இந்தியாவில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய விருப்பப்படுவதின் காரணம், நமது உழைப்பும், திறமை தான் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
உலகில் மென்பொருள் துறையிலும் பிபிஒ துறையிலும் இன்று பல லட்சம் இந்தியர்கள் பணி புரிகிறார்கள். சென்னையில் மட்டும் இது போன்ற நிறுவனங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கும்.
இந்நிறுவனங்களில் பெரும்பான்மையான இளைஞர்களும், இளைஞிகளும் தங்கள் கல்லூரியில் இருந்து நேரடியாக பணியில் சேர்ந்து விடுகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு தாரகச் சொல் TREAT என்று சொல்லப்படும் விருந்து. இதற்கு அவர்கள் செலவிடும் தொகையை கேட்டால் சராசரி சம்பளம் வாங்கும் ஒரு நபர் மயக்கம் அடைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
சம்பளம் வாங்கியவுடன் மிகப்பெரிய உணவகங்களில் இந்த விருந்து உபசரிப்புகள் தாராளமாக நடந்தேறுகின்றன. இந்த உபசரிப்புகளில் நல்ல தமிழ் உணவுகளைத் தவிர்த்து பிட்சா, பர்கர் என்று உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவுகள்தான் இடம் பெறுகின்றன.
மேலும் நாகரிகம் என்ற பெயரில் டிச்கோதே என்ற நடனம் வேறு. அதாவது எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணுடனும் சேர்ந்து ஆடலாம்.
இந்த நடனத்தின் போது இவர்களின் ஆடை போக்கு பற்றி சொல்வதற்கே இல்லை.
நாளைய பாரதம் நம் கையில் என்று சொல்லிப் பெருமை கொள்ளும் நாம் இப்படி தடம் மாறி செல்வதை யாரும் கண்டு கொள்வதாகவும் தெரியவில்லை.
அப்படியே யாரேனும் கூறினால் உடனடி பதில் என்ன என்றால்... இதெல்லாம் GENERATION GAP... அதாவது, தலைமுறை இடைவெளி.
எத்தனை தலைமுறை போனாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் இந்தியப் பண்பாடு மாறாது.
ஆணுக்கு பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே என்று பாரதி அன்று சொன்னதை யாரும் இன்று மறுக்கவில்லை, மறக்கவும் இல்லை. இளைஞர்களே... இளைஞிகளே... நீங்கள் வேலையில் சேர்ந்த உடன் ஒரு மாதம் வாங்கும் சம்பளம் அதிகமாக இருக்கலாம்.
இந்த சம்பளப்பணத்தை உங்கள் குடும்பத்திற்கோ அல்லது இந்தச் சமுதாயத்திற்கோ பயனுள்ள வழியில் செலவிடுங்கள்.
ஆடம்பரம் என்ற பெயரில் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஊறு விளைவிக்கும் உங்கள் இளம்வயதுக் குறும்புகளை விரட்டுங்கள்...