இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Interview
நேர்காணல்

நா.குமார் குமரப்பன்

ஆல்பர்ட் பெர்னாண்டோ, அமெரிக்கா


ந‌ம் த‌மிழ் மொழியை அய‌ல் மண்ணாம் அமெரிக்க மண்ணில் அறிவுசார் ப‌ல்க‌லைக்க‌ழ‌கம் ஒன்று கற்றுக் கொடுக்கிறது. அந்தப் பல்கலைக்கழகம் பெர்க்கிலி பல்கலைக்கழகம். கலிஃபோர்னியாவில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்க முன்னின்று முயற்சி கண்டவர்களுள் கலிபோர்னியாவைச் சேர்ந்த நா.குமார் குமரப்பன் அவர்களும் ஒருவர்.

தமிழகத்தில் B.E., (Electronics & Communication Engineering); அமெரிக்காவில் M.S.(Electrical Engineering) படித்த இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கலிபோர்னியாவை (சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி) இருப்பிடமாகக் கொண்டு வசித்து வருபவர். ரிக்கோ நிறுவனத்தில் இயக்குனராக (Director of Engineering, Ricoh Corporation.) இருக்கிறார்.

எந்த ஒரு சூழலிலும் மனித நேயத்துடனும், ஆகாயத்தைப் பார்த்து அற வாழ்விற்கு தடம் போட முயலாமல் அக்கம் பக்கத்தின் சமூகப் பிரச்சனைகளில் அக்கரை கொள்கிறவராகத் திகழ்கிறார். இத‌னால் பொதுந‌ல‌ப் பொறுப்புக‌ள் ப‌ல‌ இவ‌ரைத் தேடி வ‌ந்து சேர்ந்து கொண்ட‌து. 1980 - சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் (San Francisco Bay Area Tamil Manram) நிறுவிய குழுவில் ஒருவர்.

1991 - 1997: UC Berkeley Tamil Chair - நிறுவிய நிதி திரட்டும் குழுவிற்குத் தலைவர்.

2002 - உத்தமம் (INFITT) சார்பாக, சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்த தமிழ் இணைய மாநாட்டிற்குத் (TI 2002) துணைத் தலைவர்.

உத்தமத்தின் (INFITT) தற்சமய பொருளாளர்.

கலிபோர்னியா தமிழ் கழகத்தின் (CTA - California Tamil Academy)துணைத் தலைவர் - இது கலிபோர்னியா தமிழ் அமெரிக்கர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் முயற்சி - தற்சமயம் கிட்டத்தட்ட 1000 குழந்தைகள் இங்கு தமிழ் கற்கின்றார்கள்.

ஈழத் தமிழர்களின் துயரில் பங்கு கொண்டு, இங்குள்ள TNC (Tamils of Northern California)அமைப்பின் மூலம் சிறு சிறு முயற்சிகள்

-என்று இவரின் தமிழ் வளர்ப்பு முயற்சிகள் மூலம் உதவ முயலும் இவ‌ரின் மனித நேயம் என்ற தொண்டு க‌ரைகாணா க‌ட‌லாய்த் தொட‌ர்கிற‌து. இனிமை, எளிமை, நேர்மை என்ற‌ ப‌ண்புக‌ளில் மிளிரும் நா.குமார் குமரப்பன் அவ‌ர்க‌ளின் மின்காண‌லில் புகுவோமா?த‌மிழ‌க‌த்திலிருந்து இங்கு வ‌ந்த‌ ப‌ல‌ர் த‌ம் தாய்மொழியைத் தொலைத்து, த‌மிழ‌ர்க‌ளோடு த‌மிழில் பேசாமல் ஆங்கில‌த்தில் உரையாடுகிறார்களே? இது குறித்துத் த‌ங்க‌ள் க‌ருத்து என்ன‌?

