Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 11
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்


22. சைவம்

முனைவர் யாழ். சு. சந்திரா

சைவம் சிவனுடன் சம்பந்த மாவது
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவந்தன்னைச் சாராமல் நீவுதல் (திருமந்திரம்.1512)

என்பதற்கேற்பச் சிவ சம்பந்தமுடைய சமயமாகச் சைவம் குறிப்பிடப்படுகிறது. அவ்வழி சிவனின் காலப்பழமையைக் கண்டறிவது சைவசமயத்தின் வரலாற்றையும் வளர்ச்சியையும் காண்பதற்கு உரிய நெறியாகும்

சைவசமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் அமைந்துள்ளது. வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட சைவம், ஆரியர், ஆரியருக்கு முற்பட்டவர் என்ற இருவேறு நெறிகளின் இணைப்பே ஆகும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். (Sastri.K.AN., The Cultural Heritage of India, Vol. IV, p.18) அதாவது, ‘சைவம்’ எனும் சமயத்தின் வரலாறு காண முற்பட்டால் அது காலப்பழமை உடையது என்பதனை அறியமுடிகிறது.

காலப்பழமை

மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் செய்த அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருள் மற்றும் உருவங்கள் சைவ சமயத்தோடு தொடர்புடையனவாக இருப்பதனைத் திறனாய்வாளர்கள் உரைக்கின்றனர். இதனை, ‘மொகஞ்சதாரோவில் தாய்க் கடவுளோடு ஆண் கடவுளொன்றின் படிமமும் காணக்கிடைக்கிறது. வரலாற்றுக் காலத்துச் சிவனுக்கு முற்பட்ட வடிவம் அது என்பதனைத் தெளிவாக அறிய முடிகிறது’ என்ற சர் ஜான் மார்‘ல் கூற்று அரண்செய்கிறது. (Sir John Marshall, Mohenjadaro and Indius Civilization - Vol.I., p.54)

ஆகவேதான் ஜி.யு.போப் அவர்கள் சைவம், தென்னிந்தியாவின் மிகப்பழைய வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் ஆகும், அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருகிறது என உரைக்கிறார் போலும்!(Pope.G.U., Tiruvachakam, p.4XXIV)உலகளாவிய சான்றுகள்

சிவவழிபாடு என்பது காலப்பழமையுடையதாக இருப்பதோடு உலகளாவிய செல்வாக்கினைப் பெற்று விளங்குவதனையும் அறிஞர்கள் பலர் பலவாறு குறிப்பிடுகின்றனர்.

 • எகிப்து நாட்டில் இலிடியப் பெருங்காட்டில் சிவன் என்னும் பசுந்தரை ஒன்று உள்ளது.

 • கிரேக்க நாட்டின் சியஸ் என்னும் கடவுளின் பெயர் சிவன் என்பதன் திரிபேயாகும்.

 • சப்பானில் முச்சந்தியில் இலிங்கங்களை வைத்து வழிபடும் பழக்கம் இருந்தது.

 • சிவன் தீவு என்பதே சம்புத்தீவு என்றாயிற்று என்றும் கருதுவர்.

 • ஆப்பிரிக்காவில் தகோமி என்னுமிடத்தில் இலிங்கம் லெங்பர் என்னும் பெயரில் வைத்து வழிபடப்பட்டது.

 • கிரீசில் பக்கஸ் விழாவில் இலிங்கம் வீதி உலா வந்தது.

 • அங்கு அவர் கெபன் கெபி (கெளரி) என்னும் தேவியுடன் வழிபடப்பட்டார்.

 • மொகஞ்சதாரோவில் அம்மை ‘மீன்கண்ணி’ எனப்பட்டார்.

 • கிதைதி நாட்டு அரசனுக்கும் எகிப்பின் இரண்டாம் இராம்சே அரசனுக்கும் கி.மு.1290இல் எழுதப்பட்ட உடன்படிக்கையில் இடியேற்றைக் கையில் வைத்திருக்கும் தந்தைக் கடவுளே எல்லாக் கடவுளரினும் மேலானவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. (அரங்கசாமி. கா., சிவசமய வரலாறு - பகுதி 1, பக். 39-41) என்ற பட்டியலைச் சுட்டலாம்.

