வினை, வினைப்பயன், முன்வினைப்பயன, தன்வினை, செய்வினை என்பன போன்ற வழக்காறுகள் மக்களிடையே காணப்படுகின்றன வினை என்பது செயலையும், வினைப்பயன் என்பது செயலின் விளைவையும், முன்வினை என்பது முற்பிறவியில் செய்த செயலையும், தன்வினை என்பது தான் இப்பிறவியில் செய்த செயலையும் செய்வினை என்பது பிறருக்குத் தாமோ, அல்லது தமக்குப் பிறரோ செய்த செயலையும் குறிக்கும். இலக்கண வழக்கில் குறிப்பிடப்படும் வினை என்பதற்குரிய பொருள் மேற்குறிப்பிட்ட சொற்களுக்குப் பொருந்தாது.
வினையை நல்வினை, தீவினை, கர்மவினை என்றும் பல்வேறு பெயர்களில் குறிப்பிடுவர். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்பவே நமக்குப் பலன்கள் கிடைக்கும். அது ஒருபோதும் மாறாது. இதனையே கர்மயோகம் தெளிவுறுத்துகிறது. செய்த வினையின் வினைப்பயனை ஒவ்வொருவரும் அனுபவித்துத்தான் தீரவேண்டும். அது இயற்கை ஆகும். இவ்வினைப்பயனிலிருந்து யாரொருவரும தப்பிக்க முடியாது. இறைவனுடைய அருள் இருந்தால் மட்டுமே வினைப்பயனைக் கடக்க இயலும். இருப்பினும் ஒருவன் செய்தவினைப் பயனை அவர் எத்தனை பிறவிகள் மாறிப் பிறந்தாலும், அப்பிறவியில் எஞ்சியிருக்கும் வினையின் பயனைத் துய்க்க வேண்டும்.
இத்தகைய அரிய தத்துவத்தை உணர்ந்து இறைவனுடைய அருளைப் பெற்றவனே ஞானியாவான். அவனே சித்தந் தெளிந்த சித்தனாவான். இவ்வினைக் கோட்பாட்டினை நமது முன்னோர்கள் பழமொழியின் வாயிலாக எளிமையாக விளக்கிச் சென்றுள்ளனர்.
நாம் என்ன செய்கிறோமோ அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. நல்லது செய்தால் நல்லதும் தீயது செய்தால் தீயதும் கிடைக்கும் என்று கூறுவர். அதனால் இயன்றவரை நல்ல செயல்களையே செய்ய வேண்டும். பிறருக்குக் கடுகளவேனும் தீங்கு தரக்கூடியனவற்றைச் செய்தல் கூடாது. அது பாவம் ஆகும். பாவச் செயலும் ஆகும். ஒருவன் பாவச் செயலைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அவனுக்கு இறையருள் கிட்டாது. வீடு பேறாகிய முக்தி கிடைக்காது. வீடுபேற்றை அப்பாவச் செயல் அழித்துவிடும். இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்பதனை,
‘‘வினைவீட்டைக் கெடுக்குமாம்
விருந்தாளியா வந்தவன் பெண்டாட்டியக் கெடுத்தானாம்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இங்கு வீடு என்பது நாம் வாழும் வீட்டைக் குறிப்பிடவில்லை. முக்தியாகிய வீடு பேற்றினைக் குறிக்கின்றது.
