மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்
8. மணிமேகலையில் சாங்கியம்
முனைவர் வேல். கார்த்திகேயன்
மணிமேகலை, தமிழில் தோன்றிய இரண்டாவது பெருங்காப்பியம். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்வதாகும். தமிழில் தோன்றிய முதற் சமயக் காப்பியம் எனலாம். மேலும் கதைத் தலைவியின் பெயரால் பெயர் பெற்ற முதற்காப்பியம் என்றும் கூறலாம்.
சிலப்பதிகாரத்தின் இறுதியில் மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் (சிலம்பு நூற்காட்டுரை 17-19 அடிகள்) எனக் கூறப்படுவதால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது. பௌத்த சமயக் காப்பியமான மணிமேகலையில் 30 காதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலை இயற்றியவர் மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார். இந்நூலில் எளிய நடையில் அமைந்த பலகிளைக் கதைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இந்நூலுக்குச் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை துறவு என்றே பெயரிட்டார். சுருங்கக் கூறின், இந்நூலைச் சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம் என்று கூறினால் மிகையாகாது.
புத்த சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவே இந்நூல் இயற்ற்ப்பட்டது. தமிழில் முதன் முதலில் தோன்றிய சமயக் காப்பியம் இதுவேயாகும். சீத்தலைச் சாத்தனார் தாம் சௌத்திராந்திக யோகா சாரத்தினைச் சார்ந்தவர் எனினும் பௌத்தத்தின் பல பிரிவுகளையும் முற்றக் கற்ற மூதறிஞர். சுபக்கமாகிய தம் நெறியினை நிறுவுவதற்குமுன் மாற்றுச் சமய தத்துவ தருக்கங்களை முறையாகப் பயின்று பரபக்கமாகச் சிறு நூல்களை இணைத்துப் பிணைத்துள்ளார். அவைதாம் சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை , தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை என்பன. இவை முறையே புறச் சமயக் கோவை பௌத்த தருக்கம், பௌத்தத் தத்துவம் பற்றியன. அண்ட அமைப்பியல் பற்றிய பகுதி நூலாகச் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையினை அமைத்துள்ளார். சாத்தனார் இக் காப்பியத்தில் 27 ஆவது காதையாக விளங்குவது சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை. இக்காதையில் இடம் பெறும் பல்வேறு சமயங்களின் செய்திகளைத் தொகுத்துக் கூறுவதால் புறச் சமயக் கோவை என்றும் குறிப்பிடுவார்கள். இக்காதையில் அக்காலத்தில் நிலவிய சமயங்களை எடுத்துக் காட்டுவதோடு தம் சமயத்தை முன்னிலைப்படுத்தியும் முதன்மைப் படுத்துவதும் நோக்கமாக இருந்ததனை அறிய முடிகிறது. சாங்கியவாதி பற்றிய செய்திகளை மணிமேகலை நூலில் ( 27. சமயக் கணக்கா; தம் திறம் கேட்ட காதை 201- 240 அடிகள் வரை ) 40 அடிகளில் குறிப்பிட்டுள்ளார்.
காப்பியத் தொடக்கம் இந்திர விழாவாக உள்ளது. இந்திர விகாரத்தின் சிறப்புரைப்பதுதான் காப்பியத்தின் இறுதிக் குறிக்கோள். விழா நிகழ்ச்சிகளில குறிப்பிடத்தக்கதாகத் தத்துவவாதிகளின் அறிவு விளையாட்டு அமைந்துள்ளது. இதனைக் கீழ்வரும் பகுதி உணர்த்துகிறது.
ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்.
இக் கருத்தினையே இராதாகிருட்டிணன் Intellectual Tournment என்று கூறுவதும் ஒப்பு நோக்கத் தக்கது. காப்பியத் தொடக்கத்தில் கேட்கப் பெறும் சமயவாதம் புகார் நகரில் தான் நிகழ்ந்தது என எண்ணுவோம். அத்துடன் வஞ்சி மாநகரொலும் இச் சொற்போர்கள் மிகுதி என்பதைக் காப்பியத்தின் இறுதியில் 27 ஆவது காதையான சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை புலப்படுத்தும்.
