டாக்டரிடம் வேலை பார்த்த சர்ட்டிபிகேட் இருக்கா...?
தேனி.எஸ்.மாரியப்பன்
எழுத்தாளர்: கதை எழுதறக்குப் புத்திசாலித்தனம் தேவையில்லீங்க...!
அப்பாவி சுப்பையா: நான் உங்க கதையைப் படிச்ச உடனே அதைத் தெரிஞ்சுக்கிட்டேன்.!
*****
ஒருவர்: கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து சீட்டு எடுக்கச் சொல்றீங்களே...?
அப்பாவி சுப்பையா: அப்புறம்...! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன்.
*****
ஒருவர்: இருபது வருசமா காதலர்களா இருக்கோம்ன்னு சொல்றீங்க. எப்படி?
அப்பாவி சுப்பையா: அவளும் தன் கணவர்கிட்ட சொல்லல... நானும் என் மனைவிகிட்ட சொல்லல...!
*****
ஒருவர்: பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஏன் நிறுத்திட்டே...?
அப்பாவி சுப்பையா: அவள் என்னை விட ரெண்டு வயசு அதிகமாம். அதனால ரெண்டு வருசம் போகட்டுமின்னு இருக்கேன்.
*****
வங்கி அதிகாரி: இரண்டு காளை மாடுகள் வாங்க கடன் வாங்கினீங்களே... ஏன் திரும்பக் கட்டலை?
அப்பாவி சுப்பையா: கன்று போடுமின்னு நினைச்சேன். இன்னும் போடலீங்க...!
*****
ஒருவர்: நீங்க பொண்ணு வீட்டுக்கு வேண்டியவரா? மாப்பிள்ளை வீட்டுக்கு வேண்டியவரா?
அப்பாவி சுப்பையா: இரண்டு பேரும்தான் எல்லாக் கல்யாணத்திலயும் சந்திக்கிறோமே...! அப்புறம் என்ன கேள்வி?
*****
ஒருவர்: என் பையன் டாக்டராகி விட்டான்...!
அப்பாவி சுப்பையா: அசல் டாக்டரா? போலி டாக்டரா?
*****
நீதிபதி: மூன்று பொண்ணுங்களை ஏமாற்றித் திருமணம் செய்துக்கிட்டீங்களாமே...?
அப்பாவி சுப்பையா: ஏமாற்றியெல்லாம் திருமணம் செய்யலீங்க. நான் விரும்பித்தான் திருமணம் செய்துக்கிட்டேன்!
*****
டாக்டர்: ரெண்டு மாசமா வயிற்று வலின்னு சொல்றீங்க... ஏன் உடனே வரல...?
அப்பாவி சுப்பையா: வேற நல்ல டாக்டரைப் பார்க்கலாமின்னு இருந்தேன்!
*****
ஒருவர்: உன்னோட குடிப்பழக்கத்தை எப்படி நிறுத்தின?
அப்பாவி சுப்பையா: நானெங்கே நிறுத்தினேன். என் மனைவி நான் வாங்கி வச்சிருந்த பிராந்தியில பினாயில ஊற்றி வைத்து அதைக் குடிச்சுத் தொலைச்சுட்டேன். அன்னையிலிருந்து பிராந்தின்னாலே பினாயில் ஞாபகம்தான் வருது.!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.