‘‘அறம், பொருள், இன்பம் வீடடைதல் நூற்பயனே’’
என்று நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்கள் நூற்பயன் பற்றிக் கூறுவது இதற்குப் பொருந்தும். நாம் தீவினைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் அது இறைவனிடம் இருந்து நம்மைப் பிரித்துவிடும். நமக்குக் கிடைக்கக்கூடிய வீடுபேற்றினைக் கெடுத்துவிடும். விருந்தாளியாக வந்தவன் தனக்குரிய மரியாதையுடன் நடந்து கொள்ளவேண்டும். அதைவிடுத்து விருந்துண்ட வீட்டில் உள்ள விருந்தளித்தவரின் மனைவியைக் கெடுப்பது பெரும்பாவச் செயலாகும். அது கொலைபாதகத்திற்குச் சமமாகும். அத்தகைய இழிசெயலைச் செய்தல் கூடாது. வினை வீட்டுப்பயனைக் கெடுப்பது என்பதற்கு நமது செயல்பாடுகளின்படியே வீட்டில் செல்வம் கொழிக்கும். இழிந்த செயல்களாகிய தீவினைகளைச் செய்தால் வீட்டின் செல்வம் அழிந்து வறுமையே வீட்டில் தங்கும் எனவும் பொருள் கொள்ளலாம். நமது முன்னேற்றத்திற்கும், தாழ்விற்கும் நமது செயல்களே காரணம் என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது. நல்வினை ஆற்றி வீடுபேறாகிய முக்தி பெற ஒவ்வொருவரும் முயல வேண்டும் என்பதனையும் இப்பழமொழி வலியுறுத்துகிறது.
எதைக் கொடுக்கிறோமா அதுவே உனக்குத் திரும்பக் கிடைக்கிறது என்பது கீதையின் வாக்கியமாகும். வங்கியில் நாம் சேமித்து வைத்திருக்கம் பணத்தைப் பொருத்தே நாம் பிறருக்கோ நமக்கோ காசோலை எழுதிக் கொடுக்க முடியும். நாம் வங்கியில் போட்டிருக்கும் பணமே நமக்குக் கிடைக்கும். கூடுதலாக நாம் எடுக்க இயலாது. அதுபோன்றுதான் நாம்பிறருக்குச் செய்யும் உதவிகளைப் பொருத்தே நமக்கும் உதவிகள் கிடைக்கும். பிறருக்கு நாம் எந்தவிதமான செயல்களைச் செய்கிறோமோ அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்ற வாழ்வியல் தத்துவத்தை,
‘‘வினைவிதைத்தவன் வினையறுப்பான்
தினைவிதைத்தவன் தினையறுப்பான்’’
என்ற பழமொழி புலப்படுத்துகிறது.
நல்வினை, தீவினை இவற்றில் எதைச் செய்தானோ அதனையே ஒருவன் திரும்பப் பெறுவான். தினையை விதைத்தால் தினையையே அறுவடை செய்ய இயலும். தினையை விதைத்துவிட்டு நெல்லையோ, கொல்லையோ, வேறு பிற தானியங்களையோ நாம் அறுவடை செய்ய இயலாது. நல்வினை நல்லாக்கத்தையும், தீவினை தீயவிளைவுகளையும் தரும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து வாழ்தல் வேண்டும். தவறினால் வாழ்வில் துன்புற நேரிடும் என்ற தத்துவத்தை இப்பழமொழி புலப்படுத்துகிறது.
ஒருவன் செய்யக் கூடிய செயலின் விளைவு முதலில் அவனையே தாக்கும். அவன் தான் செய்வது யாருக்கும் தெரியாது என்று இருந்து விட்டாலும் அவன் செய்த தீயவினை அவனை அழித்துவிடும் தன்மை வாய்ந்தது. ஓட்டைப் பானையும், உடைந்த பானையும் வீட்டிிருந்தால் அவை வீட்டின் இயல்பான தன்மையைக் கெடுத்துவிடும். நல்லனவற்றையே ஒருவன் செய்தல் வேண்டும். மாறாகத் தீயனவற்றைச் செய்தால் அவை அவ்வினையைச் செய்தவனையே அழித்துவிடும். இதனை,
‘‘தன்வினைத் தன்னைச்சுடும்
ஓட்டைப் பானை வீட்டைக் கெடுக்கும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஒருவன் செய்தவினையே அவனை அழித்துவிடும். ஓட்டைப் பானை என்பது உடலைக் குறிக்கும் குறியீடாகக் கொள்ளலாம். உடம்பில் பல ஓட்டைகள் உள்ளன. இத்தகைய ஓட்டைப் பானையாகிய உடம்பு தீவினை செய்தால் வீடுபேறு கிட்டாது. அதாவது உடலாலோ, மனதாலோ செயலாலோ ஒருவன் தீங்கிழைத்தால் அது இறைவனின் அருளாகிய வீடுபேறு கிடைக்காது செய்துவிடும்.
