தாத்தாவைக் குதிரை விரட்டியது ஏன்?
குரு. சுப்ரமணியன்
ஒருவர்: அந்த நடிகை நடிப்புக்கு முழுக்குப் போடப் போறாங்களாம்...!
மற்றவர்: ஏன்?
ஒருவர்: அவங்க முழுகாம இருக்காங்களாம்.
*****
ஒருவர்: ஆனாலும் நம் தலைவர் சிலையை இவ்வளவு கேவலமா செஞ்சிருக்க வேண்டாம்.?
மற்றவர்: ஏன்?
ஒருவர்: லஞ்சம் வாங்கறதுக்காக கை நீட்டறாப்பிலே பண்ணி இருக்காங்களே.
*****
ஒருவர்: என் பையன் இப்போ கல்யாணத்துக்கு ரெடி
மற்றவர்: அப்படியா?
ஒருவர்: ஆமாம், கேட்டரிங் படிப்பு முடிச்சுட்டு நல்லா சமைக்கக் கத்துக்கிட்டான்.
*****
ஒருவர்: என் பெண்டாட்டி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன்.
மற்றவர்: அடப் பாவமே! அப்புறம்?
ஒருவர்: அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துட்டுது.
*****
ஒருவர்: தலைவர் தன் கைகள் கறை படாதவைங்கறதை எப்படிக் காட்டறார் பாருங்க.!
மற்றவர்: எப்படி?
ஒருவர்: இங்க் கறை படிந்த தன் கைகளை கஷ்டப்பட்டுக் கறை இல்லாமே கழுவியிருக்கிறார் பாருங்களேன்.
*****
ஒருவர்: சமையல் ஏன் ஒரேடியா உப்புக் கரிக்குது?
மற்றவர்: என் மனைவி டிவி சீரியல் பார்த்து அழுது கண்ணீர் விட்டுகிட்டே சமைச்சதனாலே இருக்கலாம்.
*****
ஒருத்தி: உங்க தாத்தாவைப் பார்த்தா, குதிரைகளெல்லாம் விரட்டிகிட்டே வருதே, ஏன்?
மற்றவள்: அவர் எங்க கொள்ளுத் தாத்தாவாச்சே, அதனாலேதான்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.