நல்ல பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவரும், ஒரு பொறியாளரும் தவறாக வாகனத்தை ஓட்டிச் சென்ற போது ஒரு கோயிலின் சுவரில் மோதி இறந்து விட்டனர்.
இதில் அந்தக் கோயிலுக்கு வந்த பக்தரும் கொல்லப்பட்டார்.
கோயிலுக்குச் சேதம் விளைவித்ததாலும், கோயிலுக்கு வந்த பக்தரைக் கொன்றதாலும் அவர்கள் இருவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
நரகத்திற்குச் சென்ற இருவரும், அங்கு தமது சேவையைத் தொடர்ந்தனர்.
மருத்துவர் அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். பொறியாளர் அந்த நரகத்தில் இருப்பவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தார்.
இதனால் நரகத்தில் இருப்பவர்களுக்கும் நல்ல வசதிகள் கிடைத்தன. அங்கிருப்பவர்களும் மகிழ்ச்சியோடு வாழத் தொடங்கினர்.
இதனைக் கண்ட நரகப் பணியாளர்களில் ஒருவர் சொர்க்கத்தின் நிர்வாகியிடம், நரகம் பல அடிப்படை வசதிகளைப் பெற்றுவிட்டதால், நரகத்திலும் இருப்பவர்களும் சொர்க்கத்திலிருப்பதைப் போன்று நல்ல வசதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லிவிட்டார்.
அதைக் கேட்டுக் கோபமடைந்த சொர்க்கத்தின் நிர்வாகி, அந்த நரகத்தின் நிர்வாகியை அழைத்து, “நரகத்தில் பாவிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அங்கு என்ன நடக்கிறது?” என்று கேட்டார்.
நரகத்தின் நிர்வாகி, அங்கு புதிதாக வந்த மருத்துவர் மற்றும் பொறியாளர் செய்த சேவைகளைப் பற்றிச் சொன்னார்.
அதைக் கேட்ட சொர்க்கத்தின் நிர்வாகி, “அவர்கள் இருவரையும் என்னிடத்திற்கு அனுப்பு” என்றார்.
நரகத்தின் நிர்வாகி, “அவர்களிருவரையும் அனுப்ப முடியாது” என்று மறுத்துவிட்டார்.
அதற்கு சொர்க்கத்தின் நிர்வாகி, “நல்லவர்களை என்னிடத்துக்கு அனுப்ப மறுப்பது பெருங்குற்றம். இது குறித்துக் கடவுளிடம் சென்று முறையிடுவேன். அவரது மன்றத்தில் உன் மீது வழக்குத் தொடருவேன்” என்றார்.
நரகத்தின் நிர்வாகி சிரித்துக் கொண்டு சொன்னார்.
“கடவுளின் மன்றத்தில் வழக்குப் போடுவதாயின் உங்களுக்குச் சட்ட அறிஞர்கள் வேண்டும். அவர்கள் எவரும் உங்களிடம் இல்லை. அவர்கள் அனைவருமே என்னிடம் தான் இருக்கின்றனர்”