தங்களுக்குப் பிறந்த குழநதைக்கு ஒரு சிலர் ஜோதிடப்படி குழந்தை பிறந்த நட்சத்திரம், ராசி பார்த்து ஜோதிடர்கள் சொல்லும் பெயர்களை வைக்கிறார்கள்.
ஒரு சிலர் தங்களது பெற்றோர்களின் பெயரையே வைத்து விடுகிறார்கள். ஒரு சிலர் தங்களுக்கு விருப்பப்பட்ட தலைவர்கள், கடவுள்களின் பெயர்களை வைக்கிறார்கள்.
ஒரு சிலர் தங்களின் குழந்தையின் பெயரை வேறு எவருமே வைத்திருக்கக் கூடாது என்பது போல் புதியதாக வாயில் நுழையாத பெயர்களை எல்லாம் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படித்தான் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு பெற்றோர் தங்கள் மகளுக்கு "தாலுலாடஸ் தி ஹூலா பிரம் ஹவாய்" என்று வினோதமான பெயரைச் சூட்டி விட்டனர்.
இந்தப் பெயருடைய குழந்தை பள்ளிக்குச் சென்ற பின்புதான் அதற்கு பெயர் பிரச்சனை துவங்கியது.
அந்தக் குழந்தை அதன் முழுப்பெயரைச் சொல்ல முடியாமல் திக்கித் திணறத் துவங்கியது. அப்படி திக்கிச் சொன்னாலும் மற்ற குழந்தைகள் கேலி செய்யத் துவங்கினர்.
இதனால் அவமானம் அடைந்த அந்த குழந்தை தனது பெயரை "கே" என்று மட்டும் சொல்லத் துவங்கியது.
இப்போது அந்தக் குழந்தைக்கு 15 வயதாகி விட்டது. தனது பெயரை மாற்றம் செய்ய அனுமதி கோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு செய்தாள்.
இதை விசாரித்த நீதிபதி, குழந்தைக்கு இப்படி ஒரு பெயரை வைத்த பெற்றோரைக் கண்டித்தார்.
மேலும் அவர் தனது தீர்ப்பில்,
"வினோதமாகப் பெயர் வைக்கிறேன் என்று இரட்டைக் குழந்தைகளுக்கு போர்ட் நிறுவனக் கார்களான பென்சன், ஹெட்ஜஸ் என்றும் 13ஆம் நம்பர், பஸ் நிறுத்தம் என்றெல்லாம் கூட பெயர் வைக்கின்றனர்.
இந்தப் பெயர்களால் அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளால் கேலி கிண்டலுக்கு ஆளாகிறது. இதனால் அக்குழந்தையின் மனநிலை பாதிக்கப்படுவதுடன் அதனுடைய எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
இது போன்ற வினோதப் பெயர்களைக் குழந்தைகளுக்கு பெற்றோர் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த சிறுமி தனது பெயரை மாற்றிக் கொள்ள நீதிமன்றம் அனுமதிக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.