எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் புதிதாக மருத்துவமனை ஒன்று கட்ட வேண்டும் என்று என்னை அணுகினார்.
கட்டிடத்தின் செலவுகளை அதிகம் போய்விடாமல் மிச்சப்படுத்திக் கட்ட வேண்டும் என்றார். நானும் அவருக்கு ஆடம்பரமானவைகளைத் தவிர்த்து வரைபடம் தயாரித்து செலவுகளைக் குறைத்து கட்டிடத்திற்கு சரியான மதிப்பீட்டுத் தொகையும் செய்து அவருக்குக் கொடுத்தேன்.
அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் கட்டிடப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை அவரே வாங்கித் தந்து விடுவதாகவும் கட்டுமானப் பணிகளை மட்டும் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
நானும் அதற்குச் சம்மதித்து கட்டுமானப் பணிகளைத் துவங்கினேன். ஆனால் அவரோ கட்டுமானப் பொருட்களில் மிகவும் விலை குறைந்த செங்கல், சிமெண்ட், கம்பிகள், பலமில்லாத இலேசான மரத்தாலான பலகைகள் என்று தரமில்லாத பொருட்களை வாங்கித் தந்தார்.
நான் அவரிடம் இப்படி தரமில்லாத பொருட்களால் கட்டிடம் பலமில்லாமல், பாதுகாப்புமில்லாமலும் போய்விடும் என்றேன்.
ஆனால், அந்த டாக்டரோ நான் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
என்னுடைய கட்டிடத்திற்கு நான் வாங்கிக் கொடுக்கிற பொருளைப் போடுங்கள். இதனால் இழப்பு வந்தால் எனக்குத்தானே உங்களுக்கு ஒன்றுமில்லையே என்று சொல்ல, நானும் பேசாமல் அவர் இஷ்டப்படியே விட்டு விட்டேன்.
கட்டிடத்தின் மின்சாரப் பணிகளிலும் அவர் வாங்கிக் கொடுத்த பொருட்கள் மிகவும் தரமில்லாதிருந்தது. மின் விசிறிக்கு காற்றின் வேகத்தைக் கூட்டிக் குறைக்கும் ரெகுலேட்டர் இல்லை. மின்விசிறியுடன் கொடுக்கப்பட்ட ரெகுலேட்டரை அவர் தனக்குத் தேவையில்லை என்று திருப்பிக் கொடுத்து அதற்கான பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அனைத்து அறையிலும் மின் விசிறிகள் ஒரே வேகத்தில் ஓடும்படி செய்யப்பட்டது. இப்படி செய்தால் காற்றை மருத்துவமனையில் நோயாளிகள் விரும்பும் அளவில் வைத்துக் கொள்ள முடியாதே என்று சொன்னாலும் அவருக்கு அது காதில் ஏறவே இல்லை.
நானும் எப்படியோ திருப்தியில்லாமல் அந்த வேலையை முடித்துக் கொடுத்தேன்.
பின்பு அந்த மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது.
திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் கட்டிடப் பணிகளைப் பார்த்து என்ன கதவெல்லாம் இப்படி இலேசாயிருக்கு... பேனுக்கு ரெகுலேட்டர் வேண்டாமா? பெயிண்டெல்லாம் கையில் ஒட்டுதே... உங்களை இஞ்சினியர் ஏமாத்திட்டான்... இஞ்சினியர் உங்ககிட்ட செமையாக் காசு அடிச்சுட்டான்... அப்படி இப்படின்னு ஆளாளுக்கு அந்த டாக்டரிடம் சொல்ல,
அவரும் அவரோட குறையை மறைத்து இந்தக் காலத்துல எநத இஞ்சினியரையும் நம்ப முடியலே... என்று அவர்களிடம் குறைபட்டுக் கொண்டார்.
எனக்கு ஏண்டா இந்த வேலையைச் செய்தோம் என்றாகி விட்டது.
அந்த டாக்டரின் கிறுக்குத்தனத்திற்கு நான் கிறுக்கனாகிப் போன மனவேதனை இன்னும் எனக்குள் ஆறாமல் இருக்கிறது.
இப்போதெல்லாம் எவ்வளவு பழக்கமானவராக இருந்தாலும் சரி, நான் எனக்கு சரியென்று தோன்றுவதை மட்டும்தான் செய்கிறேன்.