தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
1. எஸ். இராமகிருஷ்ணன் சிறுகதைகளில் சமூக எதார்த்தம்
மு.செந்தில்குமார்
முன்னுரை
எஸ். இராமகிருஷ்ணன் நவீன இலக்கிய உலகில் மிகச் சிறந்த படைப்பாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சிறுகதை, கட்டுரை, பயண இலக்கியம், நாவல் மேலும் பலவற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறார். ஆங்கில இலக்கியம் படித்த இவர், தமிழ் இலக்கியத்தைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பவர். பல வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் சென்று அனுபவ வகையிலேயே தன் படைப்புகளைத் தருகிறவர். மேலை இலக்கியத்தை இவர் அதிகமாகப் படிப்பதால் மேலை இலக்கியவாதிகளைத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதிது புதிதாகக் கற்றும் கேட்டும், நுண்ணிதின் உணர்ந்தும், ஆய்வு செய்தும், நவீன இலக்கியத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல்துறை ஆற்றல் உள்ளதால், தமிழ் இலக்கியத்தில் மனப்போராட்டத்தைப் பற்றி சித்தரிப்பதைக் காணமுடிகிறது. சமூகத்தை இவர் படைப்புகளில் தத்துவார்த்தமாகப் பதிவு செய்கிறார் என்பதை எடுத்தியம்பும் முகமாக இக்கட்டுரை உருவாக்கப் பெற்றிருக்கிறது.
எதார்த்தம்
அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது எதார்த்தமாகும். நடந்ததை நடந்தவாறு கூறுவது எதார்த்தமாகும் என்று துரை.சீனிசாமி கூறுகின்ற விளக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது. “வாழ்க்கையை வாழ்கின்ற நிலைகளோடு சித்தரித்து என்ற தொடரிலேயே நடப்பியலில் கூறுகள் இருப்பதை உணரமுடிகிறது.
நடப்பதை அல்லது உள்ளதைப் பற்றிய உணர்வுப் பதிவைச் சாதாரண மனிதனுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிப் படைத்துத் தரும் கலைக்கூறு அமைந்ததுதான் நடப்பியல் இலக்கியம்” என்று சி. கனகசபாபதி கூறுவதிலிருந்து சாதாரண மனிதனின் அல்லது வாசகனின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் படைப்பது நடப்பியலின் முக்கிய அம்சமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சி. சு. செல்லப்பாவும் இதே கருத்தினர் என்பதை, நிஜ வாழ்வை ஒட்டியதாகப் படைப்பு இருந்தால் மனிதன் அதோடு சுபாவரீதியாகத் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்ள சாத்தியமாகும் என்பது அதன் கருத்து. ‘அதே விருப்பத்தில், அது நடைமுறை அனுசரனையை முன்வைத்துப் பிறந்தது’ என்ற கூற்றின் வழி அறியலாம். (எதார்த்தவாதம் ப.எண்.19, 20)
மேலே கூறிய கருத்துகளைப் பார்க்கும் போது எதார்த்தவாதம் என்பது சமூகத்தில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே பிரதிபலிப்பதாகும்.
சமூக எதார்த்தம்
மனிதர்களின் தொகுப்பே சமூகம், அதில் ஏழை, பணக்காரன், உயர்ந்தோர், தாழ்ந்தோர், முதலாளி, தொழிலாளி என்று பல பகுப்புக்கள் உள்ளன. அவற்றுள் காணப்படும் உறவுமுறைகளும், உறவுகளுக்குள்ளே நடைபெறும் வேறுபாடுகளும் சமூக எதார்த்தம். சமூக எதார்த்தம் என்பது குறிக்கோளை மையமிட்டுச் செயல்படுவது, அந்தக் குறிக்கோள் நிறைவேறா விட்டாலும் அதை ஏற்றுக் கொள்வதும் சமூக எதார்த்தம் அகும்.