இதற்குரிய பதில் சற்று சிக்கலானது. ஆங்கில அறிவு இன்றைய நடைமுறைக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது என்பது உண்மை. இருப்பினும் தமிழகத்திலேயே வாழும், ஆங்கிலம் அவ்வளவு தேவையில்லாத, சராசரி தமிழன் கூட தம் ஆங்கில அறிவை வெகுவாக வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு ஆங்கிலத்திலேயே பேச முயற்சிக்கின்றான். இங்குள்ளவர்களுக்கு வேலையிலும் மற்ற பல சூழல்களிலும் தமிழ் இல்லாததால், சிலருக்கு பல வருடங்களில், தமிழிலேயே பேசுவது கடினமாகிப் போகின்றது. மற்றும் பலருக்கோ ஆங்கிலத்தில் உரையாடுவது ஒரு வரட்டு கௌரவமாகி விட்டது. மொத்தத்தில் பல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் வேற்று மொழிச் சொற்கள் உபயோகிப்பது இயல்பாகிக் கொண்டிருப்பது நிதர்சனம். இந்த சாபக்கேடு தமிழ் மொழிக்கு மட்டுமே என்று கூற முடியாது. இருப்பினும் நம் சமூகத்தில் இது சற்று அதிகம் என்றே எண்ணத் தோன்றுகின்றது .

இந்த போக்கை மாற்ற நம் சமூகத்தில் செல்வாக்கு உடையவர்களுக்கும், நம் வெகுசன ஊடகங்களுக்கும், இங்கே ஒரு பொறுப்பு உண்டு. ஆனால் அவர்களோ பொல்லாத சில பேர்க்கு இது நாகரீகம், புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்' என்ற கவிஞனின் வாக்கை மெய்பிப்பது போல், தம் நடைமுறைகளை மேற்கொள்கின்றார்கள். அதாவது தமக்கே உரித்தான செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தச் சாய்வினை நிறுத்த / மாற்ற முயற்சிக்காமல் அதை வலுப்படுத்தவே முனைகின்றார்கள். இந்த வலையில் விழாமல், தமிழனின் மனப்போக்கு மாற வேண்டுமென்றால் தமிழன் பொருளாதரத்தில் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும். தனது மொழி மீதும், இனத்தின் மீதும் நியாயமான பற்றுக் கொண்டு பெருமிதத்தோடு வாழ நம் மொத்த சமூகத்தின் பொருளாதர மேன்மை பெரிதும் உதவும் என்றே நம்புகின்றேன்.

சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நீங்க‌ள் த‌மிழ் ச‌ங்க‌ம் அமைக்க‌ தூண்டுத‌லாயிருந்த‌து எது?

மொழி, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே உண்டாக்கப்பட்ட ஒரு கருவி அல்ல. நம் கலாச்சாரமும், வரலாறும், தற்சமய வாழ்க்கை முறைகளும், நம் மொழியில் அது தரும் அறிவில் புதைந்து கிடக்கின்றன. நம் மொழியைச் சுற்றியுள்ள ஒரு சூழல்தான் எனக்கு இயல்பானதாகத் தெரிகின்றது, இதமான ஒரு நிறைவைத் தருகின்றது. அடிப்படைத் தேவைகளுக்குப் பிறகு என் மனம் தேடியது இந்த சூழலைத்தான். புலம் பெயர்ந்து வாழ வந்த இந்தப் பகுதியிலும் இந்தச் சூழலை உண்டாக்கத் தேவையான முக்கியாமான தளமாக நான் கருதியது ஒரு உள்ளூர் தமிழ்ச் சங்கத்தைத்தான். மேலும் தமிழனுக்கு ஆண்டாண்டு காலமாகத் தமிழ்ச் சங்கம் தொடங்கும் பாரம்பரியமுண்டு. வளமான நம் மொழியும், கலாச்சாரமும் தொலைந்து விடாமலிருக்க, அது பெருக, பழந்தமிழன் இந்த 'தமிழ்ச் சங்கம்' என்னும் தளத்தை பேணி வளர்த்து, பாதுகாத்து போற்றியிருக்கின்றான். இந்த தாக்கமும் என்னிடம் இயல்பாக இருந்திருக்க வேண்டும்.

நம் முப்பாட்டனும், பாட்டனும் வளர்த்து பராமரித்து நம்மிடம் ஒப்படைத்து விட்டுப் போன நம் மொழியை, கலாச்சாரத்தை நாமும் நம் சந்ததியரிடம் முறையே சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டு. இதற்கெல்லாம் ஒரு வடிவம் கொடுப்பதுதான் 'தமிழ்ச் சங்கம்' என்னும் தளங்கள். இந்த தாக்கங்களுடன்தான், ஒத்த கருத்துடைய சில நண்பர்கள் ஒன்றாக இணைந்து 1980-ல் 'சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ' என்ற தமிழ் மன்றத்தைத் தொடங்கினோம்.

