ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்த ஒரு சாமியார், தரையில் துண்டை விரித்துச் சில சீட்டுகளைப் பரப்பினார்.
கூட்டம் கூடிவர, ''பக்தர்களே... உங்களுக்கு மாபெரும் நற்செய்தி! இதோ என்னிடம் பாவமன்னிப்புச் சீட்டுகள் விற்பனைக்கு உள்ளன. ஒரு சீட்டு நூறு ரூபாய்! நீங்கள் இதுவரை எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், இதைக் கொண்டு போனால்... நிச்சயம் உங்களுக்குச் சொர்க்கத்தில் இடம் உண்டு. இதுதான் அதற்கான நுழைவுச் சீட்டு!' என்று கூவினார்.
எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு சீட்டை வாங்கப் பணம் குவியத் தொடங்கியது. சாமியாருக்கு ஒரே குஷி.
அடுத்தபடியாக, ''என்னிடத்தில் இன்னொரு சீட்டும் உள்ளது. நீங்கள் இனி செய்யப் போகும் பாவத்தையும் மன்னிக்கக் கூடிய அந்தச் சீட்டின் விலை இருநூறு ரூபாய்'' என்று சொல்லி அதையும் விற்றுப் பணத்தை அள்ளினார் சாமியார்.
சாமியார் புறப்பட எத்தனித்த சமயத்தில் வந்து சேர்ந்த ஒருவன், இரண்டு சீட்டுகளையும் வாங்கிய கையோடு, கத்தியைக் காட்டி மிரட்டி, மொத்தப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.
அப்போது, ''உனக்கு நரகம்தான்'' என்று சாமியார் சாபம்விட்டார்.
அதற்கு அவன், ''நான்தான் இருநூறு ரூபாய் சீட்டையும் வாங்கிட்டேனே... உன் சாபம் பலிக்காது!'' என்றபடியே ஓடிக் கொண்டிருந்தான்.
- ஆங்கில இதழ் ஒன்றில் படித்தது