நல்லனவற்றைப் புண்ணியம் என்று கூறுவர். அத்தகைய புண்ணியத்தை ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும் என்ற வீடுபேறு அடையக்கூடிய வழியை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுற விளக்கியுள்ளனர்.
மனிதனுக்கு ஏழு பிறவிகள் உள்ளன என்று முன்னோர்கள் கூறுவர். ஆறு பிறவிகளை எடுத்து பின்னர் இறுதியாகவே மிக உயர்ந்த பதவியான மனிதப் பிறவியினை எடுத்துள்ளோம். இப்பிறவியில் நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப மீண்டும் பிறத்தலோ, பிறவி முடிந்து இறையருளான வீடு பேற்றினை அடைதலோ நடக்கும்.
மேலும் ஒருவர் செய்தவினை அவரைத் தவிர வேறுயாரும் அனுபவிக்க முடியாது. சிலம்பில் வரும் கோவலன் முற்பிறவியில் படைவீரனாக இருந்தபோது வணிகநிமித்தமாக வந்த ஒருவணிகனை ஒற்றன் எனப் பழிசுமத்தி அரசனிடம் இழுத்துச் சென்று அவ்வணிகன் கொலையாவதற்குக் காரணமாக இருந்தான். அப்பிறவியில் வினைப்பயனை அடைய முடியாத நிலையில் கோவலனாகப் பிறந்து அந்தப் பிறவியல் முற்பிறவியில் செய்த வினையின் பாவத்தை அடைந்தான். இவன் அவ்வணிகனைப் பொய்க்குற்றம் சுமத்திக் கொலைசெய்து விடுகின்றான்.
‘‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’’
என்பதனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வள்ளுவரும்,
‘‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்’’(380)
என்று ஊழ்வினை(செய்தவினை) குறித்து குறிப்பிடுகிறார்.
அவரவர் செய்த வினையின் பயனை அவரைச் சார்ந்தவர்கள் தான் அனுபவிக்க வேண்டும். அதைவிடுத்துத் தன்னைச் சார்ந்த உறவினரோ பிறரோ அனுபவிக்க முடியாது. அதனை ஒரு கதையின் வாயிலாக விளக்கலாம்.
ஒரு காட்டில் கொள்ளைக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அக்கூட்டத்திற்கு ராட்சஷன் என்பவன் தலைவன். அவன் கொலைப் பழிக்கு அஞ்சமாட்டான். வருவோர் போவோரையெல்லாம் துன்புறுத்தி அதன் மூலம் பொருளைக் கொள்ளையடித்தான். பொருள் கிடைக்காவிடில் அவர்களைக் கொன்றான். இவ்வாறு பல நாள்கள் தொடர்ந்து கொடுமைகளைச் செய்து வந்தான்.
ஒரு நாள் அவன் இருக்கும் காட்டின் வழியே நாரதர் வந்து கொண்டிருந்தார். நாரதரைக் கண்ட அவன் ஓடிவந்து வழிமறித்தான். பொருள்களைக் கொடு என்று கேட்டான். நாரதர் அவனைப் பார்த்து,
‘‘அப்பா நீ கேட்டதையெல்லாம் கொடுத்துவிடுகிறேன். நான்கேட்கும் வினாக்களுக்கு நீ விடை கூறிவிடுகிறாயா?’’
என்று பொறுமையுடனும், அமைதியுடனும் கேட்டார்.
அதற்கு அவனும் சரி என்றான்.
நாரதர்,
‘‘நீ யாருக்காகக் கொள்ளையடிக்கின்றாய்?’’
என்று கேட்டார். அதற்கு ராட்சஷன்,
‘‘என் மனைவி, மக்களைக் காப்பதற்காகக் கொள்ளையடிக்கிறேன்’’என்றான்.
