ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்களான அந்தப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் வித்தியாசமான எண்ணமொன்று தோன்றியது.
அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, கிராமத் தெருவில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று எருமைகளை ஓட்டிக் கொண்டு அருகிலிருந்த காட்டுக்குச் சென்றனர்.
எருமைகளின் முதுகில் 1, 2, 4 என்று எண்களை எழுதி விட்டு, பொழுது சாயும் வரை காத்திருந்தனர்.
இரவானதும் யாருக்கும் தெரியாமல் எருமைகளைப் பள்ளி வளாகத்துக்குள் ஓட்டி விட்டு எதுவும் தெரியாதது போல் வீடு திரும்பினர் இருவரும்.
காலையில் பள்ளிக்குள் நுழைந்த தலைமை ஆசிரியருக்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது.
"என்னது இது, ஏதோ வித்தியாசமான வாடை பள்ளிக்கூட நடைபாதைகளில் வீசுகிறதே ...?" என்று சக ஆசிரியர்களை அழைத்து விசாரித்தார்.
"வாசம் மட்டும் இல்ல சார், சாணி கெடக்குது சில வகுப்பறைகளில்" என்று முகம் சுழித்தனர் ஆசிரியர்கள்.
உடனே, தொடர்புடைய கல்வித்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி முழுவதும் தேடியதில் மூன்று எருமைகளும் சிக்கின.
இரவு முழுவதும் பள்ளிக்கூட வகுப்பறைகளில் சுற்றிக் கொண்டும், ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்த எருமைகள், தற்போது அலுவலர்கள் கட்டுப்பாட்டில்.
எருமைகளை ஓட்டிக் கொண்டு செல்ல இருந்த அலுவலர்களிடம் ஒரு ஆசிரியர் கேட்டார்.
"அந்த இன்னொரு எருமை எங்கே ...?"
"பள்ளி முழுக்க தேடிட்டோம், இந்த மூணு எருமைகள் தாங்க இருந்துச்சு..."
"அதெப்படிங்க சாத்தியம் ...? பாருங்க எருமைங்க முதுகில் 1, 2, 4 என்று எண்கள் எழுதியிருக்குது. அப்ப, மூன்றாவது எண் எருமை எங்கே...?"
குழப்பத்தோடு தலையைச் சொறிந்தனர் அலுவலர்கள்.
ஒட்டு மொத்த ஆசிரியர்களும், மாணவர்களும், களேபரம் கேள்விப்பட்டு கூடிய ஊர் மக்களும் அந்த நான்காவது எருமையைக் கண்டுபிடிக்கச் சொல்லி குரல் எழுப்பினர்.
பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அனைவரும் அந்த எருமை எண் மூன்றைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
இல்லாத எருமையை இன்னும் தேடிக்கிட்டே இருக்காங்க ...!!!
வேடிக்கையா இருக்குல்ல...?
நாமும் நம் வாழ்க்கையில், இந்த 'இல்லாத எருமையை' எத்தனை முறை தேடி அலைஞ்சிருக்கோம் என்பது தெரியுமா?
- இதழ் ஒன்றில் படித்தது.