மழை வந்தது ஏன்?
வடசென்னையில் உள்ள விநாயகர் கோவிலில் வாரியார் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏராளமான பக்தர்கள் சொற்பொழிவு நடைபெறும் இடத்தில் இடம் பிடித்து அமர்ந்து விட்டார்கள். வாரியார் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர்.
அந்த நேரத்தில் திடீரென்று மழை. வந்தவர்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்று மிக நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். சொற்பொழிவாற்ற வந்த வாரியார், தான் பேசும்போது, எடுத்த எடுப்பிலேயே அதுபற்றி குறிப்பிட்டு பேச ஆரம்பித்தார்.
"கந்தபுராண சொற்பொழிவு, கந்தபுராண சொற்பொழிவு என்று வால் போஸ்டரை வருணலோகம் வரை ஒட்டிவிட்டார்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அன்பர்கள்.
வருண பகவான் பார்த்தார்: “ஆ! சூரபத்மனின் சிறையில் இருந்து நம்மை விடுவித்த முதல்வன் (முருகன்) கதை அல்லவா இது? நாமும் கேட்க வேண்டுமே என்று அவரே வந்து விட்டார். அது தான் மழை!” என்று வாரியார் குறிப்பிடவும், எல்லோரும் வாய்விட்டு சிரித்து கைதட்டிவிட்டனர்.
கைத்தட்டல் அடங்கியதும், "நீங்கள் எல்லோரும் நெருக்கமாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். அதனால் தான், திறந்தவெளியில் இருந்த உங்களை நெருக்கமாக அமரும்படி செய்து விட்டார் வருண பகவான்" என்று வாரியார் மேலும் குறிப்பிட்டபோது, மீண்டும் கைத்தட்டல் எழுந்து அடங்கியது.
- நெல்லை விவேகநந்தா.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.