கர்னல் பென்னி குக்
உ. தாமரைச்செல்வி
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக். தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலிருக்கும் சில விவசாயக் குடும்பங்கள் இவரைக் கடவுளாக வணங்கி வருகின்றனர். சில குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு இவரது பெயரைக் கூட வைத்திருக்கின்றனர். ஆமாம்! இவர்களுக்கு இந்த ஆங்கிலேயர் மீது அப்படியென்ன அக்கறை? எல்லாம் ஒரு நன்றி விசுவாசம்தான். ஆம்! வறண்டு கிடந்த தங்கள் நிலத்திற்கு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டித் தண்ணீர் வழங்கிய இந்த ஆங்கிலேயப் பொறியாளரைக் கடவுளாக்கி விட்டனர். இனி இவர் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கதையைப் படிப்போமா...?
முல்லைப் பெரியாறு அணை
கேரள மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடலை நோக்கிச் செல்லும் சில முக்கியமான ஆறுகளில் ஒன்று பெரியாறு. அப்போதைய திருவாங்கூர் சமஸ்தான அரசின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் சிவகிரி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பெரியாறு கடலை நோக்கிச் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்தது. எப்போதும் நீர்வரத்தை அதிகம் கொண்டுள்ள இந்த ஆற்றில் அதிகம் மழை பெய்யும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவையனைத்தும் மேற்குப் பகுதியிலிருக்கும் கடலுக்குச் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்தன. இதைப் பார்வையிட்ட ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குக், வீணாகக் கடலில் போய்ச் சேரும் தண்ணீரை இந்த ஆற்றின் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலைக்கு வடக்குப் பகுதியில் திருப்பி விட்டால் வறண்டு கிடக்கும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிக்கும், பிற பகுதிகளுக்கும் ஓரளவு தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் வறண்ட பகுதியிலிருக்கும் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுவதுடன் விவசாய நிலங்களாக மாறும். விவசாயம் செழிக்கும், பசுமை கொழிக்கும் என்று திட்டமிட்டார்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பெரியாற்றுடன் முல்லை எனும் சிற்றாறு இணையும் இடத்தில், அதாவது பெரியாற்றின் தொடக்க இடத்திலிருந்து 48 வது கிலோமீட்டர் தொலைவில், ஒரு புதிய அணையைக் கட்டுவதற்கான திட்டம் ஒன்றையும் தயாரித்து அப்போதைய ஆங்கிலேய அரசின் கீழான சென்னை மாகாண அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தார். இவரின் திட்டத்தை சென்னை மாகாண அரசும் ஏற்றுக் கொண்டது. இவர் அணை கட்டத் தேர்வு செய்திருந்த இடம் திருவாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமாக இருந்தது. இந்த இடத்தைப் பெறுவதற்காக ஆங்கிலேய அரசு திருவாங்கூர் சமஸ்தான அரசரிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதன்படி 1886-ல் அக்டோபர் 9ஆம் தேதி திருவாங்கூர் சமஸ்தான அரசரிடமிருந்து, இந்த அணை கட்டும் திட்டத்திற்காக எட்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை வருடம் ஒன்றுக்கு நாற்பது ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்த வேண்டும் என்கிற ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகளுக்கு சென்னை மாகாண அரசு குத்தகையாகப் பெற்றுக் கொண்டது.
அதன் பின்பு சென்னை மாகாண அரசு இந்த அணை கட்டும் திட்டத்திற்கு, அப்போதைய நிலையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்ததுடன் அணைக் கட்டுமானத்திற்கான பணத்தையும் ஒதுக்கியது. 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.
கட்டப்பட்ட அணை முழுவதும் வெள்ளப் பெருக்கில் அழிந்து விட்டதால், அணையைச் சரிவர கட்டாததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்கிற அடிப்படையில் பென்னி குக்கின் மீது விசாரணை நடத்தவும் சென்னை மாகாண அரசு உத்தரவிட்டது. அணை உடைப்பிற்கு தங்களுடைய செயல்பாடுகள் எதிலும் குறைவில்லை. முக்கிய ஆற்றின் பகுதிகளில் தடுப்பணைகள் எதுவும் கட்டப்படாததுதான் அணை உடைப்பிற்குக் காரணம் என்று சென்னை மாகாண அரசிடம் நிரூபித்து அவரைக் குற்றவாளி இல்லை என்று விடுவித்துக் கொண்டார். அதன் பின்பும் பென்னி குக் அணையைக் கட்ட மீண்டும் நிதி ஒதுக்கும்படி சென்னை மாகாண அரசிற்கு வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோள் சென்னை மாகாண அரசால் நிராகரிக்கப்பட்டது.
அணையைக் கட்ட இது வரை பணத்துடன் காட்டு மிருகங்கள், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனால் ஏற்பட்ட நோய்கள் என ஆயிரம் பேரையும் இழந்திருந்த பென்னி குக்கிற்கு தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்கிற எண்ணமும் மேலோங்கியது. அரசிடம் கேட்டுக் கிடைக்காத பணத்தைத் தானே ஏற்பாடு செய்து இந்த அணையைக் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்காக இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றார். அங்கு அவரது தந்தை சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள், தான் சேர்த்து வைத்த சொத்துக்கள், தன் மனைவியின் நகைகள், சொத்துக்கள் என இவரது குடும்பச் சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுச் சேர்ந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். அந்தப் பணத்தைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையைச் சொந்தமாகக் கட்டும் முயற்சியில் இறங்கினார். அணைக் கட்டுமானத்தில் கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகள் வராதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அணையைச் சிறப்பாகக் கட்டி முடித்தார். அவர் எதிர்பார்த்தபடி பெரியாற்றின் ஒரு பகுதி நீர் மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டது. இதன் மூலம் வறண்டு கிடந்த தமிழ்நாட்டின் ஒரு பகுதி பசுமைக்கு மாற்றமானது. இவரின் அணைகட்டும் பணிக்கு உதவியவர்களில் இவரின் உதவியாளர் லோகன் துரை என்கிற மற்றொரு ஆங்கிலேயப் பொறியாளரின் பங்கும் மிக முக்கியமானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அணையின் பயன்கள்
தமிழ்நாட்டில் தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய நிலங்களின் தேவைக்கும், குடிநீர்த் தேவைக்குமான தண்ணீரை பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணைதான் தற்போது வழங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் பெரியாறு நீர் மின்சக்தித் திட்டம், வைகை நீர் மின் சக்தித் திட்டம், சுருளியாறு நீர்மின் சக்தித் திட்டம் போன்றவைகளுக்கான நீராதரம் இந்த அணையிலிருந்துதான் கிடைக்கிறது.
பென்னி குக் நினைவுகள்
1. தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னி குக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
2. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுக் படம் வைக்கப்பட்டுள்ளது.
3. தமிழ்நாட்டில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுக் மற்றும் அவரது உதவியாளர் லோகன்துரை ஆகியோர் பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.
4. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது.
5. இங்கிலாந்தில் பிறந்த பென்னிகுக் தனது சொத்துக்களை எல்லாம் விற்று, இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகக் கட்டிய “முல்லைப் பெரியாறு அணை” இன்றும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த அணையின் மூலம் நீர் வளம் கிடைக்கப் பெற்ற விவசாயிகள் தங்கள் குடும்பத்தின் கடவுளாக அவரை வணங்குகின்றனர். தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைவு கொள்ளும் வகையில் அவரின் பெயரை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு வைத்து மகிழ்கின்றனர். முத்துக்கமலம் இணைய இதழும் அவரை இங்கு அடையாளப்படுத்தி மகிழ்ச்சி கொள்கிறது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.