பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
13. இறை நம்பிக்கை
நம்பிக்கையே வாழ்க்கை என்பர். இந்நம்பிக்கை இறைநம்பிக்கை, தன்னம்பிக்கை, அவநம்பிக்கை எனப் பல வகைப்படும். இவற்றுள் முன்னது இரண்டும் வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும் தன்மையன. பின்னது மனிதனைப் படுகுழியில் வீழ்த்திவிடும் தன்மையது ஆகும். இறைநம்பிக்கையே மனிதனுக்கு தன்னம்பிக்கையைத் தந்து வாழ்க்கையை வாழ்வதற்கு உதவியாக உள்ளது. யானைக்குத் தும்பிக்கை போன்று மனிதனுக்கு நம்பிக்கை விளங்குகின்றது. அதிலும் இறைநம்பிக்கை மனிதன் வாழ்வாங்கு வாழ அருந்துணையாக அமைகின்றது. இறைவனை நம்பாதவர்கள் கூட தமது வாழ்வின் இறுதியில் இறைவனையே சரணடைகின்றனர். இறைநம்பிக்கை மனிதனைத் துன்பங்களில் இருந்தும், தீவினைகளில் இருந்தும் விடுபட வைக்கின்றது. இவ்விறை நம்பிக்கையே அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்திலங்குகின்றது எனலாம். இவ்விறை நம்பிக்கையை வளர்க்கின்ற வகையிலும், மனிதனின் துன்பங்களுக்கு விடுதலை நல்குகின்ற வகையிலும் நம் முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாகப் பல வாழ்வியல் நெறிகளைக் கூறியுள்ளனர். அவை இருளில் ஒளி காட்டும் விளக்குகளாகத் திகழ்கின்றன.
கடவுள் நம்பிக்கை
மனிதன் எதனையாவது நம்பினால்தான் உலகில் வாழ முடியும். நம்பிக்கையுடன் மனிதன் இருக்கின்றபோது வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கின்றான். நம்பிக்கையை இழக்கின்ற போது அவனைத் தோல்விகள் வந்து தழுவிக் கொள்கின்றன. எதையும் நம்புகின்ற மனப்பான்மை மனிதனுக்கு வரவேண்டும். அங்ஙனம் நம்புவன் துயரங்களை வெல்கின்றான். அதிலும் இறைவனை நம்புவன் எதிலும் மனச்சோர்வு அடைவதில்லை.
சிலர் கோவில்களில் இறைவன் இருப்பதாகக் கருதி வணங்குவர். அதனைச் சிலர் கேளி செய்வர். கோவில்களில் உள்ளது கற்சிலை என்று மொழிவர். இத்தகைய நம்பிக்கையற்றநிலை பழங்காலத்தில் இருந்தே சமுதாயத்தில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இறைவனது சிலையைப் பார்க்கின்றவரின் நோக்கினைப் போன்றே அது அமையும். அதனால்தான் கல்லைக் கல்லாகக் காண்பவன் ஞானி, சிலையாகக் காண்பவன் சிற்பி, தெய்வமாகக் காண்பவன் பக்தன் என்று வீரத்துறவி விவேகானந்தர் இவ்விறை நம்பிக்கை குறித்து விளக்குகின்றார்.
திருமூலர்,
‘‘மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தால் மறைந்தது மாமத யானை’’
என்று திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
இதே கருத்தை,
‘‘நம்புறவனுக்குக் கல் கூட சாமி
நம்பாதவனுக்குச் சாமி கூடக் கல்லு’’
‘‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்’’
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
மரமாகப் பார்த்தால் அதில் யானை தெரியாது, யானையாகப் பார்த்தால் அதில் மரம் தெரியாது என்ற திருமந்திரக் கருத்து இப்பழமொழிகளின் உள்ளீடாக அமைந்துள்ளது. நாயை என்பதை நாயகனை என்றும், கல் என்பதை சிலை என்றும் கொண்டு பொருள்கொண்டால் திருமந்திரப் பாடல் இப்பழமொழயில் அமைந்திருப்பதை நன்கு உணரலாம். மிகப்பெரிய கடவுள் தத்துவத்தை நம் முன்னோர்கள் எளிமையாக விளக்கி இருப்பது வியப்பிற்குரியதாக உள்ளது.
