நீலாம்பிகையா? கருப்பாயியா?
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் நகைச்சுவை உணர்வு மிக்கவர். ஒருமுறை அவர் மறைமலை அடிகளார் வீட்டிற்குச் சென்று பேசிக் கொண்டிருந்தார்.
மதிய உணவு இடைவேளை வந்தது.
மறைமலை அடிகளாரின் துணைவியார் நீலாம்பிகை உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது கதிரேசன் செட்டியார், “கொஞ்சம் ரசம் போடும்மா!” என்றார்.
இதைக் கேட்ட நீலாம்பிகை, “ரசம் வடமொழிச் சொல்லாயிற்றே...நீங்கள் அதைத் தூய தமிழில் சாறு விடும்மா! என்று கூறலாமே?” என்றார்.
இதைக் கேட்ட கதிரேசன் செட்டியார், “அதுவும் சரிதான். அம்மா கருப்பாயி, கொஞ்சம் சாறு ஊற்றம்மா” என்றார்.
நீலாம்பிகை, “என் பெயர் நீலாம்பிகையை கருப்பாயி ஆக்கிவிட்டீர்களே?” என்று கேட்டார்.
உடனே கதிரேசன் செட்டியார், “நான் சொன்னதில் எந்தத் தவறுமில்லை” என்றார்.
நீலாம்பிகை விழித்தார்.
அதற்கு கதிரேசன் செட்டியார், “நீலம் என்பதைத் தமிழில் கறுப்பு என்கிறோம். அம்பிகை என்பதைத் தூய தமிழில ஆயி என்று சொல்வார்கள். எனவே, “நீலாம்பிகை” என்கிற உன்னை “கருப்பாயி” என்றேன். “ரசத்தைச் சாறு என்று சொல்வது போல...” என்றார்.
- தேனி எஸ்.மாரியப்பன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.