உனக்கு மூளை இல்லை என்று...?
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் ஸ்ரீ.ஏ.எஸ்.பி.அய்யர். தெய்வபக்தியுடையவர். நகைச்சுவையுடன் நல்ல பேசும் திறனுடைய இவரை நாத்திக அமைப்பு ஒன்று ஒரு கூட்டத்திற்குப் பேச அழைத்திருந்தது.
அவர் பேசத் துவங்கியவுடன் ஒருவர் எழுந்து, "எனக்கு கடவுளிடம் நம்பிக்கை இல்லை" என்று பெருமிதத்துடன் கூறினார்.
உடனே அய்யர், "அதனால் கடவுளுக்கோ, ஆத்திகர்களுக்கோ நஷ்டம் ஒன்றுமில்லை." என்று கூறினார்.
அய்யரை மடக்க எண்ணிய அவர் சிறிது நேரம் கழித்து மறுபடியும் எழுந்து, "நம் கண்களுக்குத் தெரியாத எதையும் நம்புவது முட்டாள்தனம் என்று நினைக்கிறேன்" என்றார்.
உடனே அய்யர், "அய்யா, உன் மண்டைக்குள் இருக்கும் மூளை என் கண்களுக்குத் தெரியவில்லை. அதற்காக உனக்கு மூளை இல்லை என்று நான் எடுத்துக் கொள்ள முடியுமா?" என்றார்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க, கேள்வி கேட்டவர் வெட்கப்பட்டுத் தலை குனிந்தார்.
- தேனி. எஸ். மாரியப்பன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.