முழுமையான நம்பிக்கை
எதிலும் நம்பிக்கை என்பது முழுமையானதாக அமைதல் வேண்டும். அரைகுறையாக இருப்பின் அது வெற்றியையும், நிம்மதியையும் தராது. ஒருமுறை இறைநம்பிக்கை கொண்ட ஒரு மகானை சிலர் நீங்கள் கடவுளை நம்புபவர். உங்களை இந்த மலையில் இருந்து கைகால்களைக் கட்டித் கீழே தூக்கியெறியப் போகின்றோம். அப்போது நீங்கள் நம்பும் இறைவன் உங்களைக் காப்பாற்றுவாரா? என்று கேட்டனர். அதற்கு அம்மகான் நிச்சயமாகக் காப்பாற்றுவார். நீங்கள் என்னை மலையிலிருந்து தூக்கி யெறியுங்கள் என்றார். அவர்களும் அவர் கூறியதைப் போன்றே கைகால்களைக் கட்டி அவரைத் தூக்கி யெறிந்தனர். கீழே விழுந்த அந்த மகானுக்கு கால் கைகளில் அடிபட்டு இரத்தம் கொட்டியது. அதனைக்கண்டவர்கள் எங்கே கடவுள் உங்களைக் கைவிட்டுவிட்டாரே? ஏன் உம்மை அடிபடாமல் காக்கவில்லை? என்று கேட்டனர். அதற்கு அவர் நான் கீழே விழும்போது கடவுளை நம்னேன் ஆனால் மலையிலிருந்து பாதி தூரம் வரும்போது என் நம்பிக்கை சற்று குறைந்தது. அதனால்தான் எனக்கு இந்தக் காயங்கள் உடலில் ஏற்பட்டன. நான் முழுமையாக நம்பவில்லை நம்பியிருந்தால் எனக்கு அடிபட்டிருக்காது என்றார். அம்மகான் கூறியதிலிருந்து நாம் இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டவர்களுக்கு எந்தத் துன்பமும் நேருவதில்லை என்ற கருத்தை நன்கு உணர்ந்து கொள்ளலாம். அரைகுறை நம்பிக்கை ஆபத்தை விளைவிக்கும் என்பதை இம்மகானின் வாழ்வில் நடந்த சம்பவம் நமக்கு எடுத்துரைக்கின்றது. இத்தகைய கடவுள் நம்பிக்கையைப் பற்றி,
‘‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
முழுமையாக எவன் ஒருவன் கடவுளிடம் தன்னை ஒப்படைக்கின்றானோ அவனே இறைவனால் காப்பாற்றப்படுகின்றான். கடவுள் தன்னை நம்புபவரை ஒரு நாளும் கைவிடுவதில்லை. மகாபாரதத்தில் துரியோதனனால் திரௌபதி அவைக்கு இழுத்துவரப்பட்டு அவமானப்படுத்தப்படுகின்றாள். அவளது துகிலைத் துச்சாதனன் பிடித்து இழுக்கின்றபோது, திரௌபதி அவையினரைப் பார்த்து நீதி கேட்கிறாள். யாராவது காப்பாற்றுவார்கள் என்று ஒவ்வொருவரையும் பார்க்கின்றாள். மன்றாடுகின்றாள். யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. அவள் இறுதியில் கண்ணனைத் தஞ்சமடைகின்றாள். கண்ணன் துகிலை வளரச் செய்து அவளது மானத்தைக் காக்கின்றான். கண்ணனாகிய கடவுளை முழுமையாக நம்பியதால் திரௌபதியின் மானம் கடவுளால் காப்பாற்றப்படுகின்றது. இத்தகைய அரிய கருத்தையே மேற்கண்ட பழமொழி நமக்கு உணர்த்தி நமக்கு நம்பிக்கையூட்டுகின்றது.
தெய்வம் துணை
உலகில் எனக்கு யாருமே துணையில்லை என்று சிலர் புலம்பிக் கொண்டே இருப்பர். இவ்வாறு புலம்புவது தவறு. இவ்வுலகில் பிறந்தோர் யாருமே அனாதை இல்லை. அவர்களுடன் இறைவன் இருக்கின்றான் என்பதை அவர்கள் மறந்தே போய்விடுகின்றனர். நம்முடன் இறைவன் இருக்கின்றான். நாம் செய்யும் செயல்களில் இறைவனையும் ஒரு பங்குதாரனாக நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே நாம் செய்ய முயலும் செயல்களுக்கு உறுதுணையாக இருந்து நமக்கு வெற்றியைத் தரும். இறைவனே அனைவருக்கும் துணையாக இருக்கின்றான் என்ற கருத்தினை,
‘‘திக்கற்றவருக்குத் தெய்வந்தான் துணை’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. திக்கற்றவர் என்பது யாருமற்ற அனாதைகளைக் குறிக்கும். இவர்களுக்கு உறுதுணை இறைவனே ஆவான். இதனை உணர்ந்து இறைநம்பிக்கையுடன் வாழ்தல் வேண்டும் என்று இப்பழமொழி நமக்கு அறிவுறுத்துகின்றது.
குழந்தையும் – தெய்வமும்
குழந்தை தெய்வத்திற்குச் சமமானது என்பர். அதனால் தான் கிராமப் புறங்களில் திருவுளச் சீட்டு (இறைவனின் முன்பு திருநீறையும், குங்குமத்தையும், அல்லது வெவ்வேறு பூக்களையும் மடித்துப் போட்டு) அதனைச் சிறுகுழந்தையைவிட்டு எடுக்கச் சொல்வர். அக்குழந்தை ஏதேனும் ஒன்றை எடுத்துத் தரும். அதனை இறைவன் தந்த வரமாகக் கருதி அதன்படி செய்வர். அக்குழந்தை அன்புடன் தன்னை நடத்துபவரையே நாடும். அன்புடன் நடந்து கொள்ளாதவரை அக்குழந்தை திரும்பிப் பாராது போய்விடும். அதுபோன்றே இறைவனை மனத்தில் வழுத்தி அன்புடன் வணங்குபவரிடமே இறைவன் குடிகொண்டிருப்பான். இதனை,
‘‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடுகின்ற இடத்துலதான்’’
‘‘குழந்தையும் தெய்வமும் கொண்டணைக்கின்ற இடத்துலதான்’’
என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.
