இரண்டு வெளிநாட்டினர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தனர்.
காய்கறிச் சந்தைக்குச் சென்ற அவர்கள், அங்கு குடை மிளகாய் இருப்பதைப் பார்த்தனர்.
அவர்கள் வியாபாரியிடம், “இது என்ன பழம்? ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே...” என்றனர்.
அவர்கள் பேசிய ஆங்கிலம் வியாபாரிக்குப் புரியவில்லை. வியாபாரி பேசிய தமிழ் அவர்களுக்கு விளங்கவில்லை.
சரி இரண்டு பழங்கள் வாங்கிச் சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள்.
முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் மிகக் காரமாக இருந்ததால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
கண்ணீரைப் பார்த்த நண்பன் கேட்டான், "ஏன் அழுகிறாய்...?”
“இல்லை. 10 வருடத்திற்கு முன் என் மாமாவைத் தூக்கில் போட்டார்கள். அவரை நினைத்ததால் அழுகை வந்தது” என்றான்.
பிறகு, “இந்தா நீயும் சாப்பிடு” என்று இன்னொரு மிளகாயை நண்பனிடம் கொடுத்தான்.
நண்பனும் ஆர்வத்துடன் சாப்பிட்டான். காரத்தால் அவனுக்கும் கண்ணீர் வந்தது.
“அடப்பாவி, உண்மையை மறைத்து விட்டானே!” என்று கோபம் கோபமாய் வந்தது.
அவன் கண்களில் கண்ணீரைக் கண்டதும், முன்னவன் கேட்டான், “நீ ஏன் அழுகின்றாய்?”
அவன் பதில் சொன்னான்.
“இல்லை 10 வருடத்திற்கு முன் உன் மாமாவைத் தூக்கில் போட்ட போது, ஏன் உன்னையும் சேர்த்துப் போடவில்லை என்று நினைத்தேன்” என்றான்.