ஒரு சிறிய கிராமப் பள்ளிக்கூடம். ஒரு நாள் அப்பள்ளியைப் பார்வையிட ஆய்வாளர் ஒருவர் வந்து மாணவர்களின் பகுத்தறிவைச் சோதிக்கும் வகையில் ஒரு கேள்வி கேட்டார்.
“ஆண்டவன் உங்கள் முன் தோன்றி பணம் வேண்டுமா? அறிவு வேண்டுமா? என்று கேட்டால் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?" வகுப்பில் ஒரே அமைதி. ஆசிரியர்கள் நிலைமையைச் சமாளிக்கத் திணறினார்கள்.
ஒரு மாணவன் எழுந்து, “நான் சாமியிடம் பணம்தான் கேட்பேன்" என்றான்.
மாணவனுக்கு அறிவுரை கூற ஆய்வாளருக்கு கிடைத்தது வாய்ப்பு.
உடனே அவர், “அட முட்டாளே, நீ ஏன் பணம் கேட்கிறாய்? அறிவு இருந்தால் போதும் அதைக் கொண்டு எதையும் சாதிக்கலாமே?" என்றார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அதே மாணவன் மீண்டும், “சார், நான் முட்டாள் என்கிறீர்கள். நீங்கள் அவரிடம் என்ன கேட்பீர்கள்?" என்றான்.
“நான் அறிவுதான் கேட்பேன்" என்று ஆய்வாளர் தலை நிமிர்ந்து பெருமையுடன் கூறினார்.
உடனே அந்த மாணவன், “சரிதான் சார், யாரிடம் எது இல்லையோ, அதைத்தானே அவர்கள் கேட்பார்கள்!" என்றானே பார்க்கலாம்.