 • ‘சிவன்’ என்ற சொல்

  ‘சிவன்’ என்ற சொல்லின் மூலம் எண்ணங்களும் வடிவமும் வழிபாட்டு முறைகளும் தமிழருக்கே தனித்தன்மை உடையனவாக உள்ளன. தமிழ்ச்சைவம் மற்றும் சித்தாந்தம் பற்றிப் பேசும் அறிஞர்கள், உருத்திரனோடு இணைத்தே சிவன் பற்றிப் பேசுகின்றனர்.

  உருத்திரன், சிவன் என்னும் இரு சொற்களின் மூலமும் நிறமுடைமை என்ற பொருளின் அடிப்படையிலேயே பிறந்தன. இச்சொற்களைச் சிதைக்காமலே ஒன்றை ‘உரு’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்தும், மற்றொன்றைச் ‘சிவன்’ என்பதிலிருந்தும் பெறலாம். இரண்டும் நிறமுடைமையைக் குறிக்கும். (Maraimalai Adigal, ‘Preface’ Saivasiddantha as a Philosophy of Practical Knowledge, pp.3-5) அதாவது, தமிழகச் சைவசமயம் வேதகாலத்திற்கு முற்பட்டது என்பது உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்தச் ‘சிவ’ என்ற வடமொழி உரிச்சொல், திராவிட மூலச்சொல்லுக்கேற்ற ஒலிவடிவம் கொண்டு இலங்குகிறது என்பாஇ அறிஞஇ சர் ஜான் மார்‘ல்.  தமிழ் நூல்களின் சைவம்

  சைவம் எனும் சமயத்திற்கு உரியதான சைவசித்தாந்த தத்துவம் பற்றிய முறையான மேல்வரிச் சட்டமான நூல்கள் தமிழில் மட்டுமே உள்ளன. வடமொழியில் உபநிடதங்களிலும், வேறுபிற வேதாந்த நூல்களிலும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கருத்துக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்தாலும் கூட, வேதகாலத்திலோ அதற்கு பிற்பட்ட காலத்திலோ சைவசித்தாந்த தத்துவம் பற்றிய நூல்கள் எவையுமில்லை என்பார் மறைமலையடிகள். அந்த வகையில் ஈராயிரம் ஆண்டுக்கால பழமையுடைய தொல்காப்பியமும், பிற பழந்தமிழ் நூல்கள் முதலியன சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவன் பற்றிய செய்திகள் பலவற்றைச் சுட்டுகின்றன.

  தொல்காப்பியத்தில் சிவன்

  தெய்வம், கடவுள், அமரர், இமையோர், அணங்கு, முனைவன் ஆகிய சொற்களால் இறைவனைக் குறிப்பிடும் தொல்காப்பியர், மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை எனத் தனிக் கடவுளர் பெயர்களையும் சுட்டுகிறார்.

  காலம் உலகம் உயிரே உடம்பே
  பால்வரை தெய்வம் வினையே பூதம்
  ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
  ஆயிரைந் தொடு பிறவும் அன்ன
  ஆவயின் வரூஉங் கிளவியெல்லாம்
  பால்பரிந் திசையா உயர்திணை மேன (தொல்.541 )

  என உயர்திணைப் பெயர்களைச் சுட்டுமிடத்துச் சில தெய்வப் பெயர்களைச் குறிப்பிடும் தொல்காப்பியர், கடவுள்வாழ்த்து பற்றிப் பேசும்போது,

  கொடிநிலை கந்தழி வள்ளியென்ற
  வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
  கடவுள் வாழ்ததொடு கண்ணி வருமே (தொல்.1034 )

  என்பார். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் கடவுள் வாழ்த்துக்கு உரியன என்பதே இச்சூத்திரத்தின் பொருளாகும். தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான நச்சினார்க்கினியர். ‘கந்தழி’ என்பது ஒரு பற்றுக் கோடின்றித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் எனத் தரும் விளக்கம் சைவத்தின் முழுமுதற் கடவுளாகிய சிவனுக்கு உரிய தன்மைகளோடு ஒத்து அமைகின்றது.

  வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
  முனைவன் கண்டது முதல் நூலாகும் (தொல். 1594)

  என்ற தொல்காப்பிய நூற்பா சுட்டும். முனைவன் வினைகளால் பற்றப்படாமல் இருக்கும் தூய்மையானவன் ஆவான், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனாகப் பேரறிவு உடையவனாக இருத்தல் என்பது பதியின் இயல்பாகும் எனப் பின்னர் எழுந்த சைவசித்தாந்தச் சாத்திரம் உரைக்கிறது.  பழந்தமிழில்...

  சிவனே பழந்தமிழர் வழிபட்ட முழுமுதல்த் தெய்வம் என்று கருதப் பழந்தமிழ்க் குறிப்புக்கள் இடமளிக்கின்றன. முதுமுதல்வன் என்பது சிவனைக் குறிக்கும். ஆயின், சிவன் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் இல்லை. மாறாக, இறை, கடவுள் என்ற பொதுப்பெயராலும் ஆலமர்செல்வன், மழுவாள் நெழயோன, முக்கட்செல்வன, கணிச்சியோன், நீலமணிமிடற்றொருவன், அருந்தவமுதல்வன், தொன்முதுகடவுள் முதுமுதல்வன், ஆதிரையான், சீர்மிகு சிறப்பினோன், கொலைவன் எனத் தொன்மத் தொடர்புடைய பெயர்களால் குறிப்பிடப்படுகின்றான். அதாவது, சங்கத்தமிழர் சிவனை முழுமுதற் கடவுளாக வழிபட்டனர் என்றாலும், சைவம் இக்காலக்கட்டத்தில் நிறுவனமயமாக ஆக்கப்படவில்லை என்பது இன்றியமையாத குறிப்பாகும்.

  சிலம்பில்...


  சமயச்சார்பற்ற காப்பியம் எனப் போற்றப்படும் சிலப்பதிகாரம் உண்மையில் அக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய பல்சமயச் சூழலை விவரிக்கிறது எனலாம். திங்கள், ஞாயிறு, மாமழை என இயற்கையையும் பூம்புகார் என நகரத்தையும் வழிபட்டுத் தமது காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைத் தொடங்கும் இளங்கோ, சிலப்பதிகாரத்துள் பல்வேறு கடவுளர்களையும் வழிபாட்டு மரபுகளையும், பலவாறு குறிப்பிடுகிறார்.

  முல்லைநிலக் கடவுளாகிய மாயோன் வழிபாட்டை ஆய்ச்சியர் குரவையிலும், குறிஞ்சிக் கடவுளாகிய சேயோன் வழிபாட்டைக் குன்றக்குரவையிலும், முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்த பாலைக் கடவுளாகிய கொற்றவை வழிபாட்டை வேட்டுவ வரியிலும், மருதநிலத் தெய்வமாகிய இந்திர வழிபாட்டை இந்திரவிழவூர் எடுத்த காதையிலும் நெய்தல் நிலத்தெய்வமாகிய வருணனை வழிபாட்டைக் கானல்வரியிலும் எடுத்துரைக்கிறார்.

  சிவவழிப்பாட்டைத் தமது காப்பியத்துள் பல இடங்களிலும் குறிப்பிடுகிறார் சோழனின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்துக் கோவில்களைக் (5:169-181) எனப் பல்தெய்வ வழிபாட்டு முறைமை நிலவியதனைச் சுட்டுவார். மேலும், பாண்டிநாட்டுத் தலைநகராகிய திருக்கோவிலில் ஓதப்பட்ட வேதமுழக்கம் நெடுந்தூரம் வரை கேட்டது என மதுரையில் கவுந்தியடிகளோடு கண்ணகியை உடன் அழைத்துக் கொண்டு கோவலன் நுழைக்கின்றான். அப்போது அங்கு கேட்ட ஓசைகளைக் குறிப்பிடும் இளங்கோ,

  ‘நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
  உவணச் சேவல் உணர்ந்ததோன் நியமமும்
  மேழி வலன் உயர்ந்த வெள்ளை நகரமும்
  கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்
  அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
  மறத்துறை விளங்கிய மன்னவன் கோவிலும்
  வால் வெண்சங்கொடு வகை பெற்று ஓங்கிய
  காலை முரசும் கனை குரல் இயல்ப . . . . .