பழமையான இனக்குழுச் சமூகத்தில் மனித வாழ்க்கையும், மனித மனமும் எளிய ஒரு வடிவத்தில் இயற்கையோடு இயற்கையாக அமைந்திருந்தன என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து, சொத்துடைமைச் சமூகம் உருவான பிறகும், ஒருத்திக்கு ஒருவன் என்று பாலியல் ஒடுக்குமுறைச் சமூகம் தோன்றிய பிறகும், எழுத்து மொழி கண்டுபிடிக்கப்பட்டு எழுதத் தெரிந்தவர் - கற்றவர், எழுதத் தெரியாதவர் - கல்லாதவர் என்று மனிதர்களை இரண்டாகப் பிரிக்கிற சமூக அமைப்புக் கட்டமைக்கப்பட்ட பிறகும், மனித வாழ்க்கையிலும் மனத்திலும் பலவிதமான சிக்கல்கள் உருவெடுத்து விட்டன. உண்மையில் சொல்லப் போனால் இப்படிப் புதிராகிப் போன சிக்கல்களையும் புரிந்து கொள்வதற்கான ஒருவகைப்பட்ட மொழியாலான முயற்சிதான் இலக்கியம். அதாவது, இந்த வாழ்க்கையையும், இயற்கையையும் நேரடியான ஒரு மொழியில் அறிவுக்குப் புரிய வைக்க முயல்வதுதான் அறிவியல் கல்வி என்றால், குறியீட்டு மொழிகளாலும், கதைகளாலும், எடுத்துரைப்பு முறைகளாலும் அதே வாழ்க்கையையும், இயற்கையையும் உள்ளத்திற்குப் புரிய வைக்க முயல்வதுதான் இலக்கியக் கல்வி ஆகும். எனவே, இலக்கியப் படைப்பில் ஈடுபட முனைகிற ஓர் எழுத்தாளர் அடிப்படையில் ஒரு ‘சமூக விஞ்ஞானியாகத்’ தன்னை வளர்த்தெடுத்துக் கொள்வதன் மூலமாகச் சமூகத்தில் நேற்று நிலவிய, இன்று நிலவுகின்ற, நாளைக்கு நிலவப் போகின்ற சிக்கல்களை எல்லாம் அடையாளம் கண்டு கொள்ளக்கூடியத் திறம் பெற்றவராக ‘சமூகப் பிரக்ஞை’ என்கிறோம்.
சமூகத்தில் பல முரண் சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆளுகின்றவர் - ஆளப்படுகின்றவர், இருப்பவர் - இல்லாதவர், கற்றவர் - கல்லாதவர், நகரத்தார் - கிராமத்தார், ஆண் - பெண், உயர்சாதி - கீழ்சாதி, பெரும்பான்மையினர் - சிறுபான்மையினர், மையத்தில் வாழ்பவர் - ஓரத்தில் வாழ்பவர், அகச்சமயத்தார் - புறச்சமயத்தார் என்று பல வழிகளில் இயங்கும் முரண் சக்திகளுக்கிடையே ஓயாது சிக்கல்களும் தீர்வுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்த முரண் சக்திகளின் தீவிரமான பிடிமானத்திற்குள் சிக்கிச் சிதைந்து போய் வாழ்விழந்து அலைபாய்கின்ற உயிர்கள் இந்த மண்ணில் ஏராளம். இத்தகைய மனிதத் துயரங்கள்தாம் சமூகத் துயரங்களாக நம்மோடு கூடவே தொடர்ந்து வருகின்றன. இத்தகையப் புள்ளிகளில் இருந்துதான் இலக்கியம் தனக்கான கருவிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.
எனவே சமூகத்தில் சிக்கல்கள் எழ முடியாத புதிர்கள், இவைகளால் ஏற்படும் மனத்துயரங்கள் இல்லையென்றால் இலக்கியம் இல்லை என்று சொல்லுமளவிற்கு இலக்கிய ஆக்கத்திலும் இலக்கிய வாசிப்பிலும் இவைகள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன.
(இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும் ப.எண் 103,104)
வறுமையும், கடனும்
நம் சமூகத்தில் பலதரப்பட்ட மனிதர்கள் இருக்கிறோம். உறவாக இருந்தாலும், உறவு அல்லாதவராக இருந்தாலும் ஒருவரிடம் கடன் வாங்கினால் திருப்பிக் கொடுத்திட வேண்டும். அது பெரும் கடனாக இருந்தாலும் சரி, சிறிய கடனாக இருந்தாலும் சரி. உறவினர்க்களுக்குள் கடன் வாங்கி, அதைக் கொடுக்க முடியாவிட்டால் உறவுகளுக்குள்ளேயே சண்டை வந்து விடுகிறது.