இத்தமிழ் மன்றத்தின் இன்றைய இணையத் தள முகவரி:
நீங்க‌ள் த‌மிழ் ச‌ங்க‌ நிர்வாகியாக‌ இருந்த‌கால‌த்தில், த‌மிழ் வ‌ள‌ர்ச்சிக்கு‌ நீங்க‌ள் முன்னெடுத்த‌‌ முய‌ல்வுக‌ள் குறித்துச் சொல்லுங்க‌ளேன்?

நான் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் முதல் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்தேன். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொடங்கும் தமிழ்ச் சங்கங்க‌ளை ஒருங்கிணைத்து நடத்தும் வாடிக்கையான நிகழ்ச்சிகளை எங்கள் தமிழ் மன்றமும் நடத்தியது. அத்துடன் நின்றுவிடாமல் ஓரிரு வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டோம் . தமிழர்கள் கூடிட ஒரு தளம் அமைத்துக் கொடுப்பது, தமிழர் பண்டிகைகள் கொண்டாடுவது, தமிழ்த் திரைப்படங்கள் திரையிடுவது என்பன சில முயற்சிகள். இம்முயற்சிகள் தமிழ் மன்றங்களின் வாடிக்கையான செயல்களே. இது தவிர சில வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டோம். இதற்கு அதிக உந்துதலும், நேரமும், முயல்வும் தேவையாகயிருந்தது. இந்த வேறுபட்ட முயற்சிகள் வருமாறு:

அ) இலக்கிய கூட்டங்கள் இல்லையில்லை இதைக் கலந்துரையாடல் என்றே சொல்லவேண்டும். எங்கள் மத்தியில் யாரும் பேராசிரியர்களோ , இலக்கிய வல்லுனர்களோ இல்லை. இருந்தும் ஆர்வலர்கள் சிலர், தமக்குப் பிடித்த தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டு, அதை விரித்துக் கூறி, கூடியிருந்தவர்களுக்கு அவ்விலக்கிய நூலில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த முயல்வது.

ஆ) எங்களில் சிலரிடம் தமிழ் நூல்கள் ஓர் அளவிற்கு சேர்ந்திருந்தன. இதையெல்லாம் ஒன்று திரட்டி, சிறிய நடமாடும் நூலகம் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழ் ஆர்வமுள்ளவர்களுக்கு சுழல்முறையில் தமிழ் நூல்கள் கொடுத்து வாங்க ஏதுவாக இருக்க வழி செய்தோம். சிலருக்கு தமிழ் நூல்களில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் முயன்றோம்.

இ) சிறுவர்கள் தமிழ் கற்க தமிழ் வகுப்புகளை வடிவமைத்து நடத்தி வந்தோம்.

ஈ) கணினியில் தமிழ் தட்ட‌ச்சடிக்க வசதிகள் இல்லாத காலம். தமிழிலலேயே அறிக்கைகள் வெளியிட, ஆவணங்கள் உருவாக்க, தமிழகத்திலிருந்து தமிழ் தட்டச்சு இயந்திரம் ஒன்றை வாங்கி இங்கு வரவழைத்துப் பயன்படுத்தினோம்.

உ) சில தமிழ் நாடகங்கள் மேடையேற்றினோம்.

ச‌மூக‌ப் பிர‌ச்னைக‌ளில் அக்க‌றையோடு ஈடுப‌டும் தாங்கள், குறிப்பிடும்ப‌டியான‌ பிர‌ச்னைக‌ளில் ஈடுப‌ட்டு அதில் வெற்றிகிட்டிய‌ நிக‌ழ்வுக‌ள் குறித்துச் சொல்ல‌ இய‌லுமா?

சமூக அக்கறையினால் அதன் பிரச்சனைகளில் ஈடுபாடு கொண்டு, அதை எதிர்த்து வன்மையாகப் போராடி, அதற்கு ஒரு தீர்வு கண்டு , அதில் மன நிறைவு கொண்ட அனுபவங்கள் எனக்கு உண்டு என்று கூற முடியாது. நம் சமூகத்தின் பல பிரச்சனைகள் இன்றும் தொடரும் பிரச்சனைகள்தான்.

