ஆங்கிலேயர் ஒருவர் கனடாவிலிருந்து லண்டனுக்குக் கப்பல் பயணம் மேற்கொண்டார்.
பகலுணவு வேளையின் போது மேசைக்குப் போய்த் தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த 27 ஆம் எண் நாற்காலியில் அமர்ந்தார். எதிர் இருக்கைக்காரர் இவரை நோக்கி “போனப்பேத்தி” என்றார்.
இவர் அவரிடம், “வில்லியம் நார்ட்டன்” என்ற தம் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். ஒருவர் சொன்னது மற்றவருக்குப் புரியாததால் அதற்கு மேல் உரையாடல் தொடரவில்லை.
இரவு உணவு சமயத்திலும் அவர் “போனப்பேத்தி” என்றபோது, "மதியம்தான் அறிமுகம் ஆகிவிட்டதே, மீண்டுமா?" என்றெண்ணிய ஆங்கிலேயர், “வில்லியம் நார்ட்டன்” எனச் சிறிது எரிச்சலுடன் பதிலளித்தார்.
மறுநாள் காலையிலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்தமையால் உண்டு முடித்த கையோடு கப்பல் தலைவரைப் போய்ப் பார்த்த ஆங்கிலேயர் வேறு இருக்கையை ஒதுக்கிக் கொடுக்கக் கோரினார்.
"ஏன்? என்ன சிக்கல்?"
"எனக்கு எதிரே அமர்கிற பைத்தியக்காரர் ஒவ்வொரு தடவையும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வெறுப்பேற்றுகிறார்."
"அப்படியிருக்காதே! என்ன பெயர் சொல்கிறார்?"
"போனப்பேத்தி"
தலைவருக்கு விவரம் விளங்கிற்று.
அவர் புன்னகையுடன், "அது அறிமுகமல்ல. அவர் பிரெஞ்சுக்காரர் என்று தெரிகிறது. சாப்பிடும் முன்பு போனப்பேத்தி என்று சொல்வது அவர்கள் வழக்கம். அதற்கு நல்ல பசி என்று பொருள். உங்களுக்கு நல்ல பசி உண்டாகட்டும். நிறைய சாப்பிடுங்கள் என அவர் வாழ்த்துகிறார்"
"அப்படியா? மன்னிக்க வேண்டும். நான் தவறாகப் புரிந்து கொண்டேன்"
பகலுணவு மணியடித்ததும், "இப்போது நான் முந்திக் கொள்ள வேண்டும்" என்று முடிவு செய்த ஆங்கிலேயர் விரைந்து போய் உட்கார்ந்து காத்திருந்தார். பிரெஞ்சுக்காரர் வந்ததும் “போனப்பேத்தி” என மலர்ந்த முகத்துடன் வாழ்த்தினார்.
அவரும் புன்னகைத்து சொன்னார், “வில்லியம் நார்ட்டன்"