புதிதாக திருமணமான ஒருவன் வேலை முடித்துத் திரும்ப வரும்போது, தன் புது மனைவிக்கு ஆசையாக முறுக்கு வாங்கி வந்திருந்தான்.
அவன் மனைவி இரவு பத்து மணிக்கு அந்த முறுக்கை விரும்பிச் சாப்பிடத் தொடங்கினாள். அந்த முறுக்கைக் கடித்துச் சாப்பிட்டதால் அதிலிருந்து கடக்கு முடக்கு என்று சத்தம் வந்தது.
அடுத்த நாள் காலையில் அவன் அம்மா, "நான் உன்னை பார்த்துப் பார்த்து வளர்த்து, படிக்க வைத்து, கல்யாணம் பண்ணி வைத்தேன். நீ அம்மாவிற்கு இது வரை எந்தப் பொருளும் வாங்கித் தந்தது இல்லை. ஆனால், புதிதாக திருமணம் செய்து வந்தவளுக்கு முறுக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறாய்..." என்று சொல்லி மகனுடன் சண்டையைத் தொடங்கினாள்.
அதுவரை கள்ளம், கபடம் தெரியாமல் வளர்ந்த அந்தப் பையனுக்கு புதிய யோசனை ஒன்று தோன்றியது.
சாப்பிடும் போது சத்தம் வரும் முறுக்கு வாங்கிக் கொண்டு போனால்தானே, இது மாதிரியான பிரச்சனை வருகிறது. சாப்பிடும் போது சத்தம் வராத, பொருளாய் வாங்கிப் போய்க் கொடுப்போம் என்று மனைவிக்கு அல்வாவை வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தான்.
அடுத்த நாள் அவன் அம்மா அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. ஏன் என்றால், அவனது மனைவி சாப்பிடும் போது எந்தச் சத்தமும் வரவில்லை.
மகன் தன் அம்மாவை ஏமாற்ற முதன் முதலில் அல்வா பயன்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏமாற்றுவதற்கு "அல்வா கொடுப்பது” என்ற பெயரும் சேர்ந்து வந்தது...!