தமிழகத்தில் காணும் ஏழ்மை, அதனால் ஏற்படும் கொடுமைகள், இதனால் அடிபட்டுப் போகும் மனித நேயம், இவை யாவும் சமூக அக்கறை கொண்ட எவரையும் உறுத்தத்தான் செய்யும். நம்மால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு உதவிகளைத்தான் தமிழகத்திலுள்ள தொண்டு நிறுவனங்களின் மூலம் செய்ய முடிகின்றது. குறிப்பாக அனாதை / ஏழைக் குழந்தைகளின் அவலங்கள் ஒரு பெருங்குறையே. இதில் அடங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரமாயிரம் இருக்க, எங்களால் முடிந்த ஒரே ஒரு பெண் குழந்தையை மட்டும் தத்தெடுத்து எங்கள் மகளாக இங்கு வளர்க்கின்றோம் . இது பெரும் மனநிறைவைத் தருகின்றது. அதற்கும் மேலும் எங்கள் மகளின் செய்கைகள் தரும் இன்பங்கள் எங்கள் வாழ்வில் மிக முக்கியமானவை.

மூட நம்பிக்கைளில் ஊறிப் போனது நம் சமூகம். ஆழமான ஆன்மீகத்திற்கும், ஆடம்பரமான சடங்குகளுக்கும் வேறுபாடு தெரியாமல் வெத்துக் கூத்துகளில் மூழ்கியிருப்போர் அநேகர். இவர்களை மாற்ற பல தலைமுறைகள் தேவை என்றே தோன்றுகின்றது. நான் முயற்சிப்பதோ என்னை சுற்றியுள்ள நண்பர்களும் சொந்தங்களும் இந்த வலையில் சிக்காமல் இருக்கத் தேவையான ஈடுபாடே. இதுவே எனக்கு ஒரு சவால்தான்.நியாயமான மொழிப்பற்றும் இனப்பற்றும் அற்று நம் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொலைத்துக் கொண்டு வருபவர்கள் பெரும்பான்மையானோர். இதுவும் என் கண்ணோட்டத்தில் நம் சமூகப் பிரச்சனையே. ஆயினும் என்னால் முடிந்தது என்னைச் சுற்றியுள்ள, குறுகிய சிலரிடம் மட்டுமே ஒரு விழிப்புணர்வை, மாற்றத்தை உண்டு பண்ண முடிகின்றது. ஆக இது போல் பலவும் தொடரும் பிரச்சனைகளே.

நாம் முனைப்போடு நம் தகுதிக்கேற்ப முயன்றாலும், தீர்வுகள் அவ்வளவு எளிதாகத் தென்படுவதில்லை. நாமும் நம் முயற்சிகளில் குறை வைப்பதில்லை. நம் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றோம் என்ற தெளிவு உண்டு.

த‌மிழ் குழந்தைகளுக்கு தமிழ் க‌ற்றுக் கொடுக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் ஏற்ப‌ட்ட‌ போது அதைச் செய‌ல்ப‌டுத்த‌ எண்ணிய‌ உங்க‌ளுக்கு ஏற்ப‌ட்ட ஆதர‌வின்மை, தோள் கொடுத்த‌ ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் என்ற‌ இருவேறு நிலைக‌ளில் உங்க‌ள் ம‌ன‌நிலை எப்ப‌டி இருந்த‌து?

1980 களில் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் மூலமே முதல் முதலாகத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதை செயல்படுத்த முயற்சிக்கப்பட்டது. தமிழ் கற்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளிலேயே முக்கியமான சில கருத்து வேறுபாடுகளும் தோன்ற ஆரம்பித்தன. இந்தக் கருத்து வேறுபாடுகள் தமிழ் மன்றத்தின் புது உறுப்பினர்களிடமிருந்துதான் வர ஆரம்பித்தது. தமிழ் மட்டும் கற்றுத் தருவது போதாது, நம் கலாச்சாரத்தையும் நம் பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டும். நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சம் தெய்வ வழிபாடு. அதற்கு உகந்த சம்ஸ்கிருத சுலோகங்களும் சொல்லித் தர வேண்டும் என்று ஒரு சாரர் பிடிவாதம் பிடிக்க மேலும், தமிழ் பயில வருபவர்களின் எண்ணிக்கையும் ஒரு பெரிய அளவில் இல்லாததால், தமிழ் கற்பிக்கும் முயற்சிகள் 80-களில் பிசுபிசுத்துப் போய் விட்டது. பிறகு தமிழ் மன்றத்தின் மூலம் தமிழ் கற்பிக்கும் முயற்சியே காணாமல் போய்விட்டது . இது வருத்தத்திற்கு உரிய ஒரு விடயம்தான். பல ஆண்டுகள் கழித்து , தமிழ் மன்றம் மூலம் இல்லாமல், தனியார் முயற்சிகளால், மீண்டும் தமிழ் கற்பிக்கும் படலம் துளிர் விட ஆரம்பித்தது.

