உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது தெரியுமா?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: கதை எழுதிக் கவருக்குள்ள இரும்புத் துண்டு ஒன்னும் போட்டு அனுப்பறீங்களே...?
அப்பாவி சுப்பையா: கதையில வெயிட் இல்லன்னு திருப்பி அனுப்பிடுறாங்களே...!
*****
ஒருவர்: உங்களோட மனமகிழ் மன்றத்தில கல்யாணம் ஆனவங்களை மட்டும்தான் சேர்ப்பீங்களாமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம். அவங்களுக்குத்தானே மகிழ்ச்சி தேவையாயிருக்கு.
*****
ஒருவர்: பெரிய மாட்டுப் பண்ணை வைக்கிற அளவுக்கு உங்களை ஊக்கப்படுத்தியது உங்களோட பெற்றோரும் ஆசிரியருமா...?
அப்பாவி சுப்பையா: ஆமாம், அவங்கதான் படிப்பே வராத என்னை அடிக்கடி நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லுவாங்க...!
*****
ஆசிரியர்: உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது தெரியுமா?
அப்பாவி சுப்பையா: தெரியாது சார். எனக்கு வந்த கண்டங்களில் பெரியது சிறு வயசில கிணற்றில விழுந்ததுதான்.
*****
டாக்டர்: உங்களுக்கு எப்படி இவ்வளவு அடிபட்டுச்சு...?
அப்பாவி சுப்பையா: என்னோட அம்மாவுக்கும் மனைவிக்கும் நடந்த சண்டையில் இடையில மாட்டிக்கிட்டேன்.
*****
ஒருவர்: உங்க காதல் அந்தப் பொண்ணோட அம்மாவுக்குத் தெரிந்தும் தொடருதா எப்படி?
அப்பாவி சுப்பையா: இப்ப அவளோட அம்மாவும் என்னைக் காதலிக்கிறாள்.
*****
ஒருவர்: பெரிய தொழிலதிபரான நீங்க தொடங்கின காலேஜில யாரும் சேர மாட்டேங்கிறாங்களா... ஏன்?
அப்பாவி சுப்பையா: முட்டைக் கடை வச்சிருந்த என்னோட காலேஜில சேர்ந்தா முட்டைதான் கிடைக்கும்னு யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டுட்டாங்க...!
*****
ஒருவர்: கல்யாணம் முடிஞ்சதும் கதை எழுதனும்னு உங்களுக்கு எப்படி ஐடியா வந்தது?
அப்பாவி சுப்பையா: என் மனைவியோட அப்பா பழைய பேப்பர்கடை வச்சிருக்காரே...!
*****
ஒருவர்: இவ்வளவு பெரிய தாடி வளர்த்திருக்கீங்களே... காதல் தோல்வியா...?
அப்பாவி சுப்பையா: இல்லை. காதலிச்சவளையேக் கல்யாணம் பண்ண வேண்டியதாப் போச்சு...!
*****
ஒருவர்: பெரிய ஜவுளிக் கடைகளில் திருடிக்கிட்டிருந்த நீ இப்போ என்ன பண்ணிக்கிட்டிருக்க...?
அப்பாவி சுப்பையா: சின்னதா ஜவுளிக்கடை ஒண்ணு வச்சிருக்கேன்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.