பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
14. பாய்
தொடக்க காலத்தில் மனிதன் கிடைத்த இடத்தில் படுத்துறங்கினான். கல், முள், புல், பாறை உள்ளிட்டவை எதுவாக இருந்தாலும் அதில் விலங்குகளைப் போல் துயின்றான். நாகரிகம் சற்று வளர வளரத் துயில்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டான். தழைகளை உதிர்த்து அதன்மீது படுத்து இன்பங் கண்டான். அது மட்டுமல்லாது பாதுகாப்பான இடததில் தங்கி உயிரைக் காத்துக் கொள்ளக் கருதிய மனிதன் மரத்தின்மேல் பரண் அமைத்து அதில் தங்கிப் படுத்துறங்கினான். அதுபோல் இயற்கையாக அமைந்த குகைகளில் பாறைகளைப் படுப்பதற்கு ஏதுவாக அமைத்துக் கொண்டு அதில் துயின்று மகிழ்ந்தான்.
இப்படுக்கைகளை அமளி, மஞ்சம் என்று பல்வேறு வகைகளில் குறிப்படுவர். மலரினால் அழகுபடுத்தினால் மலர்ப்படுக்கை என்றும் பஞ்சு மெத்தையாலான படுக்கையை மெத்தைப் படுக்கை என்றும் இப்படுக்கை பலவிதமான பெயர்களில் வழங்கப்பெறுவது நோக்கத்தக்கது. மேலும் பல்வேறு விதமாக படுக்கைகள் இருப்பினும் பெரும்பாலோர் பாயினையே அதிகம் பயன்படுத்துவர். கோரைப் புல்லினால் தயாரிக்கப்பட்ட பாய் கோரைப் பாய் என்றும், பனை ஓலையால் தயாரானதை ஓலைப் பாய் என்றும் ஈந்தின் ஓலைகளால் தயாரான பாய்களை ஈச்சம்பாய் என்றும் வழங்குவர். இன்று தட்டையாகவும் மிருதுவாகவும் உள்ள ஞெகிழிகளாலும்(பாலீதின் வயர் பாய்) பாய்கள் தயாரிக்கப்பட்டு மக்களால் பயன்படுத்தப்படுவது நோக்கத்தக்கது. இப்பாயினை வைத்து நமது முன்னோர்கள் பல்வேறுவிதமான பண்பாட்டு நெறிகளைத் தெளிவுறுத்தியுள்ளனர்.
உழைப்போரின் நிலை
இரவும் பகலும் கடுமையாக உழைப்பவன் ஏழ்மை நிலையிலேயே இருக்கின்றான். அவன் எவ்வளவு உழைத்தாலும் வாழ்வில் வசதிவாய்ப்பு என்பது ஏற்படாது வறுமையில் வாடும் நிலையே ஏற்படுகிறது. உழைப்பாளரின் இத்தகைய நிலையை,
‘‘காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா –என்தோழா
பசையற்றுப் போனோமடா’’
என்ற தோழர் ஜீவாவின் பாடல் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. இத்தகைய சிந்தனையை,
‘‘பரக்கப் பரக்கப் பாடுபட்டுக் கடைசியில
படுக்கப் பாயில்லைன்ன கதைதான்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
கடுமையாக (பரக்க) உழைத்தாலும் இறுதியில் படுப்பதற்குக்கூட பாய் இல்லாத வறுமை நிலையே இன்று உழைப்பாளர்கள் வாழ்க்கையில் நிலவுகிறது என்ற எதார்த்தத்தை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது. உழைப்பாளி உழைத்துக் கொண்டே இருக்கின்றான். ஆனால் உழைக்காது உழைப்பைச் சுரண்டுபவன் சுரண்டிக் கொழுத்துக் கொண்டே இருக்கின்றான். இஃது மாற வேண்டும். உழைப்பவன் முன்னேறினால் மட்டுமே இச்சமுதாயம் உயர்நிலை அடைய முடியும் என்ற பொதுவுடைமைச் சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு நல்குகின்றது.
