பெண்ணுக்கு அலங்காரம் செய்துக்கிட்டிருக்கீங்களே… ஏன்?
மு. சு. முத்துக்கமலம்
ஒருவர்: குடிகாரர்களெல்லாம் சேர்ந்து தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு கூட்டம் போட்டாங்களே… அது பொதுக்குழுக் கூட்டமா?
மற்றவர்: இல்லை… அது மதுக்குழுக் கூட்டமாம்…!
*****
ஒருவர்: பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒருத்தரும் வரலைன்னு சொன்ன பிறகும், பெண்ணுக்கு அலங்காரம் செய்துக்கிட்டிருக்கீங்களே… ஏன்?
மற்றவர்: அவங்க ஆன்லைனில் பெண் பார்க்கிறேன்னு சொல்லியிருக்காங்களே…
*****
ஒருவர்: மாறுவேடத்திலே நகர்வலம் போற மன்னரை ஒருத்தர் மொபைல் போனில் படம் பிடித்துக்கிட்டுப் போறாரே…!
மற்றவர்: மன்னரோட நகர் வலத்தை யூடியூப்பிலே நேரலையிலேக் காண்பிக்கிறாங்களாம்…!
*****
ஒருவர்: கிராமத்துப் பொண்ணா இருந்தாலும், அரசாங்க வேலை பார்க்குதுன்னு சொல்றீங்களே… என்ன வேலை பார்க்கிறாள்?
திருமணத் தரகர்: அரசாங்கத்தோட நூறு நாள் வேலைத் திட்டத்திலே…!
*****
ஒருவர்: பிச்சைக்காரர்கள் கூடத் தொழிலில் முன்னேற்றமாயிட்டாங்கன்னு எதை வச்சுச் சொல்றீங்க…?
மற்றவர்: ஒவ்வொரு ஏரியாவுக்கும் எத்தனை மணிக்கு, யார் பிச்சை எடுக்க வர்றாங்கன்னு ஒவ்வொரு வீட்டுக்கும் வாட்சப்பிலே தகவல் அனுப்புறாங்களே…!
*****
வீட்டுக்காரர்: பீரோவைத் திறந்து, அதிலிருக்கிற பட்டுச்சேலைகளை மொபைலில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறாயே… ஏன்?
திருடன்: வீடியோ காலில் என் மனைவிக்குப் பீரோவிலிருக்கிற பட்டுப்புடவைகளைக் காண்பிச்சுக்கிட்டிருக்கேன்… அவளுக்குப் பிடித்த பட்டுப்புடவையாகத் திருடிட்டுப் போகலாமுன்னுதான்…

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.