ஏழ்மையானவர்கள் உதவி மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். ஆனால், பணம் என்று வரும்பொழுது அவர்களுக்கும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. கடனைப் பெற்றவர் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றால் அது கைகலப்பு வரை சென்று உறவுக்குள் விரிசல் கூட விழுந்து விடுகிறது. கடன் வாங்கக் கூடாது என்ற அறிவுரை ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்வது, இல்லாமையும், வறுமையும் கடனை வாங்க வைத்து விடுகின்றன. இதனை,
“அவனைப்பார்க்காமலே கதிரேச மச்சான் போனார். பல தடவை முயன்று, அவர் கடன் அடைக்க மாட்டாமல் போனது. மேலும் பணம் கரைந்து கொண்டே போனது.
இன்றைக்குத் தேரடி திருப்பத்தில் வைத்துப் பார்த்தும் பேசாமல் நின்றுவிட்டான். அவனைப் பார்ப்பதற்காகவே வந்திருக்கிறார் அவன் ஆபிஸ் பக்கம் நடந்து வந்து கொண்டிருக்கிறார். எதிரே அவனைப் பார்த்தும் நின்றுகொண்டார். சைக்கிளை நிறுத்தி எதிரே நின்றார். அவர்தான் பேசினார்.
ரூவா தரமுடியுமா... முடியாதா... இப்ப எதுக்குக் கத்துறீங்க வாங்க காபி சாப்பிடலாம். பக்கத்தில் இருந்த காபி கடைக்குள் சைக்கிளை நிறுத்திச் சொன்னான், அவர் கிட்டத்தில் வந்தார்.
எப்ப தருவே!
இப்ப இல்ல அடுத்த மாதம் தாரேன்’
ஒரு மயிரும் வேணாம் எனக்கு. இப்ப வேணும். பேசாமல் இருந்தான். அவரே பேசினார் சொந்தக்காரன் மயிருன்னுகிட்டு உத்தியோகம் வேற இதுவே திடீரென்று குரலை உயர்த்தினார்.
இப்பக் குடுத்தாகனும் நீ எங்க போவியோ தெரியாது. எனக்குப் பணம் வேணும், உடனே கேட்டா எங்க போறது
பின்னே எதுக்குடா மயிரு செலவழிச்சே... எதிரே நாலைந்து பெண்கள் நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் சொன்னான், மரியாதையா பேசுங்க, அதான் தாரேன்னு சொல்ரேன்ல.
எதிர்பாராமல் சட்டென அவன் சட்டையைப் பிடித்து இழுத்துக் கதிரேசன் ஓங்கி ஒரு அறை விட்டார். பின்னாடி சாய்ந்து சைக்கிளில் விழுந்தான். சைக்கிள் சரிந்து முன் வீல் திரும்பியது.
பின்பக்கம் முதுகு என வலித்து எழுந்த வேகத்தில் அவரை ஓங்கி அறைந்தான். எதிர்பார்க்கவில்லை. கதிரேசன் பின்னாடி சாய்ந்து தரையில் விழுந்தார். சட்டென்று மேலேறி முகத்தில் மாறி மாறி அறைந்தான் யாரோ அவனை விடுவித்தார்கள்.
பலத்த சத்தத்தோடு அழும் குரல் கேட்டது. அவர்தான் அது. குரல் உறைத்து போய்க் கத்தினார். முகத்தை மூடிக்கொண்டு அழுதார் நிறைய கூட்டம் சுற்றிக் கொண்டது.
சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவன்தான் முதலில் வெளியேறி நடக்கத் தொடங்கினான். அவன் புறப்படுவதைப் பார்த்து சத்தமாய் அழுதார். வேஷ்டி, சட்டெயல்லாம் மண் அப்பியிருந்தது அவருக்கு.
வெயில் நெற்றியில் பட, சைக்கிளை சரிசெய்துகொண்டு வீட்டுக்குப்போனான். வீடு திறந்தே கிடந்தது. தூங்கி கொண்டிருந்தாள் சாந்தி, சைக்கிளை நிறுத்திவிட்டுப் போனான். முகம் எரிந்தது. பின்னாடி போய் தொட்டியில் இருந்து தண்ணீரை வாரி முகத்தில் அடித்துக் கொண்டான் எந்தக் குளிர்ச்சியும் இல்லை.
எதற்கோ அழ வேண்டும் போல் இருந்தது. கன்னம் வலித்தது எப்படியும் பணம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு வேறு வந்தது. முகத்தில் திரும்பவும் தண்ணீரை அடித்துக் கொண்டு கவிழ்ந்து உட்கார்ந்து அழுதான் சப்தம் அதிகமில்லாமல், உடல் மட்டும் குலுங்க முகத்தில் கைமூடிக் கொண்டு.