உடன் நாரதர்,‘‘நீ செய்யக் கூடியது பெரும்பாவம். இது உன்னைச் சும்மா விடாது. நீதான் இது அத்தனைக்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டும்’’ என்றார்.
அதற்கு அவனோ,‘‘சுவாமி நான் மட்டும் எப்படி இதற்குப் பொருப்பாவேன். என்னுடைன் இருப்பவர்களுக்கும், உனது உறவினர்களுக்கும் இது சேருமல்லவா?’’என்றான்.
அதற்கு நாரதர்,‘‘உனது பொருளில் வேண்டுமானால் அவர்கள் பங்கு போடுவார்கள். பாவத்தில் பங்கு போட்டுக் கொள்ளமாட்டார்கள். இதனை உணர்ந்து கொள்’’. என்றார்.
அதற்கு, ‘‘இல்லை..இல்லை…எனது மனைவி மக்கள் அனைவரும் என்மீது உயிரையே வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் எனது பாவத்தில் பங்கு கொள்வர். நீங்கள் புரியாது பேசுகிறீர்கள்’’ என்றான் ராட்சஷன்.
நாரதர், ‘‘அப்பா உன்னைச் சார்ந்தவர்கள் உன்மீது பற்றுடையவர்கள் எனகிறாய். நான் ஒரு சோதனை வைக்கிறேன். அதன்படி நீ நடக்க வேண்டும். அப்படி நீ நடந்தால் உண்மை நிலையை உணர்ந்து கொள்வாய். உண்மையை அறிந்து கொண்டபின் நீ நான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும். இதற்கு நீ சம்மதிக்கின்றாயா?’’ என்று கேட்டார். ராட்சஷன், ‘‘இதற்கு நான் சம்மதிக்கின்றேன். என்னைச் சார்ந்தவர்கள் என்மீது பற்றில்லாமல் இருக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொண்டபின் உங்களது அடிமையாகிவிடுவேன். இது சத்தியம்’’ என்று கூறினான்.
நாரதர் அவனிடம் ஒரு குளிகையைக் கொடுத்து, ‘‘இதனை உனது வாயில் அடக்கிக் கொள். உன் வீட்டிற்குச் சென்றவுடன் சிறிது நேரத்தில் இறந்தவன் போல் ஆகி கீழே விழுந்துவிடுவாய். ஆனால் அங்கு நடக்கும் அனைத்தையும் உன்னால் அறிந்து கொள்ள முடியும். நான் கூறும்போது நீ உன் வாயிலிருந்து குளிகையைக் கீழே துப்பிவிட்டால் பழையபடி நீ ஆகிவிடுவாய். நீ போ நான் சற்று நேரம் கழித்து வருகிறேன்’’ என்றார்.
அவனும் நாரதர் கூறியதைக் கேட்டுக் குளிகையை வாயில் போட்டுக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்றான். சென்ற உடனேயே இறந்தவன் போன்று கீழே விழுந்தான் .
அவனுடைய மனைவி, தாய், தந்தை, குழந்தைகள் அனைவரும் ஓடோடி வந்து ஓவென்று கதறி அழுதனர்.
எனது உயிரை எடுத்துக் கொண்டு எனது கணவரைப் பிழைக்கச் செய் தெய்வமே…’’ என்று ராட்சஷனின் மனைவி கதறினாள்.
அந்த நேரத்தில் நாரதரும் வந்தார். நாரதரைப் பார்த்து எல்லோரும் எப்படியாவது ராட்சஷனின் உயிரை மீட்டுத் தருமாறு மன்றாடினர்.
நாரதர்,‘‘நான் சொல்வதை நீங்கள் யாராவது ஒருவர் செய்ய முன்வந்தீர்களேயானால் ராட்சஷன் பிழைக்கக் கூடும். செய்வீர்களா?’’ என்று கேட்டார்.
அவர்களும் சரி என்றனர். அதே சமயத்தில் அங்கு ராட்சஷனின் நண்பர்களம் வந்தனர். அவர்களும் நாரதர் செய்வதற்குச் சரி என்றனர்.
