குழந்தைகளின் ஆடைகளை ஓரளவிற்கு அறிந்து கொள்ளக்கூடிய இலக்கியக் குறிப்புகள் காணப்படுகின்றன.
ஆடை உடுத்தத் தெரியாத மகனை அழைத்து, அவன் இடையில் துணிகள் கழன்று விழாத வகையில் இறுக்கக்கட்டிப் போருக்கு அனுப்பும் அன்னையைப் புறநானூற்றில் காண முடிகிறது. (புறம் 299)
இதிலிருந்து சிறுவர்களின் உடை இடையில் அணிவித்த தன்மை புலப்படுகிறது.
“செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத்
தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரைப”(மணிமேலை. 3-140)
இப்பாடலில் குழந்தையின் அறியாமை உணர்வும், அதன் அப்பழுக்கற்ற வெள்ளை மனமும், அறைகுறையாக ஆடை அணிந்திருக்கும் அழகும் சுவைபட குறிப்பிட்டுள்ளதை அறியலாம்.
ஆடவர் ஆடைகள்
ஆண்களின் உடைகளை அரசர், வீரர், துறவியர், ஏழைகள் என பல நிலைகளில் குறிப்பிடலாம்.
அரசர் ஆடைகள்
ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு வகையான ஆடைகளை அரசன் அணிந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளன. அவ்வகையில் சங்க இலக்கியங்கள் கலிங்கம், படாம், துகில், அறுவை, கச்சு என்று அரசனின் ஆடைகளாகக் குறிப்பிடுகின்றன.
அரசனின் ஆடைகளை துகில், கச்சை, வடகம், மீக்கோள் என்று பெருங்கதை குறிப்பிடுகிறது. துகில், வெண்பட்டு, வட்டுடை, பட்டு, உரோமப்பட்டு என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது. ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு விதமாக ஆடைகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.
சங்க காலத்தில் அரசன் நிலத்தில்படும் அளவிற்கு ஆடைகளை அணிந்திருந்தான். அவ்வாறு அணிவதில் அவனுக்கு ஏதோ ஒருவகையில் பெருமிதத்தினை ஏற்படுத்திருக்க வேண்டும் என்று உ. வே. சா குறிப்பிடுகின்றார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக
“இருநிலந் தோயும் விரிநூல் அறுவை”
(பதிற்றுப்பத்து 34-3)
என்றும்
“மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்”
(திருமுருகு 214)
என்ற அடிகள் விளங்குகின்றன.
அரசன் மேலாடையாக துகிலினை அணிந்துள்ளான். அது மட்டுமல்லாமல் தரையில் விழும் ஆடையினைத் தன் இடக்கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்துள்ளான் என்பதை,
“புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ”
(நெடுநல்வாடை 181)
என்று நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.
இந்நிலையில் இன்று மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஆண்கள் வேட்டி, சட்டை, துண்டு அணியும் போது துண்டினைத் தோளின் இடப்பக்கத்தில் போட்டுக் கொள்கின்றனர். இது அக்காலத்திலிருந்த பாரம்பரியத்தின் எச்சமாக இருக்கலாம். மன்னன் தன் இடைத்துணியை கையில் தாங்கியோ தோளின் இடப்பக்கத்தில் போட்டுக் கொண்டோ சென்றது போல் எளிய மக்கள் துண்டினை அவ்வாறு பயன்படுத்தியிருக்கலாம்.
போர்வீரர்கள் ஆடைகள்
போர் வீரர்களின் பொதுவான ஆடைகளாக கச்சை, கவசம் போன்றவை இருந்துள்ளன என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறியலாம்.
“நுண்வினைக் கச்சை தயக்கரக்கட்டி”
(குறிஞ்சிப்பாட்டு 125)
கவசம் என்பது போர் வீரர்களின் முழு உடலினையும் மறைக்கும் அளவிற்கு அணியக்கூடிய பாதுகாப்பு உடையாகும். மேலும், உடலின் சில பாகங்களுக்கென்று தனித்துவமான கவச ஆடைகளையும் வீரர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனை, “மெய்புகு கவசம்” என்று சிலம்பும், “காலாசொடு அறை எறிந்து” என்பது சீவகசிந்தாமணியும் குறிப்பிடுகிறன. மெய்க்காப்பாளர்களின் ஆடைகளைக் கஞ்சுகம் என்றும், அவ்வாடையை அணியும் போர் வீரர்களைக் கஞ்சுக மாக்கள் என்றும் அழைக்கப்படுவது அக்கால வழக்கமாக இருந்துள்ளது. இதனை,
“மின்னுடை வேத்திதிரக் கையர் மெய்புகத்
துன்னிடு கஞ்சுகத்துகிலர்”
என்ற கம்பராமாயணப் பாடல் வழி அறியலாம்.
