மாமியார் புடவையைத் துவைக்கிறீங்களே...?
தேனி.எஸ்.மாரியப்பன்
டாக்டர்: உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துவிட்டதே...
அப்பாவி சுப்பையா: உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க...
*****
ஒருவர்: கல்யாண வீட்டில பத்திரிகையை வைத்துக்கொண்டு யாரைத் தேடிக்கிட்டிருக்கீங்க...?
அப்பாவி சுப்பையா: இந்தக் கல்யாணப் பத்திரிகையில தங்கள் நல்வரவை விரும்பும்...ன்னு நாற்பது பேரைப் போட்டிருக்காங்களே... அவங்களத்தான் தேடிக்கிட்டிருக்கேன்.
*****
மனைவி: மாமியார் தொல்லை தாங்க முடியலை ஏதாவது செய்யுங்க...ன்னு சொன்னா இப்படி இரண்டாம் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: மாமியாரோட சண்டை போடும் போது உனக்குத் துணையா இருக்கட்டுமேன்னுதான்!
*****
டாக்டர்: நான் ஒரு மாதத்திற்கு மாத்திரை கொடுத்தேன். மூன்று நாளில் சாப்பிட்டு வந்து நிற்கிறீர்களே...?
அப்பாவி சுப்பையா: சாப்பாட்டுக்கு முன்னால சாப்பிடச் சொன்னீர்கள்... அதையே சாப்பாடு...ன்னு நினைச்சு சாப்பிட்டேன் டாக்டர்.
*****
ஒருவர்: குடியை மறக்க மாற்றம் வேணுமின்னு சொன்னீங்களே... மாற்றம் ஏற்பட்டதா?
அப்பாவி சுப்பையா: தூத்துக்குடி, பரமக்குடி, காரைக்குடி, மன்னார்குடின்னு மாத்தினா நான் எப்படி குடியை மறக்கறது...?
*****
ஒருவர்: வாழ்க்கையில மகிழ்ச்சியாக இருக்க ஆறெழுத்து மந்திரம் கடைப்பிடிக்கிறேன்னு சொல்றீங்களே... சரவணபவ மந்திரமா?
அப்பாவி சுப்பையா: இல்லை அடங்கிப்போ என்கிற மந்திரம்.
*****
மனைவி: கல்யாண வயசில பொண்ணு இருக்கு... கவலைப்படாம இருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: நம்ம தெருப்பசங்கதான் பத்திரமா கூப்பிட்டுப் போய் பத்திரமா கூப்பிட்டு வர்றாங்களே...!
*****
ஒருவர்: போன மாதம்தானே உங்க பொண்ணுக்கு காதுகுத்து விழா நடத்தினீங்க அதுக்குள்ள அடுத்த அழைப்பிதழ் கொண்டு வந்துட்டீங்களே...?
அப்பாவி சுப்பையா: இது மூக்குக் குத்து விழா அழைப்பிதழ்!
*****
ஒருவர்: நாட்டுக்காக பெட்ரோல், டீசலை மிச்சப்படுத்தறேன்னு சொல்றீங்களே... நீங்க வச்சிருக்கிறது டூ வீலரா, போர் வீலரா?
அப்பாவி சுப்பையா: சைக்கிள்.
*****
ஒருவர்: உன் மாமியார் புடவையையும் நீதான் துவைக்கறியா? ஏன்?
அப்பாவி சுப்பையா: எனக்குத்தான் மாமனார் இல்லையே...!

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.