  எனச் சுட்டுகிறார். பிறவா யாக்கைப் பெரியோன், ( 14:7-14), நுதல் விழி நாட்டத்து இறையோன் எனச் சுட்டும் இளங்கோ, சிவவழிபாட்டைத் தமது பட்டியில் முதன்மைப்படுத்துவது, அவர் காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த வழிபாடு சிவவழிபாடு என்பர் திறனாய்வாளர். (தமிழ்த்துறை ஆசிரியர்கள், சிலப்பதிகாரச் சிந்தனைகள், ப.20) மேலும், செங்குட்டுவன். சிவபெருமான் அருளால் பிறந்தவன் என்பதனை,

  ‘செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
  வஞ்சித் தோன்றிய வாவை (26:98-99)

  எனவும்,

  ஆனே றூர்ந்தோன் அருளினில் தோன்றி
  மாநிலம் விளக்கிய மன்னவன் (30:141-142)

  எனவும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

  வட ஆரியரை வெற்றி கொள்ளச் சேரன் செங்குட்டுவன் படையோடு புறப்படும்போது சிவவழிபாடு செய்தான் என்பதனை,

  நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
  உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி
  மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
  இறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங்கொண்டு
  மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை
  நறைகெழு மாலையின் நல்லகம் வருந்தக்
  கடக்களி யானைப் பிடரித்தலை ஏறினன்
  குடக்கோக் குட்டுவன் . . . . . (26:54-61)

  எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அதாவது, திங்களைச் சூடிய நீண்ட பெருஞ் சடைமுடியையும், உலகம் முழுவதனையும் தன்னுள் அடக்கிய திருவுருவத்தினை உடையவனாய், யாவர்க்கும் மேலான இயல்பினால் உயர்ந்த சிவனின் திருவடிகளைத் வெற்றி பொருந்திய வஞ்சிமாலையுடன் தன்முடி மீதணிந்த, எவர்க்கும் தாழாத தன் தலையினால், அப்பெருமானை இறைஞ்சி வலம் வந்தான் சேர மன்னன் என்பது இதன் பொருள். அவ்வாறு யானை மீதேறிப் புறப்படும் காலத்துத் திருமாலடியார்கள் திருமாலின் பிரசாதத்தை வாழ்த்திக் கொடுக்க, அதனைத் தனது தோளில் அணிந்து கொண்டானாம் மன்னன் செங்குட்டுவன் அவ்வாறு தோளில் அணிந்து கொண்டமைக்கு,

  தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
  வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
  ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
  தாங்கின ளாகித் தகைமையிற் செவ்வழி (26:54-67)

  எனச் சிவனது சேவடி திருமுடியில் தாங்கியமையால், திருமால் சேடத்தைத் தோளில் தாங்கினான் என்பார் இளங்கோ, சிவவழிபாட்டின் முதன்மையையும், சைவம் சார்ந்தார் திருமாலையும் போற்றிய பாங்கினையும் அறியமுடிகிறது.

  பிறிதோரிடத்தில் சிலப்பதிகாரத்தில் அஞ்செழுத்து எட்டெழுத்து மந்திரங்களை ஓதுவது பற்றியும் குறிப்பிடுகிறது.

  அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
  வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
  ஒருமுறையாக உளம் கொண்டு ஓதி ( 11:128-130)

  என அஞ்செழுத்து மந்திரம் சிலப்பதிகாரத்தினால்தான் முதன்முதலில் சுட்டப்படுகிறது என்பதும் இன்றியமையாத குறிப்பாகும்.

  சிலம்பில் முதுமுதல்வனாகிய சிவனுக்குத் தனிக்கோவில் இருந்தமையும், புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று பேரூர்களிலும் வழிபாடு நடந்தமையும் பதிவாகி உள்ளது. மேலும், சிவனருளால் செங்குட்டுவன் பிறந்தான் என்ற குறிப்பின் வழி சிவனை வழிபடும் சைவம் மேலோங்கி இருந்தமையையும், சேரர்கள், சைவர்களாக இருந்தமையையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

  மணிமேகலையில்...