சாத்தனார் குறிப்பிடுகின்ற பத்து தத்துவங்கள் அல்லது பத்து சமய வாதங்கள் பின்வருமாறு கூறலாம். அளவை வாதம், சைவ வாதம், பிரம வாதம், வைணவ வாதம், வேதவாதம், ஆசீவக வாதம், நிகண்ட வாதம், சாங்கிய வாதம், வைசேடிக வாதம், பூதவாதம் என்பனவாம். சாத்தனார் இறுதியில் ஐவகைச் சமயமும் அறிந்தனன் ஆங்கென் என்று இவ்வனைத்தையும் ஐந்தில் அடக்கிக் கூறினார். அறுவகைச் சமயம் என்ற தொகைச் சுட்டு, காலந்தோறும் ஆசிரியர் தோறும் வேறுவேறு சமயங்களை உணர்த்திற்று எனலாம்.
சாத்தனார் கூறியுள்ள பத்துத் தத்துவங்களையும் வைதீக தரிசனம் அல்லது ஆத்திகத் தத்துவம் என்றும் அவைதிக தரிசனம் அல்லது நாத்திகத் தத்துவம் என்ற இருபெரும் பிரிவிற்குள் அடக்கி விடலாம்.
ஆசீவகம், நிகண்ட வாதம், பூதவாதம் என்ற மூன்றுமே வேதங்களைப் புறக்கணித்த நாத்திகத் தத்துவங்களாகும். ஏனைய ஏழும் ஆத்திகத் தத்துவங்களாகும்.
இந்தியத் தத்துவக் களஞ்சியம் II என்னும் நூலில், சாங்கியம் பற்றி
(பக்க எண்கள் 9 - 59) விரிவாக இடம் பெற்றுள்ளதனைக் கீழ்வரும் பகுப்புச் செய்திகளால் அறிந்துணரலாம்.
சர்வ தரிசன சங்கிரகம் என்று சிறப்பித்துப் போற்றக்கூடிய சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் சாங்கிய மதத்தின் சாரமாக ஏறத்தாழ 38 அடிகளில்
(27: 202 - 240) தொகுத்துத் தந்துள்ளார்.
1. பிரகிருதி தத்துவத்தின் இயல்புகள்
(27: 202 - 206 அடிகள்)
2. பிரகிருதியினின்றும் பரிணாமம் அடையும் தத்துவங்கள்
(27: 206 -221 அடிகள்)
3. துணைப் பரிணாமம்
(27: 221 - 223 அடிகள்)
4. தத்துவங்களின் ஒடுக்கம்
(27: 224 - 226 அடிகள்)
5. புருட தத்துவத்தின் இயல்புகள்
(27: 227 - 232 அடிகள்)
6. புருடன் அறியவேண்டிய தத்துவங்களின் தொகுப்பு
(27 : 233 - 240 அடிகள்)
பிரகிருதி
எல்லாப் பொருள்களும் தோன்றுவதற்கு ஒரு மூல காரணம் வேண்டும். அதனையே பிரகிருதி (பகுதி) என்பர். இதிலிருந்து தோன்றுவன எல்லாம் விகுதிகள் எனப்படும். இன்று இலக்கணத்தில் குறியீடுகளாக வழங்கப்பெறும் பகுதி, விகுதி என்பன யாவும் சாங்கியத்தின் வழியில் வந்தவையே. உலகம் தோன்றுதற்குக் காரணமாகிய மூலப்பிரகிருதிக்கு அப்பால் அதற்கோர் முதல் வேண்டப்படவில்லை. சாங்கியத்தில் பொருள்களின் தோற்றத்திற்கு முதற்காரணம் மட்டுமே கூறப்பட்டது. தான் அனைத்திற்கும் முதலாய இருத்தலின் தனக்கொரு காரணம் இல்லாதது. இதனையே Causeless Cause என்பர். தான் ஒன்றினின்றும் தோன்றாமையால் புருடனைப் பாழ் என்று பரிபாடல் கூறுகிறது.
தன்னை அறிதற்கு அரிதாய் இருத்தல்
சாத்தனார் தனையறிவரிதாய் என்னும் வரிகளால் சுட்டிக் காட்டுகின்றார். பரிணாமப் பொருள்களை அறிந்து கொள்ளுதல் போல அவற்றிற்கு ஆதியாகவுள்ள மூலப் பொருளை எளிதில் அறிதல் இயலாது. இத்தன்மை பிரகிருதியின் இயல்பு என்று சாத்தனார் கூறுகின்றார். அறிதற்கு அரிதாயிருத்தல் பற்றி மூலப் பொருளை இல்பொருள் என்று இயம்புதல் கூடாது. இதற்குக் காரணம் மூலப்பகுதியின் இன்மை யன்று நுண்மையே என்று சாங்கியக் காரிகையும் பா.8 கூறுகிறது.
