இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
ஒரிசா மாநிலம் பெர்காம்பூர் மாவட்டம் கேந்துபாதர் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான பபினாபத்ரா. கர்ப்பமான இவரை ஸ்கேன் மூலம் சோதனை செய்து பார்த்த டாக்டர்கள் அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இவருக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை 1.3கிலோ எடையுடன் இருந்தது. சாதாரணமாக இரட்டைக் குழந்தை என்றால் ஒருமணி நேர இடைவெளியில் அடுத்த குழந்தை பிறந்துவிடும். ஆனால் பபினாவின் வயிற்றில் இருந்த மற்றொரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவில்லை. இதனால், அந்த குழந்தை பிறப்பதற்கு குறைந்தது ஒரு மாதமாகும் என்று அறிந்த டாக்டர்கள் அவரை மருத்துவமனையிலேயே தங்கவைத்து சிகிச்சையளித்தனர். முதல் குழந்தை பிறந்து 40 நாட்கள் கழித்து பபினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை 2கிலோ எடை இருந்ததாம்.
இது குறித்து பபினாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர் மொகந்தி கூறியது:
இரட்டைக் குழந்தைகள் இருவகை உண்டு. மருத்துவ அறிவியலில் இதற்கு "யூனி ஓவுலர்", "பை ஓவுலர்" என்று பெயர். பை ஓவுலர் பிரிவைச் சேர்ந்த 2 குழந்தைகள் என்றால், ஒன்றிரண்டு நாட்கள் வித்தியாசத்தில் பிறக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் 40 நாட்கள் வித்தியாசம் என்பது மிகவும் அதிகம்தான். ஆனால் பை ஓவுலர் இரட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
- சித்ரா பலவேசம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.