நான் தற்பொழுது லண்டனில் பணி புரிந்து கொண்டு இருக்கிறேன். நேற்று என்னுடைய இந்திய நண்பன் ஒருவன் தான் ஒரு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி இருப்பதாக என்னிடம் பெருமையாகச் சொன்னான்.
சாதாரண ஜீன்ஸ் பேண்டை விட இதன் விலை அதிகம் என்று வேறு அலட்டிக் கொண்டான். அடுத்த நாள் அவன் அணிந்து வந்த ஆடையைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன்.
அந்த ஆடை முழுக்க ஆங்காங்கே ஓட்டைகள். அதுவும் தொடை பகுதி முழுக்க அதிகமான ஓட்டைகள். அவன் சொன்ன விஷயம் என்னை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த பேண்டின் விலை இந்தியாவில் மூவாயிரம் ரூபாய் என்றும் மற்ற சாதாரண பேண்டின் விலை ஆயிரத்து ஐநூறு என்றும் பீற்றிக் கொண்டான்.
மனிதன் ஆடை இல்லாமல் திரிந்து பின்பு இலை தலைகளை ஆடையாக கொண்டு, பின்பு நாகரிக வளர்ச்சியின் காரணமாக ஆடைகளை உடுத்த தொடங்கினான்.
ஆனால் இன்று நாகரிகம் என்கிற பெயரில் கலாச்சார சீரழிவு காரணமாக இப்படி கிழிந்த ஆடைகளை உடுத்தவும் தொடங்கி விட்டான்.
ஆடைகளைக் கிழித்து கொண்டு அலையும் மனநிலை பாதித்தவர்களை நாம் பைத்தியம் என்று சொல்வோம்.
இன்றைய மனநிலையில் கிழிந்த ஆடை அணிவது நாகரீகம் என்று ஆகி வருகிறது. மேலும், இதை விமர்சிக்கும் என்னைப் போன்றோருக்கு பழைய பஞ்சாங்கம் என்று கேலி பேச்சு வேறு...
மனிதனின் தரத்திற்கு ஆள் பாதி ஆடை பாதி என்பது போய் ஆடையே பாதி என்கிற நிலையில் செல்லும் இந்த நாகரீகத்தைக் கிறுக்குத்தனம் என்பதா? இல்லை கோமாளித்தனம் என்பதா?