‘இரண்யாட்சன் என்ற ஓர் அசுரன் உலகைப் பாயாகச் சுருட்டினான்' என்று எங்கள் ஆசிரியர் வகுப்பில் கதை கூறிக் கொண்டிருந்தார்.
பக்கத்துப் பெஞ்சில் பையன் ஒருவன் அருகிலிருந்தவனை ஒரு குத்து குத்தி, ''டேய், இந்த மேசையில் ஒரு துணி போட்டால், இங்கிருந்து சுருட்டலாம். உலகையே இரண்யாட்சகன் சுருட்டிய போது, எங்கே நின்று சுருட்டியிருப்பான்?'' என்றான்.
உடனே ஆசிரியர் அவனிடம், ''அங்கே என்னடா பேச்சு?'' என்று கேட்டார்.
''சார், இவனுக்கு ஒரு சந்தேகம். உங்களைக் கேட்டால் தெரியும் என்றேன்'' அருகிலிருந்தவன்.
ஆசிரியர் அவனிடம், ''கேளுடா, எவ்வளவு பெரிய சந்தேகமானாலும் கேளு'' என்றார் அலட்சியமாக.
''இரண்யாட்சன் உலகத்தைச் சுருட்டும் போது எங்கேயிருந்து சுருட்டினார் சார்?'' என்று கேட்டான் அவன்.
ஒரு கணம் அந்த ஆசிரியரேச் சுருண்டு விட்டார்.
பின் மெல்ல, ''ஏய், திருக்குறள் மனப்பாடம் செய்யச் சொன்னேனே?'' என்று கேட்டுச் சமாளித்தார்.
“திருக்குறளை மனப்பாடம் செய்யவில்லை” என்றான் அவன்.
''திருக்குறள் மனப்பாடம் செய்யாமல், கேள்வியா கேட்கிறாய்? ஏறு பெஞ்சு மேல'' என்றார் ஆசிரியர்.
அவன் பெஞ்சின் மீது ஏறிய போது, ''டேய், நமக்கு ஒரு பதில் தெரியா விட்டாலும் நாமதான் பெஞ்சின் மீது ஏறணும், ஆசிரியருக்குப் பதில் தெரியாவிட்டாலும் நாமதான்டா பெஞ்சு மீது ஏறணும்'' என்றான்.