நாரதர் முதலில் ராட்சஷனின் மனைவியையும், குழந்தைகளையும் பார்த்து, ‘‘நீங்கள், ராட்சஷனின் பாவத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அவன் பிழைத்துவிடுவான்’’ என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் அனைவரும், ‘‘எங்களைக் காப்பாற்ற வேண்டியது அவருடைய கடமை. அவர் செய்த பாவம் எங்களைச் சாராது. அவர்தான் அப்பாவத்தை அனுபவிக்க வேண்டம். அவரது பாவத்தை நாங்கள் பங்கு போட முடியாது’’ என்று கூறிவிட்டனர்.
அவர்களைப் போன்றே அவனது தாய், தந்தை, நண்பார்கள் அனைவரும் கூறிவிட்டனர்.
இதனைக் கேட்ட நாரதர், ‘‘சரி உங்களில் யாராவது ஒருவர் தங்களது உயிரைக் கொடுக் முன்வந்தால் இவன் உயிர் பிழைத்து விடுவான். உயிரைத் தருகிறீர்களா?’’ என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், ‘‘இவனுக்காக நாங்கள் ஏன் இறக்க வேண்டும். அவன் பாவம் செய்தான் அதன் பலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும். அனுபவித்து இறந்து விட்டான்.
நாங்கள் எங்கள் உயிரை விடமுடியாது’’ என்று ஒருமித்த குரலில் கூறிவிட்டனர்.
நாரதர் சிரித்துக் கொண்டார்.
இதனையெல்லாம் கேட்டுக் கொண்டு இறந்தவன் போல் படுத்திருந்த ராட்சஷனைப் பார்த்து நாரதர், ‘‘ம்…ம்..குளிகையைத் துப்பிவிட்டு எழுந்து வா'’ என்றார்.
அவனும் எழுந்தான்.
அவனிடம் ஓடிவந்த தனது உறவினர், நண்பர்கள் அனைவரையும் பார்த்து, ‘‘நான் யார் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் புரியாது இதுவரை வாழ்ந்து விட்டேன். என்னைப் பின்பற்றாதீர்கள். எனக்கும் உங்களுக்கும் இனி யாதொரு தொடர்புமில்லை’’ என்று கூறிவிட்டு நாரதரிடம் வந்து, ‘‘சுவாமி இன்றிலிருந்து நான் உங்களது அடிமை’’என்று கூறினான்.
நாரதர் அவனை அழைத்துக் சென்று ராம நாமத்தை அவனுக்கு உபதேசித்துத் தவமிருக்கும்படி கூறினார்.
அவனும் பல ஆண்டுகள் தவமிருந்தான்.
அவனைச் சுற்றிலும் கரையான் புற்றுக் கட்டியது.
இறையருள் பெற்ற அவன் புற்றிலிருந்து எழுந்தான். வான்மீகி என்ற பெயர் பெற்றான்.
உலகோர் புகழும் இராமகாவியத்தை எழுதிப் புகழ் பெற்றான்.
அவரவர் செய்த வினையை அவரவர் அனுபவிக்க வேண்டும் என்பதை இக்கதை உணர்த்துகிறது. இக்கதையின் கருத்தை விளக்குவதாக,
‘‘செய்தவினை செய்தாரோடு’’
என்ற பழமொழி உணர்த்துகிறது.
அவரவர் செய்த வினை அவரவரோடுதான் இருந்து பலனைக் கொடுக்குமே தவிர பிறரை எவ்வகையிலும் பாதிப்பிற்கு உள்ளாக்காது என்ற தத்துவததை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
நல்வினைகளைச் செய்து இறையருளை ஒவ்வொருவரும் பெற முயற்சிக்க வேண்டும். நெறிதவறி பாவச் செயல்களைச் செய்தால் அவை வீட்டின்பத்தை நல்காது. மாறாக பல துன்பங்களை நல்கும். நல்வினைகளைச் செய்து தீவினைகளை அகற்றி இறையருளைப் பெற்று உன்னத வாழ்வு வாழ்வோம். வாழ்வும் மனமும் நிறையும்.