நத்தத்தனார் பார்வையில் விறலி
முனைவர் மா. பத்மபிரியா
பண்டைத்தமிழரின் சொத்துக்கள் சங்க இலக்கியங்களான பாட்டும் தொகையும், பத்துப்பாட்டில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படைகள். ஆற்றுப்படைகளில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் விறலி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. விறலியின் அழகினை நத்தத்தனார் வருணித்துள்ள பாங்கினை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆற்றுப்படை
ஆறு + படை = ஆற்றுப்படை, ஆறு - வழி, படை - படுத்துவது, ஆற்றுப்படை - வழிப்படுத்துவது. இதனைத் தொல்காப்பியர் புறத்திணையியலில் அரசர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடும் முறை கூறும் பாடாண் பகுதியில்
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்”
என்று குறிப்பிட்டுள்ளார்.
நத்தத்தனார்
சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். தத்தனார் என்பதே இவர் இயற்பெயர். ‘ந’ என்பது சிறப்பை உணர்த்தும் இடைச்சொல். கடைச் சங்க காலத்துப் புலவர். கலைமகனாள விறலியை நத்தத்தனார் கண் கொண்டு ஆய்வோம்.
கலைமகளிர்
ஆடல், பாடல், கூத்து இவற்றில் சிறந்து விளங்கும் மகளிர்கள் விறலியர் பாடினியர் என்று சுட்டப்பட்டனர். இவர்கள் பாணர், பொருநர் என்பவர்களோடு சென்று மன்னர்களையும், வள்ளல்களையும் சந்தித்துத் தங்களின் ஆடல் பாடல்களால் அவர்களை மகிழ்வித்து அதற்குப் பாpசாக ‘பொற்பூ’ பெற்றவர்களாவர்கள். பாணரையும், பொருநரையும் மணம் செய்து கொண்டு இவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். சமூகத் தொடர்புடைய இப்பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருக்க வேண்டும் என்பது இரா. பிரேமா அவர்களின் கருத்தாகும்.
விறலி
எண்வகையான மெய்ப்பாடுகளையும் புலப்படுத்தும் விறல் (வீரம் திறமை) மிக்கவளே விறலி எனப்பட்டாள். விறலியாற்றுப்படை என்று ஒரு துறையே தமிழிலக்கியத்தில் உள்ளது. பின்னணி இசைக்கேற்ப அடிபெயர்த்துத் தோள் அசைத்து விறலி ஆடுவாள். கூத்துக்கள் நிகழ்த்த வேண்டி இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்வாள் விறலி. அவ்வாறு செல்லும் போது அயலிட நிகழ்ச்சிகளுக்குத் தனித்துச் செல்வதில்லை. விறலியர் கற்பு தமிழிலக்கியங்களில் பல இடங்களில் வியந்து பேசப்பட்டுள்ளது. “முல்லை சான்ற கற்பின் மெல்லியல்” எனச் சிறுபாணற்றுப்படை (30) இயம்புகின்றது. விறலியர் என்போர் ஆடலும் பாடலும் நிகழ்த்தும் பெண்டிராவர். ஆடல் தொழில் புரியும் ஆடவர் கூத்தர் எனவும், பெண்டிர் விறலியர் எனவும் குறிப்பிடப்பட்டனர். பாடல் பாடுவோரைப் பாடினி என்றும், அரங்கில் நடிப்போரை விறலி என்றும் பிரித்துப் பேசுவதுண்டு. விறலி தலைவியின் ஊடலைத் தீர்க்கும் வாயில்களில் ஒருத்தி என்றும் கூறுவர்.
விறலியர் என்பது கூத்தர் என்ற சொல்லின் பெண்பால். மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்பர். அதில் விறலியர் தொன்றுதொட்டு வரும் மரபுப்படி முதலில் கடவுளை வாழ்த்திப் பாடி ஆடுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ( மலைபடுகடாம் - 536 )
விறலி என்பவள் பாண்மகள் எனவும் அழைக்கப்படுகிறாள். (பதிற்றுப்பத்து - 60)
விறலியர் இசைக்கருவிகளுடன் செல்வர் (புறம் - 64)
பாட்டுப்பாடிப் பண்ணிசைக்கேற்ப ஆடுவர். பாட்டின் பொருள் புலப்படும்படி உடல் அசைத்துக் காட்டுவர். இவர்கள் இவ்வாறு காட்டுவர். இவர்கள் இவ்வாறு காட்டுவதற்கு ‘விறல்’ என்று பெயர்.
சிறுபாணாற்றுப்படையில் விறலி
சிறுபாணாற்றுப்படையில் 13 ஆம் அடி முதல் 31 ஆம் அடி வரை பதினெட்டு அடிகளில் விறலியின் வருணனை அமைந்துள்ளது.
“ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண்டு அருளி
நெய்கனிந்து இருளிய கதுப்பின் கதுப்புஎன
மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன்... ... ...
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
நடைமெலிந்து அசைஇய நல்மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவரப்” (13-33)
எண்ணெய் பூசப் பெற்ற கருமையான மென்மையான கூந்தல் மழை பெய்யும் மேகம் போன்ற அழகைக் கொண்டிருந்தது. அக்கூந்தல் போன்ற கருந்தோகைகளைப் பரப்பி ஆடும் ஆண்மயில்கள் விறலியர் சாயலுக்குத் தாம் ஒப்பாகவில்லையே என பெண் மயில்களின் நிழலில் மறையும்.
