மூன்று அரசியல்வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் திடீரென்று ஒரு நாள் இறந்து போனார்கள்.
மூவரும், மேலோகம் சென்றார்கள் அங்கு எமதர்மராஜா அமர்ந்து எல்லோருடைய பாவ, புண்ணியக் கணக்குகளுக்கு ஏற்பத் தண்டனை வழங்கிக் கொண்டு இருந்தார்.
பயந்து கொண்டே இந்த மூவரும் அவர் அருகே சென்றனர்.
முதல் இருவரையும் அவர் சொர்க்கத்துக்குப் போக சொன்னார். அவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
மூன்றாவதாக உள்ளவரை நரகத்துக்கு அனுப்பிவிட்டார். அவருக்கு ஆத்திரம் தாங்க முடிய வில்லை.
அவர் எமதர்மராஜாவிடம் சென்று நாங்கள் மூவரும் மக்களுக்குத் தொண்டு புரிந்துள்ளோம். அப்படி இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை ? என்று கேட்டார்.
உடனே எமதர்மராஜா அவரிடம், நான் சரியாகத்தான் உனக்குத் தண்டனை கொடுத்தேன். இருப்பினும், நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் மூவருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன். நீயே போட்டியின் முடிவில் உனக்கு வழங்கப்பட்டது சரியான தண்டனை என்று தெரிந்து கொள்வாய்” என்று சொன்னார்.
அவர்கள் மூவரும் அதற்குச் சம்மதித்தனர்.
முதலில் மூவருக்கும் எழுத்து முறை தேர்வு வைப்பதாகச் சொன்னார்.
தான் சொல்வதை ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுதச் சொன்னார்.
முதல் நபருக்கு இந்தியா என்று எழுதச் சொன்னார். அவர் ஆங்கிலத்தில் “INDIA" என்று எழுதி விட்டார்.
இரண்டாவது நபருக்கு பாகிஸ்தான் என்று எழுதச் சொன்னார். அவரும் ஆங்கிலத்தில் “PAKISTHAN" என்று எழுதி விட்டார்.
மூன்றாவது நபருக்கு செக்கோஸ்லேவியா என்று எழுதச் சொன்னார். அவர் ஆங்கிலத்தில் அதைப் பிழையாக எழுதினார்.
மூன்றாவது நபர் தோல்வியடைந்தார்.
மறுபடியும் அந்த மூன்றாவது நபர் எமதர்ம ராஜாவிடம் மற்றொரு வாய்ப்பு வழங்கும்படி கேட்டார்.
அதற்கு எமதர்மராஜாவும் சம்மதித்தார். ஆனால், “இந்தப் போட்டிதான் கடைசிப் போட்டி, இதில் தோல்வியடைந்தால் ஒத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வாய்ப்பு கேட்கக் கூடாது” என்று சொன்னார் .
மூன்றாமவரும் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு தயாரானார்.
இரண்டாவது போட்டி தொடங்கியது,
முதலாவது நபரிடம், “இந்தியாவிற்கு எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது?” என்று கேட்டார்.
முதலாமவர், “1947” என்று சரியான விடையைச் சொல்லி விட்டார்.
இரண்டாவது நபரிடம், “இந்திய விடுதலைப் போராட்டத்தில் எவ்வளவு வீரர்கள் இறந்தார்கள்?” என்று கேட்டார். அத்துடன் அவருக்கு அ) 1,00,000 ஆ) 2,00,000 இ) 3,00,000 என்று மூன்று விடைகளைச் சொல்லிச் சரியான விடையைச் சொல்லும்படி சொன்னார்.
இரண்டாமவர், “2,00,000” என்று சொல்லித் தேறி விட்டார்.
எமதர்மராஜா மூன்றாம் நபரிடம், “அந்த 2,00,000 வீரர்களுடைய வீட்டு விலாசங்களைச் சொல்” என்று கேட்டார்.
அதைக் கேட்ட மூன்றாவது நபர் அதிர்ந்து போனார், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு நரகத்துக்குச் சென்றார்.
- இணையத்தில் படித்தது