இறைவன் குழந்தை போன்றவன். குழந்தையை யாராவது அடித்துவிட்டு பின்னர் அதற்கு ஏதாவது கொடுத்தோ அல்லது அன்புடனோ அழைத்தால் ஓடிவந்துவிடும். அதுபோன்றே இறைவனும் ஆவான். குழந்தை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாது. யாரழைத்தாலும் ஓடி வரும் தன்மை கொண்டதாகும். அதுபோன்றே தெய்வமும் என்பதனை,
‘‘குழந்தையும் தெய்வமும் ஒண்ணு’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இறைவனின் அருள் தன்மை
இறைவன் மனது வைத்துவிட்டால் ஒன்றும் இல்லாதவனும் உயரத்தில் வந்துவிடுவான். பொருள் இல்லானும் கூட பொருளுடையவனாக மாறிவிடுவான். இதற்கு இறைவன் அருளே காரணமாகும். அதனால்தான் அருளாளர் மாணிக்கவாசகர்,
‘‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’’
என்று திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார். அவனை வணங்குவதற்குக்கூட இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே இயலும். அவன் அருள் இல்லை எனில் இவ்வுலகில் எதுவும் நடவாது. இதனை,
‘‘அவனின்றி ஓரணுவும் அசையாது’’
என்ற பழமொழி மொழிகின்றது. இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு அணுவும், உயிரும் இறைவனின் அருளினால்தான் இயங்குகின்றன. இதனை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால் வாழ்வில் துன்பப்பட வேண்டிய சூழல் இராது எனலாம்.
ஒருவருக்கு எப்போது எதனைக் கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கே தெரியும். ஒவ்வொருவரின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வேண்டியதை இறைவன் அவ்வப்போது கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். குப்பையில் கிடப்பவன் இறைவனின் அருள் கிட்டினால் கோபுரத்தில் வைக்கப்படுவான். அதுபோல கோபுரத்தில் இருக்கின்றேன் என்று கொக்கரிப்பவன் இறைவன் கைவிட்டுவிட்டால் கீழே வந்து விழுந்துவிடுவான். இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. இறைவன் கொடுக்கும்போது உடனடியாக அது நம்மை வந்து சேரும். இத்தகைய இறைவனுடைய அருள் தன்மையை,
‘‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொடுத்துச்சாம்’’
என்ற பழமொழி எடுத்து மொழிகின்றது. இங்கு கூரை என்பது வீட்டுக் கூரையைக் குறிப்பிடுவது அன்று. அது தடையைக் குறிக்கின்றது. இறைவன் அளிக்கும் அருட்டன்மையை யாரும் தடைப்படுத்த முடியாது என்பதையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
தண்டிக்கும் குணம்
ஒருவன் தவறு செய்தால் அதனை அரசன் அன்றே கேட்டு அதற்குரிய தண்டனையைக் கொடுத்துத் தண்டிப்பான். அரசனாலும் தண்டிக்க இயலவில்லை எனில் யார் குற்றம செய்பவரைத் தண்டிப்பர். குற்றம் செய்பவர் தண்டனை அனுபவிக்காது இருக்க வேண்டியதுதானா? எனும்நிலை வரும்போது இறைவனே அத்தகையோரைத் தண்டித்துவிடுவான். காலந் தாழ்த்தியே இறைவன் தண்டித்தால் நீதி உடன் கிடைக்காது போய்விடுமே? என்று சிலர் கருதுவர்.
இறைவன் தவறு செய்தவன் திருந்தி வாழ்வதற்கு காலஅவகாசம் கொடுக்கின்றான். அதனைப் பயன்படுத்தி தவறு செய்தவன் தனது தவறினை உணர்ந்து திருந்துதல் வேண்டும். தவறை உணர்ந்து திருந்தவில்லை எனில் இறைவனது தண்டனையிலிருந்து அவன் தப்ப முடியாது. கொடுமையான தண்டனையை இறைவன் கொடுப்பான். இதனை,
‘‘அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இன்று அவரவர் செய்த வினையை அவரவரே அனுபவித்தல் வேண்டும். நாம் செய்யும் தவறை யாரும் அறியவில்லை என்று தவறு செய்தல் கூடாது. அதனை இறைவன் நம்முடன் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று அறிந்து தவறு செய்யாது வாழ வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. நம்பிக்கையுடன் இறைவனை நாடி நமது குறைகளைக் களைந்து, இறைவனை நமது செயல்களுக்கு உறுதுணையாகக் கொண்டு தவறிழைக்காது, பிறருக்கு இயன்றளவு நன்மைகளைச் செய்து, உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.