போதையில் பிறந்த பெண் குழந்தை
லண்டனில் வசிக்கும் போலந்து நாட்டைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அது கடுமையான போதையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். அதன் ரத்தத்தில் 2.6 கிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருந்தது.
இதையடுத்து, தாய்க்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருடைய ரத்தத்தில் ஆயிரம் கிராமுக்கு 1.2 கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரசவத்தின் போது அந்தத்தாய் மது குடித்தது தெரிந்தது. பிரசவவலி தெரியாமலிருக்க அவர் மதுவைக் குடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பெரியவர்களின் ரத்தத்தில் 1.2 கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட 15 மடங்கு அதிகம். மேலும் ஒரு பாட்டில் ஒயின் அல்லது 2லிட்டர் பீருக்குச் சமமானது. குழந்தையின் உடல் மிகவும் சிறியது என்பதால், தாய் குடித்த மதுவின் பாதிப்பு அதனிடம் அதிகம் இருந்தது. குழந்தையின் ரத்தத்தில் இருந்த 2.6 கிராம் ஆல்கஹால், 750 மி.லி. அளவுடைய பெரிய பீர் பாட்டில்கள் 6 குடித்ததற்குச் சமமானது.
இது தொடர்பாக, குழந்தையின் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படுத்தியதாக தாயின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது நிரூபிக்கப்பட்டால் அந்தத் தாய்க்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
- சித்ரா பலவேசம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.