  சிலம்பொடு தொடர்புடைய மணிமேகைலைக் காப்பியம் பௌத்த சமயத்தின் பிரச்சார பீரங்கியாகவே திகழ்கிறது எனலாம். மணிமேகலைக் காப்பியத்தின் கதைத்தலைவி மணிமேகலை பௌத்தசமயம் சார்ந்து, தமிழகம் முழுவதும் சென்று பௌத்த அறங்களைப் போதிப்பது காப்பியப் பொருளாகிறது. பௌத்த சமயத்தை முன்னிறுத்த முற்படும் மணிமேகலை வஞ்சி நகர் சென்று, அங்கு பிற சமயத்தாரிடம் உரையாடல் வழி அவ்வச்சமய உண்மைகளை - தத்துவங்களை அறிந்து கொள்வதாகக் காப்பியத்தை நகர்த்தும் சாத்தனார், தமிழ்ச் சமூகத்தில் நிலவிய பல்வேறு சமயங்களையும் அவற்றின் தத்துவத்தையும் விவரிக்கின்றார். அவ்வழி சமயக்கணக்கர் திறம் கேட்ட காதை இந்தியாவில் தோன்றிய முதல் சர்வதரிசன சங்கிரகம் என மதிப்பிடுவர் திறனாய்வாளர். (கந்தசாமி.சோ.ந., தத்துவ நோக்கில் தமிழிலக்கியம், ப.135) இக்காதையில் வைதிக மரபுகளைச் சார்ந்த அளவைவாதம், சைவவாதம், பிரமவாதம், வைணவம், வேதிவாதம், நிகண்டவாதம், சாங்கியம், வேசேடிகம், பூவாதம் என்பன விளக்கமுறுகின்றன.

  வைதிகமார்க்கத்து அளவைவாதத்தை அடுத்து, சாத்தனார் சைவ வாதத்தைச் சுட்டுகிறார்.

  ... ... ... ... ... இறைவன் ஈசன் என
  நின்ற சைவவாதி நேர்படுதலும்
  பரசுநின்று எய்வம் எப்படித் தென்ன
  இருசுடர் ஓடிய மானறனைனம் பூதமென்று (மானை ஐம்)
  எட்டு வகையும் உயிரும் ஆக்கையுமாய்க்
  கட்டிநிற் போனும் கலை உருவினோனும்
  படைத்துவிளை யாடும் பண்பினோனேனும்
  துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
  தன்னில் வேறுதானொன் றிலோனும்
  அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன் (மணி. 27:87-95)

  என சைவவாதம் மணிமேகலையில் பதிவாகின்றது.

  ‘இறைவன் ஈசன்’ எனச் சைவவாதி நிற்கின்றான். அவனிடம், மணிமேகலை, ‘நின் தெய்வம் எப்படித்து? பரசு!’ என வினவுகிறாள். அதற்கு ஞாயிறு, திங்கள் இயமானன் ஐம்பூதம் எனும் எட்டு விதமான உடலை உடையவன் என ஈசனின் அட்டமூர்த்த வடிவம் பற்றி விடையிறுக்கின்றான் சைவவாதி. அவற்றுக்கு உயிராகவும் பலகலைகளை உடைய உருவினனாகவும் உள்ளான் என உள்நின்று இயக்கும் அவனது ஆற்றலையும் சுட்டுகின்றான். படைத்துக் காத்துக் துடைக்கும் முத்தொழில் ஆற்றுபவன் எனத் தடத்த இலக்கணம் கூறப்படுகிறது. தனக்குவமை இல்லாத அவனது இயல்பு சொரூப இலக்கணம் ஆகும். அத்தகு இறைவன் என்னால் வழிபடப்படுபவன் எனச் சைவவாதி கூறுகின்றான். இவ்வாறு சைவம் முதன்மைப்படுத்தும் சிவனாம் பதி இயல்பு மணிமேகலையில் பதிவாகிறது. சைவம் உரைக்கும் பசு, பாசம் பற்றிய குறிப்புக்கள் சாத்தனரால் குறிப்பிடப்படவில்லை எனலாம்.