இதுசங்கிலித் தொடர் போன்ற தொடை நயமுடையதாக அமைந்துள்ளது. விறலியின் உறுப்புகள் புனைந்துரைக்கப்படுகிறது. அந்தாதித் தொடை உவமை அல்லது ஒற்றைமாலை அணிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இவ்வடிகள்.
நத்தத்தனார் பார்வையில் விறலி
விறலியர் என்போர் பாணர்களின் கூட்டத்தில் இடம் பெறுபவர்கள். இவர்கள் அக உணர்வுகளைப் புறத்தே வெளிப்படுத்திக் காட்டுவதில் விறல்பட (திறம்பட) நடிக்கும் ஆற்றல் உடையவர்கள். இவர்களும் பாணர்களும் பாலை வழியாக வருகின்றனர். இவர்களின் மென்மை மிக்க இயல்பையும் அழகையும் சிறுபாணாற்றுப்படை
(13 -33 ) அடிகளில் அழகாக கேசாதிபாதமாக தலை முதல் கால் வரை வருணிக்கிறார்.
வருணனை
தமிழ்ப்புலவர்கள் வருணிப்பதில் இருவகை நெறிகளைப் பின்பற்றுகின்றனர். அவை;
1. கேசாதிபாதம்
2. பாதாதிகேசம்
கேசாதிபாதம்
கேசம் + ஆதி + பாதம்
கேசம் - முடி (தலை)
ஆதி - முதல்
பாதம் - அடி
அதில் ஒவ்வோர் உறுப்பாக எடுத்துக் கொண்டு உவமை கூறி வருணிப்பர். முடி முதல் அடி வரை அதாவது தலை முதல் கால் வரை வருணிப்பது கேசாதிபாதம் ஆகும்.
பாதாதிகேசம்
கேசாதிபாத வருணனைக்கு நேர் மாறானது பாதாதிகேசம். பாதம் + ஆதி+ கேசம் = பாதாதிகேசம். அதாவது அடி முதல் முடி வரை வருணித்தல். பிற்காலத்தில் பாதாதிகேச வருணனை முறை தெய்வங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று இலக்கணம் வகுத்தனர்.
நத்தத்தனார் விறலியை கேசாதிபாத முறையில் வருணித்துள்ளார்.
·
விறலியரின் கூந்தல்
உலகிற்கு அருள் செய்ய வல்ல மெல்லியதாய் வீழ்கின்ற மழையைப் போன்ற அழகு உடைய கருமையான கூந்தல்.
சாயல் (மென்மை)
மழைமேகத்தைக் கண்டு தோகை மயில்கள் தம் தோகையை விரித்து ஆடுவது இயற்கை. விறலியரின் கூந்தலை மழை மேகம் என்று மயில்கள் நினைத்தன. அதனால் மகிழ்ச்சியாகத் தம் தோகையை விரித்து ஆடின. ஆகாலும் அவற்றிற்கு வெட்கம் வந்து விட்டது. ஏன் தெரியுமா? தமது தோகையின் சாயல் விறலியரின் கூந்தல் சாயலுக்குச் சமமாகாது என்று மயில்கள் கருதியதால் ஆகும்.
நுதல்
நுதல் என்றால் நெற்றி. இது ஒளி மிக்கதாக உள்ளது.பெண்களின் நெற்றி ஒளி வீசக்கூடியது என்று கூறுவது வழக்கம்.
கண்
நீலமணி போன்ற கண்கள்
பார்வை
மருட்சி எடைய இளமையான மானின் பார்வை போன்று உள்ளது.
எயிறு
எயிறு என்றால் பல். நுங்கின் இனியநீர் போன்று சுவையை உடையதாக எயிற்று நீர் அமைந்துள்ளது.
முலை
கோங்கு என்ற மலரின் அரும்பைப் போன்று அணிகலன்களுக்கு இடையே அடங்கிக் கிடக்கும் மார்பகம்.
தொடை
கரிய பெண் யானையின் தும்பிக்கையைப் போன்ற செறிந்த தொடை.
ஓதி (மயிர் முடிப்பு)
வாழைப்பூவின் தோற்றம் போன்ற அழகிய ஓதி.
அடி
ஓடி இளைத்த வருந்துகின்ற நாயின் நாக்கைப் போன்ற பாதம். சிலம்பு முதலிய அணிகலன் ஏதும் இன்றி அழகற்று இருக்கிறது.
சுணங்கு
வண்டுகள் மொய்த்து ஆரவாரம் செய்கின்ற வேங்கை மலர் போன்ற சுணங்கு.
விறலியர் இயல்பு
விறலியரின் கூந்தல், சாயல், நுதல், கண், பார்வை, எயிறு, முலை, தொடை, ஓதி, அடி, சுணங்கு ஆகியவை பல்வேறு உவமைகளால் விளக்கப்பட்டுள்ளன. இத்தகு அழகு வாய்ந்த விறலியரின் மென்னையான இயல்பையும் புலவர் குறிப்பிடத் தவறவில்லை. விறலியர் முல்லை சான்ற கற்பும் மெல்லியல்பும் மான் நோக்கும் வாள் நுதலும் உடையவள் என்பதை,
“முல்லை சான்ற கற்பின் மெல்லியள்
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்” (30-31) என்னும் அடிகள் சுட்டுகின்றன.
ஆற்றுப்படையில் ஒரு பெண்ணின் அங்கங்களை வருணிக்க வேண்டியதின் அவசியம் என்ன ?
இருபது அடியில் நீண்ட நெடிய வருணனை செல்லும் வழியைப் பற்றி இருந்தால் பரவாயில்லை பெண்ணைப் பற்றிய வருணனை தேவையா?.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.