முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒரு முறை இங்கிலாந்து சென்றிருந்த போது அங்கு நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய ஆங்கிலேயர் ஒருவர், “இறைவனுக்கு ஆங்கிலேயர்கள் மீதுதான் அன்பு அதிகம். அதனால்தான் மிகவும் ரசித்து, ஆங்கிலேயர்களை அழகிய வெள்ளை நிறத்தில் படைத்திருக்கிறார்” என்று தற்பெருமையோடு பேசி முடித்தார்.
அந்த ஆங்கிலேயர் பேசி முடித்ததும், ராதாகிருஷ்ணன் அடுத்துப் பேசத் தொடங்கினார்.
”இறைவன் ஒரு நாள் ரொட்டி சுட ஆசைப்பட்டு ரொட்டி சுடத் தொடங்கினார். முதல் ரொட்டியைச் சுட்டார். அது சரியாக வேகவில்லை. அதனால், சில பேர் வெள்ளையாகப் பிறந்தார்கள். இரண்டாவதாக, ஒரு ரொட்டியைச் சுட்டார். அது, அதிக நேரம் சுடப்பட்டதால் கருகிப் போனது. அதனால் சில பேர் கருப்பாகப் பிறந்தார்கள். இறைவன் இப்படி இரண்டு ரொட்டியைச் சுட்ட பிறகு, அடுத்த ரொட்டியைக் கவனமாகச் சுட்டார். அது அரை வேக்காடாகவுமில்லாமல், கரிந்தும் போகாமல் சரியான பக்குவத்தில் வந்தது. அதன் காரணமாக, இந்தியர்கள் அதிகக் கருப்புமில்லாமல், அதிக வெள்ளையுமில்லாமல் சரியான நிறத்தில் பிறந்தனர்”
அதைக் கேட்டதும், அங்கு கூட்டத்திலிருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். முதலில் பேசிய ஆங்கிலேயருக்கு வெட்கமாகப் போய்விட்டது.