ஏன் வறுமை நிலை நீடிக்கின்றது என்பதை உணர்ந்து சிந்தித்து அறிந்து அதற்கு ஏற்றாற்போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். உழைத்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை என்று கூறும் நிலை மாற வேண்டும் என்ற சிந்தனையையும் இப்பழமொழி மனதில் ஏற்பட வைக்கின்றது.
வாழ்க்கையில் நம்பிக்கை
உழைப்பவன் எப்பொழுதுதான் முன்னேற இயலும். அவனால் முன்னேற்றத்தை அடைய இயலாதா? என்று பல வினாக்கள் எழுகின்றது. உழைப்பவருக்கு உறுதியாக நல்வாழ்வு உண்டு. திட்டமிட்டு உழைத்தால் வாழ்வில் உயரலாம். இதனை உழைப்பவர் நம்புதல் வேண்டும். இந்த நம்பிக்கை அவர்களது மனதில் உறுதியாக இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தைக் காண இயலும். இதனை அறியாது நம்பிக்கையற்று இருத்தல் கூடாது.
உழைக்காது உயர்ந்தால் என்றாவது ஒருநாள் அதற்கு தீய, கொடுமையான முடிவே ஏற்படும். இது உறுதி. உழைப்பின் வாயிலாக உயர்ந்தவர் எப்பொழுதும் தாழ்நிலை அடைந்தார் என்று கூறஇயலாது. உறுதியாக உழைப்பவர் ஒரு நாள் முன்னேற்றம் அடைவார் என்ற நம்பிக்கையை,
‘‘பாயில படுத்தவன்
பாயோட போகமாட்டான்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
வறுமையில் வாடும் உழைப்பவன் வறுமையில் வாடியே இறந்து போவதில்லை. என்றாவது ஒருநாள் அவன் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பான். இது உலக இயற்கை. பாயில் படுத்துறங்குபவனும், மெத்தையின் மீது படுத்துறங்குபவனும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பது இல்லை. அவர்களது வாழ்வில் மாற்றம் நிகழும். அப்போது கீழது, மேலாய் நிலை மாறி பாயில் படுத்துறங்கும் நிலையில் உள்ளவன் மெத்தையிலும், மெத்தையில் படுத்துறங்குபவன் பாயிலும் படுக்கும் நிலை வரும். இதனை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
அனைவருடைய வாழ்விலும் மலர்ச்சி என்பது வந்தே தீரும். இதனை உணர்ந்து மனம் தளராது நமது குறிக்கோளை நோக்கிப் பயணித்தல் வேண்டும் என்ற உயரிய வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனையை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.
முயற்சி
முன்னேற்றம் என்பது தானாக ஏற்பட்டுவிடாது. முயன்று உழைக்கின்ற போதுதான் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிதான் வாழ்க்கையை உயர்த்தும். தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தால்தான் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண முடியும். தொடர்ந்து மனிதன் முயன்று கொண்டே இருந்ததால்தான் இன்று அளப்பறிய வெற்றிகளை மனிதன் பெற முடிந்தது எனலாம். சோம்பி இருந்தால் வாழ்க்கைச் சூம்பிப் போகும். வறுமை தாண்டவமாடும். சிலர் தூங்கிக் கொண்டே வெறுமனே பொழுதைப் போக்கிக் கொண்டே இரப்பர். பின்னர் ஒரு வளர்ச்சியும் ஏற்படவில்லையே என்று கூறிக் கொண்டிருப்பர். சோம்பலுக்கு இடங்கொடுத்தால் எங்ஙனம் முன்னேற இயலும்? இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். பட்டுக்கோட்டையாரும்,
‘‘நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கொடுத்துவிட்டு
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்’’
என்று இத்தகையோரைக் காட்சிப்படுத்துகிறார்.