  பக்தி இலக்கியங்களில்...


  சங்க இலக்கியத்தை அடுத்த சிலம்பும் மேகலையும் பழந்தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய பல்சமயச் சூழலை விளக்குகின்றன. சிலம்பு சமயப்பொறையுடன் சமயங்களைப் பதிவு செய்ய மேகலை, பௌத்தம் சார்ந்து பிற சமயங்களைக் காழ்ப்புணர்ச்சியுடன் பதிவு செய்கிறது.

  தமிழகத்தின் வெளியே இருந்து வந்த களப்பிரர்கள் சமணத்தைப் பின்பற்றினார். அவர்கள் வலுக்கட்டாயமாகத் தாம் கைக்கொண்ட நெறியை மக்களிடத்தில் புகுத்தினர். இத்திணிப்பு தமிழர்களிடத்து வெறுப்புத் தோன்ற வழிவகுத்தது. அச்சூழலில் சைவ சமயக்குரவர்களின் வருகை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. (சித்தலிங்கம்.டி.பி., சைவசமயத் தோற்றமும் வளர்ச்சியும், ப.28) என்பர்.

  காரைக்காலம்மையார் தொடங்கிய சிவவழிபாடும் பக்தி இலக்கியப் படைப்பும் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் முதலியவர்களால் வளர்க்ப்பட்டன். திருமூலரது திருமந்திரம் இலக்கியத்தோடு தத்துச்சார்பை இயைத்தது. கருவூர்த்தேவர், திருவாலிஅமுதனார், சேந்தனார், திருமாளிகைத்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், புருடோத்தமநம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் பாடிய ஒன்பதாம் திருமுறையில் ஆங்காங்கு சைவம் சார்ந்த சாத்திரக் கருத்துக்கள் இடம்பெற்றன.

  காரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிரு ஆசிரியர்கள் எழுதிய பதினோராம் திருமுறை 40 நூல்களின் சைவசித்தாந்தத் தத்துவக் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

  பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்தமை ‘சைவம்’ எனும் சமயம் கட்டமைக்கப்பட்டதற்கான சான்றாகிறது. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார், திருமுறை ஆசிரியர்கள் உள்ளிட்ட சமயச் சான்றோர்களை மையமிட்டு எழுதிய பெரியபுராணம், சைவம் எனும் சமயம் சமுதாயத்தில் பொதுஜன செல்வாக்குப் பெற்ற நிலையின் உச்சத்தினைக் காட்டுகிறது எனலாம்.

  கி.பி.14-ஆம் நூற்றாண்டின் முன்னும் பின்னும் எழுந்த சாத்திர நூல்களான சிவஞானபோதம், சிவஞானசித்தியார், திருக்களிற்றுப்புயார், திருவுந்தியார், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை விளக்கம், சங்கற்பநிராகரணம் முதலிய 14 சாத்திர நூல்களும் சைவத்தைத் தத்துவத்தின் கொடுமுடியில் ஏற்றி வைத்தது.

  இப்பதினான்கு சாத்திர நூல்களுக்கு முன்னதான ஞானாமிர்தமும் சைவசித்தாந்த தத்துவத்தை விளக்கும் ஒரு நூலாகும். இச்சாத்திர நூல்கள் காலமுறைப்படி தொகுக்கப்பட்டு உள்ளன. உமாபதிசிவத்துக்குப் பின்னால் சாத்திர நூல்கள் வளரவில்லை எனினும், அவற்றை மக்களிடத்தில் கொண்டு செல்லும் முயற்சியாகச் சைவத் திருமடங்கள் தோன்றின. இவ்வாறு மணிமேகலைக்கு முன்னும் பின்னும் சைவம் தோன்றி, செழித்து வளர்ந்தது எனலாம்.

