உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒப்பந்தகாரராக இருக்கும் ஜெயந்த் கங்குலிக்கும் பள்ளிக்கூட ஆசிரியையான மவுஸ்மிக்கும் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1998 மார்ச் 28-ல் ஒரு மகன் பிறந்தான். இதன் பிறகு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2002 செப்டம்பர் மாதம் இவர்கள் முறைப்படி விவாகரத்து பெற்றனர். இவர்களின் 10 வயதான மகன் சத்யஜித் பெற்றோரில் யாருடன் வசிப்பது என்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
இது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தில் மவுஸ்மி வழக்கு தொடர்ந்தார். ஜெயந்த்திற்கு நிலையான வருமானம் இல்லாததால் தாய் மவுஸ்மியுடன்தான் குழந்தை வசிக்க வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜெயந்த் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் தந்தை ஜெயந்துக்கு போதிய வருமானம் உள்ளது. எனவே குழந்தை தந்தையுடன் வசிக்கலாம். தாய் மவுஸ்மி அவ்வப்போது வந்து குழந்தையைப் பார்த்துச் செல்லலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மவுஸ்மி உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சி.கே.தாக்கர், டி.கே.ஜெயின் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குழந்தை தாயுடன் வசிப்பதுதான் நல்லது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதைக் கேட்ட சத்யஜித் அழுதான். தாயுடன் போக மறுத்து சிணுங்கியதைக் கண்டு மனம் உருகிய நீதிபதிகள் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டனர்.
அதன் பின்பு இந்த வழக்கில் சிறுவன் சத்யஜித், தந்தை ஜெயந்துடன் வசிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள்,
"விவாகரத்து செய்த தம்பதிகளின் குழந்தை யாருடைய பாதுகாப்பில் வளர வேண்டும் என்பதற்காக தம்பதிகள் சட்டத்தின் மூலம் போராடும் போது குழந்தையின் நலனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் பெற்றோரின் உரிமையோ, சட்டமோ குறுக்கிட முடியாது. உண்மையான சூழ்நிலையையும், குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் சத்யஜித்தை எங்களது அறைக்கு அழைத்துப் பேசினோம். தந்தையுடன் வசிப்பதால் சிறுவனின் நலனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அலகாபாத்தில் நல்ல பள்ளிக்கூட வசதி, சிறுவன் வளர்வதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலை உள்ளது. இங்கிருந்து சிறுவனை இடப்பெயர்ச்சி செய்து பானிப்பட்டில் வசித்துவரும் தாயுடன் வசிக்க அனுமதிப்பது சரியல்ல என்கிற முடிவுக்கு வந்தோம். இதுபோன்ற வழக்குகளில் முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டியது இல்லை. ஒவ்வொரு வழக்கின் தன்மையையும் அறிந்து ஆராய்ந்து அதற்கு ஏற்ப தீர்ப்பளிக்கலாம். இதில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான். தாய் மவுஸ்மியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது." என்று தெரிவித்துள்ளனர்.