ஐம்புலன்களின் அறிவு எல்லைக்குட்பட்டதாகலின் மூலப் பகுதியை உணர்த்தற்குக் கருவியாதல் இல்லை. மூலப்பகுதியினின்றும் வெளிப்பட்ட தத்துவங்களைக் கருவியாகக் கொண்டுதான் அவை தோன்றுதற்கு ஏதுவாகிய மூலப்பகுதியின் உண்மையினை உய்த்துணர்கிறோம்.
தனையறிவதரிதாய் (27 : சமயக் 203 அடி)
முக்குணம்
சத்துவம், இராசதம், தாமசம் என்பன முக்குணங்களாகும். உலகப் பரிணாமத்தில் காணப்படும் வேறுபாடுகளுக்குச் சத்துவம், இராசதம், தாமசம் என்ற முக்குணங்களும காரணமாகும் என்று சாங்கியம் கூறுகிறது. பரிணமித்த பொருள்களில் காணப்படும் இம் முக்குண இயல்புகளும் முதற்காரணமாகிய மூலப்பிரகிருதியில் பொதிந்து கிடந்தனவே என்பதும் காரணத்தில் இருந்த இவை காரியத்திலும் வெளிப்பட்டன என்பதும் சாங்கிய மதத்தின் துணிந்த கருத்தாகும். மூலப்பகுதியை அறிய முடியாதது போலவே அதில் பொதிந்த முக்குணங்களையும் புலனறிவால் புரிந்து கொள்ளுதல் இயலாது. இக்கருத்தினை வெளிப்படுத்த சாத்தனார்
தான் முக்குணமாய் (27 சமயக் 203 அடி)
என்னும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.
மூலப்பகுதி
எல்லாப் பொருளும் தோன்றுவதற்குரிய இடம் மூலப்பகுதியாகும். புருடதத்துவம் தவிர, ஏனைய எல்லாத் தத்துவங்களும் அவற்றிலிருந்து பரிணமிக்கும் பொருள்கள் அனைத்தும் தோன்றுவதற்கு முதற்காரணமாக இருக்கின்ற காரணத்தினால் மாண்பாமை பொதுவாய் என்று குறிப்பிடுகின்றார்.
மனத்தின் நினைப்பிற்கும் எட்டாததாய் இப்பொதுத்தன்மையினைப் பிரகிருதி இயல்பாகவே எய்தியுள்ளது. மூலப்பகுதியும் அதன் பரிணாமமாகிய உலகும் நித்திய பொருள்களாகவே சாங்கியம் கூறுகிறது. இதனைப் பின்வரும் மணிமேகலைப் பாடலடிகள் உணர்த்தும்.
முன்நிகழ் வின்றி மாண்பமை பொதுவாய்
எல்லாப் பொருளுந் தோன்றுதற் கிடமெனச்
சொல்லுதன் மூலப் பகுதிசித் தத்து
மானென் றுரைத்த புத்தி வெளிப்பட்
டதன்கணா காயம் வெளிப்பட்ட டதன்கண்
வாயு வெளிப்பட் டதன்க ணங்கி
யானது வெளிப்பட்டதின்மண் வெளிப்பட்
டவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட்
டார்ப்புறு மனத்தாங் கார விகாரமும்
ஆகா யத்திற் செவியொலி விகாரமும்
வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும்
அங்கியிற் கண்ணு மொளியுமாம் விகாரமும்
தங்கிய வப்பில்வாய் சுவையெனும் விகாரமும்
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட் டிவற்றிற் றொக்கு விகாரமாய்
வாக்குப் பாணி பாத பாயுரு பத்தமென
ஆக்கிய விவைவெளிப்பட் டிங்கறைந்த
பூத விகாரத் தான் மலை மரமுதல்
ஓதிய வெளிப்பட் டுலகாய் நிகழ்ந்து
வந்த வழியே யிவைசென் றடங்கி
அந்தமில் பிரளய மாயிறு மளவும்
ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாம் ( 27 சமயக் 206 - 226 )
புருடதத்துவம்
உடல் உறுப்புகள் உள்ள உயிர்ப்பொருள்கள் எல்லாம், தம்மைத் தீர்மானிக்கும் தத்துவம் ஒன்றைக் கொண்டுள்ளது. அதனைச் சாங்கிய மதம் புருடன் என்னும் பெயரிட்டு வழங்குகிறது. ஆன்மா, புருடன், ஜுவன், உயிர் என்ற பல பெயர்களால் சுட்டப்படும். இந்தத் தத்துவத்தினை ஓர் எளிய உவமையின் வழி சாங்கிய மதத்தினர் தரும் விளக்கத்தினைக் கீழே காணலாம்.