  தொகுப்புரை

  உலகின் மிகப் பழைய நெறியாகிய சைவசமயம் எத்தனையோ நூற்றாண்டுகளாக எத்தனையோ இடர்பாடுகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையில் நின்று நிலவி இன்றுவரை வந்துள்ளது என்பர். (சித்தலிங்கம்.டி.பி., மு.நூ., ப.161) அவ்வகையில் இதுகாறும் கண்டவற்றின் முடிவுகள் வருமாறு:

 • சிவனோடு சம்பந்தமுடையது சைவம்.

 • சைவம் காலப்பழமையுடையது என்றும், உலகளாவியது எனவும் சான்றுகள் வழி அறியமுடிகிறது.

 • ‘சிவன்’ என்ற சொல் திராவிட மூலத்தை உடையது.

 • பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதலியன சிவனை முழுமுதற்கடவுளாகக் குறிப்பிடுகின்றன. ‘சிவன்’ என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை எனினும், சிவன் பற்றிய விவரங்கள், தொன்மங்கள், வழிபாட்டு மரபுகள் பழந்தமிழில் இடம் பெறுகின்றன.

 • பழந்தமிழ்ச் சமுதாயத்தில் சிவன் பெற்ற முதன்மையைச் சிலம்பு எடுத்துரைக்கிறது. முதன்முதலாக ஐந்தெழுத்து மந்திரம் சிலம்பில் குறிப்பிடப்படுகிறது.

 • மணிமேகலை பதியாம் சிவனின் முதன்மையைத் தத்துவம் சார்ந்து சுட்டுகிறது.

 • பின்னர் காரைக்கால் அம்மையார் தொடங்கிய பக்தி இலக்கிய மரபு - திருமுறை - சைவத்தின் இலக்கியமாகவும் தோத்திரமாகவும் அமைகிறது.

 • பக்தி இலக்கிய காலத்தில் தோன்றிய பன்னிரு திருமுறைகளை அடுத்து எழுந்த ஞானாமிர்தம் உள்ளிட்ட சாத்திர நூல்கள் சைவ தத்துவத்தினை எடுத்துரைக்கின்றன.

 • துணைநூற்பட்டியல்

  1. அரங்கசாமி.கா., சிவசமய வரலாறு - பகுதி 1, அறிவரசு பதிப்பகம், 2010.

  2. கந்தசாமி.சோ.ந., தத்துவநோக்கில் தமிழிலக்கியம், மெய்யப்பன் பதிப்பகம், 2005.

  3. சந்திரா. சு., பழந்தமிழில் தொன்ம வகைமை வளர்ச்சி (அச்சிடப்படாத முனைவர் பட்ட ஆய்வேடு) ம.கா. பல்கலைக்கழகம், 2000.

  4. சாமிநாதையர்.உ.வே., (ப.ஆ.), மணிமேகலை, 1931.

  5. சித்தலிங்கம்.டி.பி., சைவசமயத் தோற்றமும் வளர்ச்சியும், திருவரசு புத்தக நிலையம், 1998.

  6. ____________ சிலப்பதிகாரம் (மூலம்) சித்தார்த்தா பப்ளிஷிங், 1978.

  7. சுப்பிரமணியன். ச. வே., (கையடக்கப்பதிப்பு), தொல்காப்பியம் தெளிவுரை.


  *****


  இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

  இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s1/p22.html
  

  ISSN 2454 - 1990
  சிறந்த நூலாசிரியர் பரிசு

  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)  வலையொளிப் பதிவுகள்
    பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

    எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

    சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

    கௌரவர்கள் யார்? யார்?

    தமிழ் ஆண்டுப் பெயர்கள்

    பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

    வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

    பண்டைய படைப் பெயர்கள்

    ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

    மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

    மரம் என்பதன் பொருள் என்ன?

    நீதி சதகம் கூறும் நீதிகள்

    மூன்று மரங்களின் விருப்பங்கள்

    மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

    மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

    யானை - சில சுவையான தகவல்கள்

    ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

    புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

    நான்கு வகை மனிதர்கள்

    தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

    மாபாவியோர் வாழும் மதுரை

    கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

    தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

    குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

    மூன்று வகை மனிதர்கள்

    உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


  வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


  
  சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

  தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                        


  இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
  Creative Commons License
  This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License