சும்மா வலைப்பூ - முத்துக்கமலம் இணைய இதழ்
சென்னையில் இருப்பவர்களில் ஓரிருவர் மட்டும் தமிழ் இணைய இதழ் தொடங்கிய காலத்தில், சென்னைக்கு வெளியில் தேனியிலிருந்து மு. சுப்பிரமணி முதன் முதலாகக் கடந்த 01-06- 2006 முதல் முத்துக்கமலம் எனும் பெயரில் தமிழ் இணைய இதழ் (www.muthukamalam.com) ஒன்றினைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்து வருகிறார். இதன் வெளியீட்டாளராக உ. தாமரைச்செல்வி இருக்கிறார். மின்னிதழ் குறித்துப் பலரும் அறியாத நிலையில், இணையத்தில் கிடைக்கும் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளுக்கு ‘முத்துக்கமலம்’ இணைய இதழின் ஒவ்வொரு புதுப்பித்தலுக்கும், புதுப்பித்தலில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் குறித்த தகவல்களை அனுப்பி அதனைப் பார்வையிடச் செய்வதற்காக ஐந்தாண்டுகள் வரை தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கில மொழியிலான இணையதளங்களைப் போல தமிழ் இணையதளங்களுக்கு விளம்பர வருவாய் எதுவும் கிடைக்காத நிலையிலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 12 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் ஒவ்வொரு புதுப்பித்தலிலும் இடம் பெறும் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய தலைப்புகளிலான படைப்புகளில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு, அதனை எழுதியவருக்கு நூல் ஒன்று பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. பிற தலைப்புகளிலான படைப்புகளுக்கும் நூல் அல்லது பயன்படுத்தக்கூடிய பொருள் பரிசு அளிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆங்கிலத் தேதிகள் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் இந்த இதழில் அரசியல், திரைப்படம் தவிர்த்து, ஆன்மிகம், பகுத்தறிவு, கதை, கட்டுரை, கவிதை, அடையாளம், நேர்காணல், கல்வி, குட்டிக்கதை, குறுந்தகவல், சிரிக்க சிரிக்க, மகளிர் மட்டும், சிறுவர் பகுதி, மருத்துவம், சமையல், சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள், மின்புத்தகங்கள், தமிழ் வலைப்பூக்கள், தினம் ஒரு தளம் என்பது உட்பட 25 முதன்மைத் தலைப்புகளில் பல்வேறு படைப்புகள் இடம் பெற்று வருகின்றன. இந்த இணைய இதழில் இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, கனடா, டென்மார்க், நார்வே, ஜெர்மனி, இங்கிலாந்து, ஹாங்காங் போன்ற நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ்ப் படைப்பாளர்கள் பலர் தொடர்ந்து எழுதி வருகின்றனர். இந்த இணைய இதழுக்கு உலகம் முழுவதும் 42 நாடுகளில் தொடர் பார்வையாளர்களும், 117 நாடுகளில் அவ்வப்போது பார்வையிடும் பார்வையாளர்களும் இருக்கின்றனர்.
இணையத்தில் இடம் பெற்றிருக்கும் தமிழ் இணைய இதழ்களில் முத்துக்கமலம் புகழ்பெற்ற இணைய இதழாக இருந்து வருகிறது. முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெற்று வரும் கதைகளில் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் படைப்புகள் இடம் பெற்று வருவதால், அந்த நாட்டின் இடங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், உணவு வகைகள், வாழ்க்கை முறைகள் மற்றும் பண்பாடுகள் போன்றவைகள் இடம் பெறுவதால் உலகளாவிய தமிழர்களின் வாழ்க்கையையும், அவர்களின் பண்பாடுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.
கட்டுரைகள் பொது, இலக்கியம், சமூகம், வரலாறு, அறிவியல் & தொழில்நுட்பம், சட்டம், எப்படி? மற்றும் மனம் திறந்து எனும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன. இக்கட்டுரைப் பகுதியில் கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இடம் பெற்று வருகின்றன. இவை தவிர, வேறு சில தொடர் கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர, கருத்தரங்கக் கட்டுரைகள் எனும் தலைப்பிலும் மூன்று கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன. திருச்செங்கோடு, ஆன்மிகம் பகுதியில் அனைத்து சமயங்களைப் பற்றிய தகவல்களும் இடம் பெற்று வருகின்றன. அடையாளம் பகுதியில் தமிழ் மற்றும் தமிழர்களுக்காகப் பங்களிப்பு செய்தவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளும், நேர்காணல் எனும் பகுதியில் உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்புகளைச் செய்து கொண்டிருக்கும் தமிழறிஞர்களின் நேர்காணல்களும், குட்டிக்கதைகள் எனும் பகுதியில் நல்ல நீதிகளை வழங்கும் நீதிக்கதைகளும், சிரிக்க சிரிக்க எனும் பகுதியில் நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் நகைச்சுவைச் செய்திகளும், குறுந்தகவல் எனும் பகுதியில் பொது அறிவுத் தகவல்களும், சிறுவர் பகுதியில் சிறுவர்களுக்கான படைப்புகளும், மகளிர் மட்டும் பகுதியில் மகளிருக்கான படைப்புகளும், சமையல் பகுதியில் பல்வேறு உணவுத் தயாரிப்பிற்கான சமையல் செய்முறைக் குறிப்புகளும் இடம் பெற்று வருகின்றன.