திண்டில் இருந்து ஒரு காகம் பார்த்துக் கொண்டிருந்தது”
(எஸ். இராமகிருஷ்ணன் கதைகள்.ப.எண்.26,27)
என்ற கதையின் வாயிலாக உணர முடிகின்றது. கடன் அன்பை முறிக்கும் என்ற சமூகக் கோட்பாட்டை இந்தக் கதைப்பகுதி நிரல் செய்வதைக் காணலாம். உறவு, பாசம், நட்பு இவை யாவும் கடன் என்று வந்தால் உதறி தள்ளப்படுவதை எஸ். இரா. கதையில் பதிவு செய்கின்றார். இது போன்ற நிகழ்வு சமூகத்தில் என்றென்றும் நிகழும் கசப்பான நிகழ்வு. இது கடன் பெற்றவரைக் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் புறக்காரணியாக இன்றளவும் சமூகத்தில் நிகழ்ந்த வண்ணம் இருப்பதை செய்தித்தாள் வழியாக அறிய முடியும். இதனையே மனம் மாறாமல் அப்படியே கதையில் வார்த்தெடுக்கின்றார் எஸ். இரா.
வலியோரும், எளியோரும்
வல்லான் வகுத்ததே வாழ்க்கை என்பார்கள். உலகம் என்பதே உயர்ந்தோர் மேற்றே. சமூகத்தில் ஏதேனும் ஒரு கெட்ட நிகழ்வு நடந்து விட்டால் ஏழை, எளிய மனிதர்களைத்தான் குறி வைக்கிறார்கள்.
வசதி படைத்தவர்கள் குற்றவாளி என்றாலும், சமூகம் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. இதுவே இன்றைக்குப் பெரும் வழக்காக உள்ளது. இதே வழக்கம் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையேயும் பின்பற்றப்படுகின்றது.
முதலாளி ஏதேனும் ஒரு தவறு செய்து, அவருக்கே தீங்கு நேர்ந்தாலும், அது தொழிலாளிகளைக் குற்றம் சாட்டுவதாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். பழைய காலத்தில் இன்னும் கொடுமைதான். ஆனால், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருக்கிறது. அது முற்றிலும் நீக்க வேண்டும் என்பதே நம் எண்ணமும் கூட. இதனை எஸ். இரா. தனது கதையில்,
“சென்னப்ப ரெட்டியார் அப்போது உடம்பு முடியாமல் கிடந்து தேறியிருந்தார். அவருக்குத் தலைமயிர் சிவப்படித்துப் போயிருந்தது. தாடி வளர்ந்து போயிருந்தது. அவர் வீட்டைக் கடந்து போய்க் கொண்டிருந்த கருப்பையாவை அவரேதான் கூப்பிட்டார். அவன் போனதும் சிரைக்க வேண்டும் என்றார்.
கருப்பையா வீட்டில் போய் சவரப்பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தான். அவன் வருவதற்கு முன்பே சின்னப்பலகை போட்டு உட்கார்ந்திருந்தார். வெளியே வெந்நீர்ப் பானை தெரிந்தது. முடி வெட்டும்போது முகத்தைப் பார்த்தான். பிரேதத்தின் முகம் போலவே இருந்தது. துர்நாற்றம் அடித்தது. அவனால் எதுவும் சொல்ல இயலவில்லை. முகம் தொங்கிப் போய்விட்டது கன்னம் இறங்கியிருந்தது. மயிர்கள் பூதாகரமாகத் தெரிந்தன. சவரம் பண்ணும்போது பார்த்தான். எண்ணெய்ப் பசையில்லாத முகம். அவர் முகம். அவர் விடும் மூச்சு அவன் கையில்பட்டது. முகத்தை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைத்தப்படியிருந்தார். இரண்டு தரம் தலையைச் சரி செய்தான். அவர் முகத்துக்கு முன்னால் ஈ ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. தலையை அசைக்கும் போது சொன்னான்.
தலையை அசைக்காதீங்க அப்பச்சீ... அவர் முறைப்பது தெரிந்தது. வைக்கோல் போரிலிருந்த கொசுக்கள் பறந்து இறங்கின. முகத்துக்கு எதிராக அவர் முகத்தை அசைத்ததும் காதோரத்தில் வெட்டிவிட்டான். அவருக்கு வந்த கோபத்தில் ஓங்கி அறைந்தார் கருப்பையாவை.