படுத்துறங்கிப் பொழுதைக் கழிப்பதால் நோய் வளரும். வாழ்வில் மலர்ச்சி ஏற்படாது என்பதனை,
‘‘பாயில படுத்து நோயில போகாதே’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
முயற்சி செய்யாது படுத்துறங்கி நோயில் இறந்து போகாதே என்பதுடன் முயற்சித்து இறந்தாலோ, தோவிவியடைந்தாலோ தான் வாழ்வு வளமுறும் என்றும் இப்பழமொழி தெளிவுறுத்துவது சிந்தனைக்குரியதாகும். இப்பழமொழியின் பிழிவாக,
‘‘நடந்தால் நாடெல்லாம் உறவு
படுத்தால் பாயும் கூடப்பகை’’
என்ற பொன்மொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பீத்தல் பாய்
கீழான குணமுடைய அற்பத்தனமானவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் பிறருக்குத் தீங்கு நேரும். அவர்கள் மகிழ்ச்சியின்றி இருந்தாலும் மகிழ்வுடன் இருந்தாலும் அதனால் பிறருக்குத் துன்பமே நேரும் என்பதனை,
‘‘பூனைக்குக் கொண்டாட்டம் வந்தால்
பீத்தப்பாயிக்குக் கேடாம்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இங்கு பூனை, பீத்தல் என்பது முறையே அற்பத்தனமானவர்களையும், வலிமையற்ற எளியோரையும் குறிக்கும் குறியீடுகளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈச்சம் பாய்
கொடிது கொடிது வறுமை கொடிதாகும். இவ்வறுமை பல்வேறுவிதமான நிகழ்வுகளுக்கு அடிப்படைக்காரணமாக அமைகின்றது. வறுமையாளன் அனைவராலும் வெறுத்து ஒதுக்கி வைக்கப்படுகிறான். வறுமையிலும் அதீதமான வறுமை மிகவும் கொடூரமானதாகும். இத்தகைய வறுமை சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளதைக் காணலாம்.
தம்பியால் விரட்டப்பட்டுக் காட்டில் வறுமையுடன் வாழ்ந்த குமண வள்ளலைப் பார்க்க மிகுதியான வறுமையில் வாடிய புலவர் பெருஞ்சித்திரனார் வருகிறார். வரும்புலவர் தனது வறுமையைப் புரவலனிடம் கூறுகிறார். அனைத்தும் இழந்து நிற்கும் குமணன் வருந்துகிறான்.இருப்பினும் தனது தலையைக் கொண்டு வருபவருக்குப் பரிசில் வழங்கப்படும் என்று தம்பி அறிவித்திருந்த செய்தியை உணர்ந்து தனது வாளைப் புலவர் கையில் கொடுத்துத் தனது தலையை வெட்டிக் கொண்டு போய் பரிசில் பெற்று வறுமையைப் போக்கிக் கொள்ளுமாறு வேண்டகிறார். வெறுமையாளானாக இருந்த வள்ளல் குணமன் தமிழுக்குத் தலை ஈந்த புரவலனாகக் காட்சியளிக்கிறான். வறுமையில் வாடிய புலவர் வள்ளலைப் பார்க்க வரும்போது அவ்வள்ளளும் வறுமையுற்றிருப்பது கண்டு புலவர் மனம் வருந்துகிறார். இத்தகைய நிலை சமுதாயத்தில் இன்றும் நிலவுவதனை,
‘‘உடுத்திக் கொள்ளச் சேலையில்லை என்று
அக்காவீட்டுக்குப் போனால் அக்காகாரி ஈச்சம்பாயினைச்
சுத்திக்கிட்டு எதிரில் வந்தாளாம்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஈச்சம்பாய் வறுமையின் அடையாளமாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது. ஒருவரிடம் உதவி கேட்கப்போகும் நிலையில் உதவி செய்பவரே உதவி தேவைப்படும் நிலையில் இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகும்.
முயற்சியுடன் வாழ்ந்து பலருக்கும் உதவி செய்து உன்னத வாழ்வினை வாழ வேண்டும். தீயனவற்றைப் பிறருக்குக் கடுகளவேணும் நினைக்காது அனைவருடனும் நட்புக் கொண்டு நாடு போற்ற நல்வாழ்வு வாழ்வோம். வாழ்வு மகிழ்வுறும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.