எங்கள் வீட்டில் என் மூன்று வயது சின்ன மகன் கலாநிதி மருந்து சாப்பிடும் போதெல்லாம் எனது தாயார் அவனைத் தனது மடியில் போட்டு மருந்து புகட்டுவது வழக்கம்.
அம்மாதிரியான சமயங்களில் அவன் தனது கால்களை வேகமாக உதறுவான்.
அப்படி அவன் செய்வதைத் தடுக்க, அவன் கால்களை உதறுவதைக் கட்டுப்படுத்த, எனது தாயார் என் 11 வயது முதல் மகன் சௌந்தர்யனை உதவிக்கு அழைத்து அருகில் வைத்துக் கொள்வார்.
சின்னவனுக்கு மருந்து புகட்டும் போது, பெரியவன் அவனது கைகளால் சின்னவனின் கால்களை அழுத்திப் பிடித்து என் தாயாருக்கு உதவுவான்.
மருந்து கொடுத்தவுடன் குழந்தைக்கு வாய்க்கசப்பு தெரியாமல் இருக்க பின்னர் கொஞ்சம் சர்க்கரையை அவன் வாயில் இடுவதும் உண்டு. இது அவ்வப்போது நடப்பது வழக்கம்.
ஒரு நாள் இரவு மணி 11.00 இருக்கும். திடீரென்று சின்னவனுக்கு காது வலி. இதைக் கண்டுபிடிக்கவே எங்களுக்கு ஒரு மணி நேரமாகி விட்டது.
அன்று வீட்டில் இருந்த காது சொட்டு மருந்தினைப் பயன்படுத்தும் தேதி காலாவதி ஆகி விட்டிருந்தது.
சரிதானென்று என் அம்மா பாட்டி வைத்தியம் போல் கொஞ்சம் எண்ணெய் எடுத்துக் காய்ச்சி, சின்னவன் காதில் விட முயற்சிக்கையில், அவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவன் திடீரென்று, "அண்ணா என் காலை பிடிச்சிக்கோ” எனச் சொல்லிவிட்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் அழத் தொடங்கினான்.
பிறகு என் அம்மா அவனை மடியில் போட்டு அவனது காதில் எண்ணெய் விடத் தொடங்கினார்.
எண்ணெய் காதில் இறங்க ஆரம்பித்ததுமே பழக்க தோஷத்தில் “சக்கர,சக்கர....” என அழ ஆரம்பித்தான்.
என் சின்ன மகனின் இந்தக் குறும்பால் எங்கள் அனைவருக்கும் பயங்கர சிரிப்பு.
இதை இப்போது கூட நினைத்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம் எங்கள் குடும்பத்தோடு.