தமிழ் வலைப்பூக்கள் எனும் தலைப்பில் தமிழில் இடம் பெற்றிருக்கும் வலைப்பதிவுகள் குறித்த குறிப்புகளும், அதற்கான இணைய முகவரியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழ் மொழியில் இடம் பெற்றிருக்கும் பதிவுகளை அதிகமான பார்வையாளர்கள் பார்வையிடவும், இணையப் பரப்பில் தமிழ் மொழிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கையினை அதிகப்படுத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூகுள் போன்ற இணைய வழியிலான வணிக விளம்பரங்களை அளிக்கும் நிறுவனங்கள் தமிழ் மொழியிலான தளங்களுக்கு எந்த விளம்பரங்களையும் வழங்காத நிலையிலும், வணிக நோக்கமில்லாமல், வேறு எவ்விதப் பொருளாதாரப் பயனுமில்லாமல் தமிழ் இணைய இதழ்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் தங்கள் வாழ்வை நீட்டித்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்றன. தமிழ் இணைய இதழ்களில் பல தொடங்கிய ஓராண்டுக்குள்ளாகவே காணாமல் போய் விட்டன. ஆனால், முத்துக்கமலம் இணைய இதழ் தமிழ் மொழியில் தொடர்ந்து 12 ஆம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
* தமிழ் விக்கிப்பீடியாவில் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்த தனிக் கட்டுரைப் பக்கம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. தமிழ் இணைய இதழ் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் போன்றவற்றில் இணைய இதழ் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளில் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்தும், அதன் சிறப்பு குறித்தும் சிறப்புத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
* தமிழில் வெளியாகும் இணையதளங்கள் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் போன்ற 600க்கும் அதிகமான தளங்களிலிருந்து முத்துக்கமலம் இணைய இதழினைப் பார்வையிடுவதற்கு இணைப்பு வசதி அளிக்கப்பட்டிருக்கிறது.
* முத்துக்கமலம் இணைய இதழ் குறித்தும், முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெற்றிருக்கும் சிறப்புப் பக்கங்கள் குறித்தும் தமிழ் கம்ப்யூட்டர் (செப்டம்பர் 16-30, 2007), இந்தியா டுடே தமிழ் பதிப்பு (நவம்பர் 7, 2012) மற்றும் குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி (பிப்ரவரி 16 - 28, 2017) ஆகிய இதழ்களில் சிறப்புச் செய்திகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
* இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுவின் (Council of Scientific and Industrial Research) கீழ் செயல்படும் புதுடெல்லியிலுள்ள தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வளங்கள் நிறுவனம் (National Institute of Science Communication and Information Resources) முத்துக்கமலம் இணைய இதழுக்குப் பன்னாட்டுத் தரக்குறியீட்டு எண் (International Standard Serial Number) - ISSN 2454 - 1990 வழங்கியிருக்கிறது. இதன் மூலம் முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறும் இந்தியாவிலிருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் தமிழ்த்துறை ஆய்வு மாணவர்களின் தமிழாய்வுக் கட்டுரைகள் பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
* திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆய்விதழ்களுக்கான பட்டியலில், முத்துக்கமலம் இணைய இதழினைத் தமிழ்த்துறைக்கான பன்னாட்டுத் தமிழ் இணைய இதழாக அங்கீகரிப்பதற்காகப் பரிந்துரை செய்திருக்கிறது.
* திருச்செங்கோடு கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியும், முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழும் இணைந்து ”தமிழ்ச் சிந்தனை மரபுகள்” எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை கடந்த 19-4- 2017 அன்று திருச்செங்கோடு, கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியில் நடத்தியது. இக்கருத்தரங்கிற்குப் பல்வேறு நாடுகளில் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 117 கட்டுரைகள் வந்திருந்தன. இக்கட்டுரைகள் அனைத்தும் முத்துக்கமலம் மின்னிதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இக்கட்டுரைகள் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் த. கண்ணன் மற்றும் முனைவர் கோ. இரவிச்சந்திரன் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு சென்னை, சீதை பதிப்பகம் மூலம் 568 பக்கங்களில் ”தமிழ்ச் சிந்தனை மரபுகள்” எனும் பெயரில் நூலாகவும் (ISBN: 978-93- 82689-54- 6) உருவாக்கப்பட்டு ரூ.600/- விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
* தமிழ் இணைய இதழ்கள் குறித்து, முனைவர் பட்ட ஆய்வு செய்த சிலர் தங்கள் ஆய்வேடுகளில் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்தும், அதன் உள்ளடக்கங்கள் குறித்தும் ஆய்வுத் தகவல்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.
* மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் தமிழ்த் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயின்ற மாணவி த. சுதந்திராதேவி (பதிவு எண்: A4C 6060007) என்பவர், திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் துரை. மணிகண்டன் அவர்களை ஆய்வு நெறியாளராகக் கொண்டு “முத்துக்கமலம் இணையவழிச் சிறுகதைகள் – மதிப்பீடு” எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிருக்கிறார்.
* திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற திருச்சிராப்பள்ளி, பிசப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி ஏ+) யில் தமிழ்த் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயின்ற மாணவி பெ. கீதா (பதிவு எண்: 7TM124102) என்பவர் அக்கல்லூரியின் தமித்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இரா. விஜயராணி அவர்களை ஆய்வு நெறியாளராகக் கொண்டு "முத்துக்கமலம் இணைய இதழ் உள்ளடக்கப் பகுப்பாய்வு” எனும் தலைப்பிலும் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டம் பெற்றிருக்கிறார்.
இத்தகவல் வலைப்பூவில் இடம் பெற்றுள்ள இணைய முகவரி: