நண்பர் ஒருவர் கைகளில் அடிக்கடி தீக்காயங்கள் ஏற்பட்டு விடும். ஒரு சமயம் பால் கொட்டி விட்டது என்பார். மற்றொரு சமயம் குளிக்கத் தண்ணீர் சுட வைத்த போது காயம்பட்டு விட்டது என்பார்.
இப்படி இவருக்கு மட்டும் தீக்காயங்கள் ஏற்படுகிறதே என்று நண்பர்கள் நாங்கள் வருத்தப்பட்டுப் போவோம்.
ஒருநாள் நடைபாதை ஒட்டலில் சாப்பிடச் சென்றபோது தோசைக்கல்லில் கைபட்டு விட்டதாகக் கூறி காயத்தைக் காண்பித்து வருத்தப்பட்டார்.
ஆனால் அந்தக் காயம் விபத்தாகப் பட்டதாக எனக்குத் தோன்றவில்லை. வேண்டுமென்றே காயப்படுத்திக் கொண்டதாகவே தெரிந்தது.
அப்புறம் அவரிடம் தீக்காயப்படுத்தித் தன்னை வருத்திக் கொள்வதன் விஷயத்தைக் கேட்டு நாங்கள் வருத்தப்பட்டுப் போனோம்.
அவர் யாரோ ஒரு பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணும் இவரை விரும்பி இருந்திருக்கிறார்.
இருவரும் நேரம் கிடைத்த போதெல்லாம் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள்.
பின் பெண் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் துவங்கியிருக்கிறார்கள் அந்தப் பெண்ணும் இவரை மறந்து விட்டு புதிய மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டவும், இவரைக் கழற்றி விடவும் தயாராகி விட்டார்.
இதனால் அந்தப் பெண்ணை பார்க்க ஒவ்வொரு மாப்பிள்ளை வீட்டார் வரும் போதும் தனக்குத் தீக்காயங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்.
ஒரு மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண்பிடித்துப் போய் நிச்சயம் செய்து விட்ட நிலையில் வெறுத்துப் போய் தோசைக்கல்லில் தனது கையை வைத்துப் பெரிய அளவிலான காயத்தை ஏற்படுத்தி விட்டார்.
பின்னர் நாங்கள் அவரிடம் உன்னுடைய காதல் உண்மையாயிருந்திருந்தால் அந்தப் பெண் வேறொருவருடனான திருமணத்திற்கு சம்மதித்து இருக்கவே மாட்டார்.
இந்தக் காதலையும், இந்தப் பெண்ணையும் நீ மறந்து விடு என்று தினந்தோறும் ஆறுதல் சொல்லி ஒரு வழியாக அந்தப் பெண்ணை மறக்கச் செய்தோம்.
தற்போது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நன்றாக இருக்கிறார்.
ஆனால் அவர் அந்தப் பெண்ணை மறந்து விட்ட போதிலும் அவர் கையில் ஏற்படுத்திக் கொண்ட தீக்காயங்கள் இன்னும் மறையாமல் வடுக்களாக இருக்கின்றன.
காதல் என்கிற போதையில் அவர் கையில் சூடு போட்டுக் கொண்ட தீக்காயங்களை கிறுக்குத்தனம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?