"நாங்களெல்லாம் அந்தக் காலத்தில எங்க வீட்டுக்காரர் (கணவர்) பெயரைச் சொல்லவே மாட்டோம். இப்ப இருக்கிற பொண்ணுங்க விட்டுக்காரர் பேரை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கிட்டு இருக்காளுங்க... என்ன நாகரீகமோ... என்ன இழவோ..." - இப்படி வீட்டில் கிடக்கும் பாட்டிகள் புலம்பித் தள்ளிக் கொண்டிருப்பதை கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள்.
அந்தக் காலத்தில் பெண்கள் புகுந்த வீட்டிலிருக்கும் பெரியவர்கள் பெயரையோ அல்லது ஆண்கள் பெயரையோ வாய் தவறிக் கூடச் சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொன்னால் அவர்களது ஆயுள் (மரியாதையும்தான்) குறைந்து போய் விடுமாம். இதனால் வீட்டில் தனது குழந்தைகளுக்கு மாமனார்-மாமியார் பெயர் வைத்து விட்டால் அந்தக் குழந்தைகளையும் பெயர் சொல்லிக் கூப்பிட முடியாது. அந்தப் பெயர்களில் முதல் எழுத்தைக் கூட உச்சரிக்க மாட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் பட்ட பாடு இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொரு பெயருக்கும் ஒரு விளக்க உரையே வாசித்த காலம் அது. அப்போது பெண்ணாய்ப் பிறந்து விட்டாலே கஷ்ட காலம் தான். பால் என்று ஆரம்பிக்கும் பெயர் கொண்ட ஒருவரின் மனைவி வீட்டுக்குப் பால் வாங்க வேண்டுமென்றால் மிகவும் சிரமப்படுவார். ஆம்! பால் வேண்டும் என்று கேட்க முடியாதே... பால்காரரிடம் "காப்பிக்கு ஊத்தற வெள்ளை" அரை லிட்டர் கொடுங்க என்று கேட்பாராம்.
மணி என்கிற பெயருடையவரின் மனைவி மணி கேட்கவே கஷ்டப்படுவார். அவர் "கடிகாரம் இப்போ என்ன காட்டுது?" என்று கேட்க வேண்டுமாம்.
முருகன் என்ற பெயருடையவரின் மனைவி முறுக்கு வேண்டுமென்றால் முதலில் அவர் நொறுங்கிப் போவார். "வட்டமாச் சுற்றி வச்சிருக்கிற பலகாரம்" கொடுங்கன்னு கேட்டு அவர் அதை வாங்கப் படுகிற கஷ்டம் அவருக்குத்தானே தெரியும்.
இப்படி பெயரில் கூட பெண்களைக் கஷ்டப்படுத்திக் காயப்படுத்திய காலம் இப்போது மலையேறிப் போய்விட்டது.
இப்போதெல்லாம் பெண்கள் கணவனை பெயரைச் சொல்லி மட்டுமில்லை, வாடா, போடா என்றும் கூட (செல்லமாகத்தான்) அழைக்கிறார்கள்.
இப்படி இந்தக்காலத்துப் பெண்கள் குறும்பாக அழைத்தாலும் அந்தக்காலத்தில் பெருசுங்க பெயர் சொல்ல தடை செய்திருந்தது ஒரு மாபெரும் குறும்புதான்.