ஒரு நாள் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் தமது வீட்டில் சுவடிகளையெல்லாம் படித்துத் தொகுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
எந்தச் செய்யுள் முதலில் வரவேண்டும்? அடுத்தது எது வரவேண்டும் என்று அவர் ஆராய்ந்து கொண்டிருந்த சமயம் அது.
வாசலில் ஒருவன் எதையோ விற்றுக் கொண்டு போன குரல் தொலைவில் கேட்டது.
சாமிநாதையரின் வீட்டருகில் அவன் வந்ததும், ''ஏடு வாங்கலையோ ஏடு!'' என்று அவன் குரல் உரத்துக் கேட்டது.
'ஏடு' என்ற சொல் கேட்டதோ இல்லையோ உ.வே.சா. அவர்கள் தமது மடியிலும் கையிலும் இருந்த சுவடிகளையெல்லாம் கீழே வைத்தார்.
'ஆஹா! எவ்வளவு அரிய பாக்கியம் இப்போது எனக்குக் கிடைத்திருக்கிறது! ஏடுகளைத் தேடி ஊர் ஊராக அலைந்து திரிந்த எனக்கு, என் வீட்டு வாசலிலேயே ஏடு கிடைக்கிறதே!' என்று நினைத்தபடியே வாசலை நோக்கி ஓடினார்.
அதற்குள் அந்த ஆள் தெருக்கோடிக்குச் சென்றுவிட்டான்.
ஐயரவர்கள், ''ஏடு இங்கே வாப்பா! எனக்கு ஏடு வேண்டும்'' என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னாலேயே ஓடினார்.
அவர் சற்று கனத்த சரீரம் உடையவராதலால், மூச்சிறைக்க ஓடி இறுதியில் அவனைப் பிடித்தும் விட்டார்.
ஏடு விற்பவன், ''என்ன சாமி இப்பிடி ஓடியாறே? எத்தனை ஏடு வேணும்?' என்று கேட்டான்.
''உன்னிடம் உள்ள ஏடுகள் எல்லாவற்றையும் நானே வாங்கிக் கொள்கிறேன். எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்'' என்றார் உ.வே.சா.
வியாபாரி, ''ஏஞ்சாமி! வூட்டிலே ஏதாச்சும் விசேஷமா?'' என்று வினவினான்.
''வீட்டு விசேஷத்திற்கும் ஏடு வாங்குவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எனக்கு ஏடு வேண்டும், அவ்வளவுதான்'' என்றார் ஐயர்.
வியாபாரி தலையில் இருந்த மூட்டையை இறக்கி, ''எடுத்துக்கோ சாமி. உன் இஷ்டம் போல் பார்த்து எனக்குப் பணம் கொடு'' என்றான்.
மூட்டை ஏடுகள் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் மூட்டையைத் திறந்து பார்த்த உ.வே.சா. அவர்கள், ''என்னப்பா, ஏடு விற்பதாகச் சொல்லி, வாழையிலையைக் கொடுக்கிறாயே? இது நியாயமா?'' என்று கேட்டார்.
அதற்கு அந்த வியாபாரி, ''சாமி! நான் வச்சிருக்கும் எல்லாமே வாழையேடுங்கதான் சாமி! நுனியிலை கிடையாதுங்க" என்றான் பரிதாபமாக.
உ.வே.சா. அவர்களுக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது: இலை வியாபாரிகள் வாழையிலையின் நுனிப் பாகத்தை நறுக்கி, 'நுனியிலை' என்றும், மீதியைக் குறுக்கே வெட்டி 'ஏடு' என்றும் விற்பது வழக்கம்.
இந்த விஷயம் நினைவுக்கு வந்த போது, 'ஏடு என்றால் வாழையேடு என்று, தமிழறிஞன் என்று அழைக்கப்படும் எனக்குத் தோன்றவேயில்லையே!' என்று நினைத்து தமிழ்த்தாத்தா வருந்தினார்.
இருப்பினும், தமிழ்க்கடலிலே மூழ்கி, சங்க இலக்கிய முத்தெடுக்கும் கர்மமே கண்ணாக இருந்த ஐயரவர்கள் செவியில் விழுந்த 'ஏடு' என்ற சொல், வாழையேட்டை நினைவு படுத்தாமல், ஏட்டுச்சுவடியையே எண்ண வைத்த நிகழ்ச்சி, உ.வே.சா. அவர்களின் எல்லையற்ற தமிழ்ப்பற்றுக்கு நல்ல ஒரு சான்றாகும்.