முனிவர் மற்றும் துறவியர் ஆடைகள்
சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு முனிவர்கள் மரஉரி தரித்தவர்களாகவே குறிப்பிடப்படுகின்றனர். மான் மற்றும் புலித் தோல்களை ஆடைகளாக அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனை, திருமுருகாற்றுப்படை
“மானின் உரிவை தைஇய மார்பினர்”
என்று குறிப்பிடுகிறது.
உலக வாழ்வை விரும்பாத துறவிகள் உடுத்தும் ஆடைகள் பற்றிக் குறிப்பிடும் போது, இவர்கள் காவி நிற ஆடைகளையே உடுத்தியுள்ளனர். சில துறவிகள் வெண்ணிற ஆடைகளையும் அணிந்திருந்தனர். பௌத்தத் துறவிகளும் காவி நிற ஆடைகளையே அணிந்திருந்தனர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பொதுமக்கள் ஆடைகள்
உயர்நிலை மக்கள், தாழ்நிலை மக்கள் என இவர்களை இருவகையாகப் பகுக்கலாம். உயர் நிலை மக்கள் என்று பார்க்கும் போது, ஐந்நிலத் தலைவன், செல்வந்தர், அரசனைச் சார்ந்த மக்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
தாழ்நிலை மக்களாக மறவர், வேட்டுவர் மற்றும் குற்றேவல் செய்வர் போன்ற விளிம்பு நிலை மக்களைக் குறிப்பிடலாம்.
உயர்நிலை மக்கள் ஆடைகள்
இவர்களின் ஆடைகளாக கலிங்கம், காழகம், கூறை, மெய்ப்பை, போர்வை, உத்தரீயம் போன்றவைக் குறிப்பிடப்படுகின்றன. அந்தணர்கள் காலக உடையினை அணிந்திருந்தனர். வணிகர்கள், அரசர்களைப் போன்று நிலந்தோயும் அளவிற்குக் கலிங்ம் உடுத்தியிருந்தனர்.
சிலப்பதிகாரம் பெருநிதிக் கிழவனின் மகனான கோவலன் தான் அணிந்திருக்கும் ஆடையைக் கூறை என்று குறிப்பிடுகின்றான்.
சிலம்பு காட்டும் பொற்கொல்லன் மெய்ப்பையுடன் விளங்குகிறான். இவற்றை இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார். பெருங்கதையில் கணக்கர்கள் மற்றும் திணைத் தொழிலாளர்கள் போர்வை என்னும் ஒருவகை ஆடைகளை அணிந்திருந்தனர் என்பதை,
“புறங்காற் தாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய் புடுத்தநெடு நூண்ணாடையர்”
(பெருங்கதை)
என்ற அடிகளின் மூலம் அறியலாம்.
தாழ்நிலை மக்கள் ஆடைகள்
தாழ்நிலை மக்களான எளிய மக்களின் ஆடைகள் பற்றி குறிப்பும் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள. சங்க இலக்கியங்கள் குறவரின் உடைகளை மறனார் உடுக்கை என்று பதிவு செய்துள்ளன. சிந்தாமணி இவ்வாடயை வேட்டுவரின் உடையாக பதிவு செய்துள்ளது. இடையர்களின் உடைகளாக மாசுனுடுக்கையினையும் கருந்துவராடையையும் குறிப்பிடுகின்றது. எயினர்களும் கள்வர்களும் செந்துவராடையையும் நீலக்காச்சாடையையும் அணிந்திருந்தனர் என்று சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
மகளிர் ஆடைகள்
ஆண்கள் ஆடைகள் போன்று பெண்களும் பல விதமான ஆடைகளை அணிந்திருந்தனர் அவ்வகையில் உயர்நிலையிலிருந்த அரசியர்களின் ஆடைகளாக பூந்துகில், கலிங்கம், கோடி நுண்துகில் போன்ற ஆடைகள் குறிப்பிடப்படுகின்றன. அரசனைப் போல் அவன் மனைவியரும் ஆடைகளை நிலம் தோயும் அளவிற்கு உடுத்தியிருந்தனர். கச்சும் மேலாடையும் அணிந்திருந்தனர் என்பதை
“கோடி நுண்டுகிலை கொய்து கொண்டுடீஇயதாகப்”
என்ற பெருங்கதை அடியின் மூலம் அறியலாம்.
மேலும், மகளிர்கள் தைக்காத துணியினை உடலில் போர்த்தி வந்ததாக குறிப்புகள் காணப்படுகிறன. இதனை,
“கதிர் நிழந் கவாப் பதுமநிறங் கடுக்கும்
புதுநூற் பூந்துகிலிருமடியுடீஇ” (பெருங்கதை)
என்ற அடிகளின் மூலம் அறியலாம்.
தாழ்நிலை மகளிர்
தாழ்நிலை மகளிரின் உடைகளாக துகில், கலிங்கம், கச்சை, தழையாடை, வம்பு ஆகிய ஆடை வகைகள் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் உயர்நிலைப் பெண்களைப் போலவே ஆடை அணியும் முறைகளைக் கொண்டிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.