பெற்றோர்களின் முடிவு!
திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு செய்யுமிடங்களில் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்டு அதற்கு சரியான பதிலளிக்கும் குழந்தைகளுக்கு சிறிய அளவிலான புத்தகம் ஒன்றை வழங்குவார். இந்தப் புத்தகம் பெறுவதற்காக இவரது சொற்பொழிவில் முன் வரிசையில் குழந்தைகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஒருமுறை பாரதக்கதை சொல்லும் போது "மகாபாரதத்தில் பண்டவர்களின் கடைசி தம்பியான சகாதேவன் மிகவும் ஞானி, அறிவாளி, புத்திசாலி என்றார். எப்போதும் வீட்டில் கடைவிப்பிள்ளையாக இருப்பவர்களுக்கு ஞானம் அதிகம்" என்றபடி கூட்டத்தில் இருக்கும் கடைசிப் பிள்ளைகளெல்லாம் கையை உயர்த்திக் காட்டுங்கள்" என்றார்.
பல சிறுவர் சிறுமிகள் தங்கள் கையை உயர்த்தினார்கள்.
உடனே வாரியார் சுவாமிகள், " குழந்தைகளே...! நீங்கள்தான் கடைசிப்பிள்ளை என்று உங்கள் வீட்டில் நீங்கள் முடிவு செய்ய முடியாது. அது உங்கள் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முடிவு" என்றார்.
குழந்தைகள் தங்கள் கையைக் கீழே போட கூட்டத்தில் சிரிப்பொலி அடங்க சிறிது நேரமாயிற்று.
- தேனி. எஸ். மாரியப்பன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.