நான் தேனியில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த போது, கர்ப்பமாக இருந்த என்னுடைய மனைவியை மகளிர் மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று, அவருக்குரிய மருந்து, மாத்திரைச் சீட்டைப் பெற்றுக் கொண்டேன். நான் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளரும் ஒரு மருத்துவர் என்பதால் அப்படியே அவருடைய மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன்.
அவர் எனது மனைவிக்கு மகளிர் மருத்துவர் எழுதிய மருந்துச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, அவரும் சில ஆலோசனைகளை வழங்கினார்.
சிறிது நேரம் பேசிவிட்டு அருகிலுள்ள மருந்துக் கடையில் மருந்து வாங்குவதற்காக மருந்துச் சீட்டைத் தேடினேன். காணவில்லை.எனது நிறுவனத்தின் உரிமையாளரிடம் அந்த மருந்துச்சீட்டைக் கொடுத்ததைக் கேட்டேன். அவர் அதை முன்பே திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கூறினார். நான் அந்த டேபிளில் பலமுறை தேடியும் மருந்துச் சீட்டு கிடைக்கவில்லை. என் மனைவியுடன், அங்கிருந்த சில நர்சுகளும் தேடினர். அது கிடைக்கவில்லை. கடைசியாக எனது நிறுவனத்தின் உரிமையாளர் அவரே ஒரு மருந்துச் சீட்டை எழுதிக் கொடுத்தார்.
பின்பு அந்த அறையிலிருந்து வெளியே வந்ததும் ஒரு நர்ஸ் என்னிடம், "சார் அந்த மருந்துச்சீட்டை டாக்டர் சாப்பிட்டிருப்பார்." என்று மெதுவாகச் சொன்னார்.
அந்த டாக்டருக்கு காகிதம் தின்னும் பழக்கம் நெடுநாட்களாக இருக்கிறதாம். காகிதத்திலும் அவர் பசை தடவிய பகுதியை விரும்பிச் சாப்பிடுவார் என்பதும் பின்னால் மற்றவர்கள் சொல்லித் தெரிந்தது.
இதைக் கேட்ட என் மனைவி , "என்னங்க காகிதம் தின்னும் டாக்டரா, கிறுக்குத்தனமா இருக்கே..." என்று சொன்னது என் மனதுக்குள் இருந்து இன்னும் மறையாமல் இருக்கு... இது உங்களுக்கு எப்படி இருக்கு?