என்னடா சிரைக்கற நாயி உரிச்சிடுவேன் உரிச்சி. காதைத் தொட்டுப் பார்த்தார். ரத்தம் வழிந்தது. காய்ந்தது காயம். பின்னாடி விழுந்தவன் எழுந்து நின்றான். அவனால் பேச முடியவில்லை. பேசாமல் கவிழ்ந்த சாமான்களை எடுத்துப் பெட்டியில் போட்டான். பேசினால் அழுதுவிடுவது போல இருந்தது. எழுந்து போக முயற்சித்தான் அதை கண்டதும் கேட்டார்.
எங்கடா போற சிரைக்காம?
அவன் நின்று நின்று கொண்டேயிருந்தான்.
என்ன முறைக்கே.
தெரியாமதான அப்பச்சீ பட்டது, அதுக்கு ஏன் அடிச்சீங்க
அவர் பேசாமலிருந்தார்.
அவன் நின்றுகொண்டே இருந்தான்
அவர் கேட்டார், இப்ப அதுக்கு என்னடா செய்யனுங்கிற.
கொசு ரீங்காரமிட்டபடி அலைந்தது. அவன் கிளம்பியதும் அவர் வேகமாக எழ முயற்சிக்கும் போது கால் தடுக்கி கீழே விழுந்தார். அவர் போட்ட சப்தத்தில் பெண்கள் வெளியே வந்தார்கள் கருப்பையா நின்று கொண்டே இருந்தான். காதோரம் ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது.
சென்னப்ப ரெட்டியாரைத் தூக்க வந்த இளவட்டப் பயல்கள் காதோரம் வடியும் ரத்தத்தைப் பார்த்துவிட்டுக் கேட்டார்கள், என்னடா ஆச்சி
கத்திபட்டிருச்சு அப்பச்சி
எப்ப ஒழுங்கா சிரைச்ச, சிரைக்காம எங்க போற அவ்வளவு பெரிய ஆளாயிட்டாயா ரெட்டியார் எதோ சொன்னதும் கருப்பையாவுக்குக் கழுத்தோடு ஒரு அடி விழுந்தது. நாலைந்து அடிகளுக்குப் பின்பு விட்டு விட்டார்கள். தரையில் கிடந்த ரோமம் அவன் முகத்தில் ஒட்டிக் கொண்டது. அன்றைக்குக் கிளம்பி ஊருக்குப் போனவன், அங்கேயே இருந்து கொண்டான் சென்னப்ப ரெட்டியாரை எரித்துவிட்டுத் திரும்பிய கூட்டம் பேசியபடியே வந்தது. கருப்பையா சுடுகாட்டில் எரிவதைத் தூரத்திலே பார்த்தான். புகை எழுந்தது உயரமாகச் சென்னப்ப ரெட்டியார் வீட்டுக்குப் போன போது, வெறும் நாற்காலியை வெளியே போட்டிருந்தார்கள் ஆள் இருப்பது போலவே தெரிந்தது. கருப்பையா வந்துவிட்டான் என ஆட்கள் பார்த்துக் கொண்டார்கள். வீட்டின் பின்பக்கம் வழியாகப் போனான் கருப்பையா.
படப்புக்குப் பக்கம் கத்தரித்த தலைமையிர் அப்படியே கிடந்தது. ஒன்றுக்கிருப்பது போல உட்கார்ந்து அழுதான். கொசுக்கள் அவன் முகத்தைச் சுற்றியும் ரீங்காரமிட்டன”
(எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் ப.எண்.141-142)
என்ற கதையில் சமூக எதார்த்தத்தை அப்படியே படம்பிடிப்பதைக் காணலாம்.
முடிவுரை
எஸ். ராமகிருஷ்ணன் தமது சிறுகதைகளில் ஆங்காங்கே சமூக எதார்த்தத்தைப் பதிவு செய்வதை அறியமுடிகிறது. இவர் தனது கதைகளில் பெரும்பாலும் ஒடுக்கப்படும் சமூகத்தின் அவலத்தையே காட்சிபடுத்த முயன்றுள்ளார் என்பதையும்உணரமுடிகின்றது. சமூக எதார்த்தத்தைப் பதிவிட முடிந்தளவில் வட்டார வழக்கு சொற்கள், முதலாளித்துவ ஆணவப் பேச்சுப் போன்றனவற்றையும் மனம் மாறாமல் அப்படியே தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.