எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு நீரிழிவு நோய் இளம் வயதிலேயே வந்து விட்டது. இவருக்கு இந்த நோய் வந்த பின்பு அலோபதி டாகடர்களால் காலையிலோ மாலையிலோ வாக்கிங் போக வேண்டும். என்னென்ன உணவுகளை எப்படிச் சாப்பிட வேண்டும்? எந்த மாத்திரை, மருந்து சாப்பிட வேண்டும்? என்பது போல் ஒரு பட்டியல் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவரும் கடைப்பிடித்து வந்தார். அந்த நோயின் பாதிப்பு எதுவும் தெரியாமல் நன்றாக இருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் நீரிழிவு நோய்க்கு அக்கு டச் சிகிச்சை செய்தால் முழுமையாக சரியாகி விடுகிறது என்று தெரிவித்திருக்கிறார். அவரும் அந்த அக்கு டச் சிகிச்சைக்குச் சென்றிருக்கிறார். அங்கு வாரத்திற்கு ஒருமுறை வந்து பார்த்தால் போதும் என்றும் மேலும், அவருக்கு உணவுக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. எந்த உணவையும் சாப்பிடலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் டீ, காபி போன்ற பால் கலந்தவைகளையும், தயிர், மோர் மற்றும் பாலையும் தவிர்த்திட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். காலை மாலை வேளைகளில் வாக்கிங் போக வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். இவரும் பால் ஒன்றைத் தவிர மற்ற உணவு வகைகளை வயிறு பிடிக்க சாப்பிட்டிருக்கிறார். அப்படியே வாக்கிங் போவதையும் நிறுத்தி விட்டார்.
அவரது உடலில் சர்க்கரையின் அளவு வெகுவாகக் கூடி விட்டது. இதைக் குறைக்க என்ன செய்வது என்று அக்கு டச் சிகிச்சை அளித்தவரிடம் கேட்டிருக்கிறார். அவர் இப்படித்தான் முதலில் சர்க்கரையின் அளவு கூடுதலாகி பின்பு அப்படியே குறைந்து விடும். சாப்பாட்டுடன் பழ வகைகளையும் அதிகமாகச் சேர்த்துச் சாப்பிடுங்கள் என்று கூறியிருக்கிறார். அவரும் அக்கு டச் சிகிச்சை அளித்தவர் சொன்னபடியெல்லாம் பழவகைகள், உணவு வகைகள் என்று மேலும் அதிகமாக்கியிருக்கிறார். சர்க்கரையின் அளவு அதை விடக் கூடி விட்டது. அவருடைய உடலில் பிறப்புறுப்பு உட்பட சில இடங்களில் சிறிய கொப்புளங்கள், வெடிப்புகள் என்று தோன்றியிருக்கிறது. அக்கு டச் சிகிச்சை அளித்தவர் மேலும் விடாமல் நல்லாச் சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று சொல்லியிருக்கிறார்.
இவரும் அதன்படியே சாப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவர் உடலில் மெலிவு ஏற்பட்டதுடன் கால்களில் உணர்வு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பயந்து போன அவர் சென்னைக்குச் சென்று பிரபலமான ஒரு மருத்துவமனையில் காண்பித்திருக்கிறார். அங்கு இன்னும் சில நாட்கள் இப்படிச் சாப்பிட்டிருந்தால் உங்கள் கை கால்கள் ஏதாவது செயலிழந்து போயிருக்கும் என்று சத்தம் போட்டு அதற்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழித்து வீடு திரும்பிய அவர் தனது கிறுக்குத்தனமான இந்த செயலை நினைத்து இன்னும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.