பல்வேறு பொருள்களின் தொகுதியாக அமைந்த படுக்கையினைப் பார்த்து அதில் படுத்துப் பயன்கொள்வான் ஒருவன் வேண்டும் என்று உய்த்துணர்த்தல் போல, இந்திரியங்கள் முதலியவற்றின் தொகுதியாகவுள்ள உடம்பினைப் பார்த்து அதனைப் பயன்படுத்துவான் ஒருவன் வேண்டும் என்பதும் உய்த்துணரப்படும்.
எளிதில் அறியப்படுவதாகவும் முக்குணங்க்ள் அல்லாததாகவும் பிரகிருதியின் பொதுத் தன்மையினைப் பெறாததாகவும் பொருளின் பரிணாமத்திற்கு இடம் கொடுக்காததாகவும் பரிணாமப் பொருள்களையெல்லாம் புத்தி தத்துவம் அறிவதற்கு உணர்வாக விளங்கி ஒருபடித்தாக எல்லாத உடல்களிலும் பரவி அழியாததாய் அமைந்து உள்ளத்தில் உணர்வாகத் திகழ்வதுதான் புருடதத்துவம் ஆகும்.
மூல தத்துவத்தினைப் போலவே புருடனையும் நித்தியப் பொருளாகச் சாங்கியம் கொண்டது என்பதை நித்தியமாய் நிகழ்தரும் புருடன் என்று சாத்தனார் கூறுவதனால் அறியலாம்.
அறிதற் கெளிதாய் முக்குண மன்றிப்
பொறியுணர் விக்கும் பொதுவுமன்றி
எப்பொரு ளுந்தோன் றுதற்கிட மன்றி
அப்பொரு ளெல்லாம் அறிந்திடற் குணர்வாய்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்றுள வுணர்வாய் நிகழ்தரும் புருடன்
(27 :சமயக் 227 - 232 )
சாங்கியப் பரிணாமம்
சித்தம் எனப்படும் மூலப்பகுதியினின்று மான் எனப்படும் புத்தி தத்துவமும், அதனின்று ஆகாயமும், அதனின்று வளியும், வளியினின்று தீயும், தீயினின்று நீரும், நீரின்று நிலமும் வெளிப்பட்டன. மண் முதலியவற்றின் கூட்டத்தினின்று மனம் வெளிப்படும். மனத்தினின்று ஆங்காரத் தத்துவம் வெளிப்படும். ஆகாயத்தினின்று செவியாகிய பொறியும் ஓசையாகிய புலனும் காற்றினின்றும் மெய்யாகிய பொறியும் ஊறாகிய புலனும் தீயினின்று கண்ணாகிய பொறியும் ஒளியாகிய புலனும், நீரினின்று வாயாகிய பொறியும் சுவையாகிய புலனும் நிலத்தினின்று மூக்காகிய பொறியும் நாற்றமாகிய புலனும் வெளிப்பட்டன.
மெய்யாகிய பொறியின் விகாரமாய வாக்கு பாதம் பாணி(கை), பாயுரு (எருவிடும் குழி), உபத்தம் (கருவிடும் குழி) என்பன வெளிப்பட்டன. மேற்காணும் செய்திகள் பகரும் முதற்பரிணாமம் அல்லது தத்துவாந்திர பரிணாம விளக்கமாகும்.
இங்கறைந்த
பூத விகாரத் தான் மலை மரமுதல்
ஓதிய வெளிப்பட் டுலகாய் நிகழ்ந்து ( 27 சமயக் 221 - 223 )
பரிணாமப்பொருள்களின் ஒடுக்கம்
ஐம்பூதங்களும் தமக்குரிய தன் மாத்திரைகளிலும், தன்மாத்திரைகள் பூதாதி அகங்காரத்திலும், அகங்காரம் புத்தியிலும், புத்தி பிரகிருதியிலும் ஒடுங்குதலைக் கூறலாம்.
வந்த வழியே யிவைசென் றடங்கி
அந்தமில் பிரளய மாயிறு மளவும்;
ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாம் ( 27 சமயக் 224 - 226 )
சாங்கியம் வலியுறுத்தும் மெய்யுணர்வு (கைவல்யம்)
ஏனைய தத்துவங்களைப் போலவே சாங்கிய தரிசனமும் வினைக் கொள்கை, பிறவிச் சுழற்சிகளில் நம்பிக்கை கொண்டது. உய்தி பெறுவதற்கு வழிபாடுகள் வேள்விகள் முதலியனவற்றை வழிகளாகச் சாங்கியம் சாற்றவில்லை. தத்துவங்கள் இருபத்தைந்தினைப் பற்றிய தெளிந்த ஞானம் ஒன்றுதான் விடுதலைக்கு வழியாகும்.
பிரகிருதி வேறு புருடன் வேறு என்ற நூலறிவோ, வெறும் நம்பிக்கையோ. பிறவியினின்றும் விடுபடப் போதாது, சாத்தனார் புருடன் அறிந்து கொள்ள வேண்டிய தத்துவங்கள் இருபத்தைந்துள்ளன எனக் குறிப்பதால் இம்மெய்யறிவுதான் விடுதலைக்கு வழியெனக் கருதினார் எனக் கொள்ளலாம். இதனையே சாத்தனார் பின்வரும் பாடலடிகளால் குறிப்பிடுகின்றார்.
புலமார் பொருள்க ளிருபத்தைந்துள
நிலநீர் தீவளி யாகாயம்மே
மெய்வாய் கண்மூக்குச் செவி தாமே
உறுசுவை யொளியூ றோசை நாற் றம்மே
வாக்குப் பாணி பாதபாயுருபத்தம்
ஆக்கு மனோபுத்தி யாங்கார சித்தம்
உயிரெனு மான்மா வொன்றொடு மாமெனச்
செயிரறச் செப்பிய திறமுங் கேட்டு ( 27 : சமயக். 232 - 240 )
சாங்கிய முத்தியை அந்நுவ இன்பம் எனக் கூறுதற்கில்லை. இன்பதுன்ப நீக்கமேயாம். ஒருவகையில் பௌத்தரின் நிர்வாணப் பேற்றினைப் போல்வதாம்.
சாங்கியம் தத்துவ மெய்ஞ்ஞானம் ஒன்றையே விடுதலைக்கு உகந்த வழியெனக் கூறுகிறது.
சாங்கியமும் அளவையியலும்
ஒவ்வொரு தத்துவமும் தான் சாதிக்கும் உண்மைப்பொருளை உறுதி செய்ய அளவைகளையே கருவியாகக் கொள்ளும். சாங்கியம், பிரத்தியட்சம் (காட்சி), அனுமானனம் (கருதல்), ஆகமம் (நூல்) என்ற மூவகைப் பிரமாணங்களை மேற்கொள்கிறது.
சாத்தனார் சாங்கியக் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் செய்திகளாவன:
1. மனத்திலிருந்து அகங்காரம் வெளிப்படும்
2. மண் முதலிய ஐம்பூதக் கூட்டத்தினின்று மனம் வெளிப்படும்
3. ஆகாயம் முதலிய ஐம்பூதத்தினின்று ஞானேந்திரியம் வெளிப்படும்.
4. ஞானேந்திரியங்களில் ஒன்றாகிய மெய்யின் இடமாகக் கன்மேந்திரியங்கள் வெளிப்படும்.
5. ஐம்பூதத்தினின்றும் தன் மாத்திரைகள் வெளிப்படும்.
6. புத்தி தத்துவத்தினின்று ஆகாயமும் அதிலிருந்து வளியும் வளியினின்று தீயும் அதினின்று நீரும் நீரினின்று நிலமும் வெளிப்பட்டன.
நிறைவுரை
சாங்கிய மதத்தின் சாரமாகத் தன்னை அறிதலும், தானே முக்குணமும் ஆதலும், எல்லாப் பொருள்களில் தோன்றும் மூலப்பகுதியாகவும், புருடதத்துவம் பரிணாமங்களின் வளர்ச்சி ஒடுக்கம் பற்றியும், உயிரின் விடுதலை மெய்யுணர்வு பெறுதலே என்றும் இக்கட்டுரை வழி அறிய முடிகிறது. மேற்காணும் செய்திகள் வழி சாங்கிய நெறியின் தோற்றமும் வளர்ச்சியும், அதன் பல்வேறு பரிணாமங்களையும், அதன் தனித்தன்மைகளையும், தத்துவ விளக்கங்களும் தருக்கக் கருத்துகளும் ஆகிய பல செய்திகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.