பெர்க்கிலி ப‌ல்க‌லை த‌மிழ் இருக்கையில் த‌ங்க‌ள் ப‌ங்க‌ளிப்பில் மன நிறைவு அடைந்த நிகழ்வு குறித்து...?

பெர்க்கிலி பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை சராசரி அமெரிக்கத் தமிழர்களின் முயற்சியால் சாத்தியமானது. 1991ல் ஆரம்பமான இம்முயற்சி 1997ல் தமிழ் இருக்கையை நிறுவிய பின்னரே நிறைவு பெற்றது. இந்த இருக்கை அமைக்கத் தேவையான நிதி திரட்டும் குழுவிற்கு நான் தலைமை தாங்கினேன். இந்தத்தமிழ் இருக்கை இன்று பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது . பல தமிழ் அமெரிக்கர்களின் பிள்ளைகள் பெர்க்கிலியில் தமிழ் கற்க உதவியாக உள்ளது. மேலும் , வட அமெரிக்காவில் தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சி செய்வோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பைத் தருகின்றது . "Tamil is one of the best kept secrets. தமிழ் ஆராய்ச்சிகளை தமிழர்களே தமிழில் செய்து வருவாதால்தான் தமிழின் பெருமை உலகத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை", என்ற கருத்து தமிழ் இருக்கையின் தலைவரான பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் எங்களிடம் பகிர்ந்து கொண்ட ஒன்று. அதை நிவர்த்தி செய்வது போல், நாம் மேற்கத்தியர்களிடமும் உலக அறிஞர்களிடமும் நாம் தமிழைக் கொண்டு செல்ல , பெர்க்கிலி தமிழ் இருக்கை ஒரு நல்ல அடித்தளம் . பெர்க்கிலி தமிழ் இருக்கையில் ஆராய்ச்சி மாணவர்களாக இருந்த சிலரே இன்று மற்ற அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் தெற்கு ஆசிய மையங்களில் ஆராய்ச்சி / ஆசிரியர்களாக இருப்பதே இதற்கு நல்ல சான்று. இதுவே நம் உழைப்பின் பயன். மற்றும் தமிழ் இருக்கை இங்கு பெர்க்கிலிக்குத் தமிழ்ப் பேராசிரியர்களையும் அறிஞர்களையும் அழைத்து வந்த பொழுது, சான்பிரான்சிஸ்கோ வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் 'Fireside Chats' என்ற தொடரின் மூலம் தமிழ் சார்ந்த தலைப்புகளில் அவர்கள் சுவையான கலந்துரையாடலில் பங்கு கொண்டது அறிவு சார்ந்த மனதை விரிவாக்கும் அனுபவம்.

உத்த‌ம‌ம் குறித்தும் அதில் உங்க‌ள் ஈடுபாடு குறித்தும் உத்த‌ம‌த்தின் சாத‌னையாக‌ நீங்கள் க‌ருதுவ‌து குறித்தும் ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ளேன்?

தமிழ், இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் அறிவு சார்ந்த துறைகளிலும், தற்கால ஊடகங்களிலும், கணினியிலும், இணையத் தளங்களிலும், சிக்கலின்றி வளம் பெற்று பெருகுவதற்கான தடத்தை, தளத்தை, தமிழர்களாகிய நாம் தமிழுக்கு அமைக்க வேண்டும். அந்தப் பின்னனியில் உருவானதே உத்தமம். உத்தமம் (உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம். INFITT - International Forum for Information Technology in Tamil) என்பது தமிழில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெருக்க, தமிழ் தொழில்நுட்ப அறிஞர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அலச ஏற்பட்ட ஒரு அமைப்பு. உத்தமம், இங்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / இலாப நோக்கு இல்லாத ஒரு அமைப்பு . தற்சமயம் இவ்வமைப்பிற்கு நான் பொருளாளராக உள்ளேன்.உத்தமம் பற்றி அறிந்து, அதன் உள் நடைமுறைகளை அறியாதவர்கள், இந்த அமைப்பிடம் அநேக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்ததால் உத்தமம் தமிழ் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஒன்றையும் வழி நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கக்கூடும். ஒரு கோணத்தின் பார்வையில் அதில் உண்மையிருக்கலாம். ஆயினும், உத்தமம், எதையும் நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரம் வாய்ந்த ஒரு அமைப்பு அல்ல. மேலும் எழுத்துருவிற்கான தரவு போன்ற விவாதங்களில், பல தரப்பட்ட பிரிவுகளிலிருந்து வந்த, மாற்றுக் கருத்துக்களுக்கு இணக்கம் காட்டாத கடுமையான நிலைகளுக்கு நடுவில், உத்தமம் செயலிழந்து நின்றது என்பது உண்மை. கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்த அமைப்பு இப்போது மீண்டும் ஊக்கத்துடன் செயல்பட முயற்சிக்கின்றது.

தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் முன்னேற, பன்னாட்டு முகத்துடன் கூடிய ஒரு அமைப்பு பெரும் உதவியாகயிருக்கும் என்றே நம்புகின்றேன். அந்தவிதத்தில் உத்தமம் தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஒரு அடையாளத்தைத் தரத்தான் செய்தது. பன்னாட்டு நிறுவனங்களும் ( உம்: Microsoft, Oracle), பன்னாட்டு தரவு சார்ந்த அமைப்புகளும் (உம் : Unicode Consortium) உத்தமத்துடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டன . இவை உத்தமத்தின் தேவையை, அது போன்ற அமைப்பிற்கு ஏற்படக்கூடிய உள்ளார்ந்த சக்தியை கோடிட்டுக் காட்டுகின்றது. ஆக இந்த அமைப்பு வலுவாக வளர வேண்டும். இந்த அமைப்பை செயல் திறனுள்ள ஒரு அமைப்பாக நடத்தி, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, தமிழ் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆர்வலர்கள் இந்த அமைப்பின் அங்கத்தினர்களாகச் சேர வேண்டும் என்பதே என் அவா.

உத்தமத்தின் இணையத்தள முகவரி:


இன்று அமெரிக்காவில் 1000 குழ‌ந்தைக‌ளுக்கு மேல் த‌மிழ் க‌ற்றுக் கொள்கின்ற‌ நிலையை உருவாக்க‌ அடித்த‌ள‌மிட்ட‌வ‌ர்க‌ளுள் முத‌ன்மையான‌வ‌ர் நீங்கள். இந்தத் த‌மிழ் ப‌ள்ளி நிர்வாக‌ம், பாட‌த்திட்ட‌ம், த‌மிழ் க‌ற்றுக் கொடுக்கும் த‌ன்னார்வ‌ல‌ர்க‌ள் குறித்து வாச‌க‌ர்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ளேன்?

நான் தமிழ் வளர்ப்புக்காகப் பங்கு பெற்ற முயற்சிகளுள் இதை எதிர்பார்ப்பிற்கு மேலாக வெற்றி பெற்ற முயற்சி என்று கூற வேண்டும். சான்பிரான்சிஸ்கோ வாழ் தமிழ் அமெரிக்கர்களின் இளைய தலைமுறைக்குத் தமிழ் கற்பித்து அவர்களுக்குள் தமிழன் என்ற அடையாளத்தையும் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அது இன்று CTA (Calfornia Tamil Academy கலிபோர்னியா தமிழ்க் கழகம் - www.catamilacademy.org ) என்ற வடிவத்தின் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1990-களின் பிற்பகுதியில் நாங்கள் நான்கு நண்பர்கள் இணைந்து, தமிழ் அறக்கட்டளை (TNF - Tamil Nadu Foundation) என்ற அமைப்பின் கீழ் இங்கு சான்பிரான்சிஸ்கோ பகுதியில், பிரீமாண்ட் (Fremont) என்னும் புறநகர்ப் பகுதியில் தமிழ் கற்றுக் கொடுக்க முயன்றோம். பல நடைமுறைச் சிக்கல்களால் அம்முயற்சி ஒரு வருடத்திற்குப் பிறகு தொடரவில்லை. ஆனாலும் மனம் தளராமல் இந்த நால்வரில் ஒருவரான திருமதி.செல்வி இராசமாணிக்கம், தமிழ் அறக்கட்டளையுடன் தொடர்பேதுமில்லாமல், தனியாகவே இங்கு கூப்பர்டினோ (Cupertino) என்னும் புறநகரில் , CTA என்னும் பெயரிட்டு தம் முயற்சிகளைத் தொடர்ந்தார். பிறகு நானும் அதில் இணைந்து பிரீமாண்டிலும் CTA கிளை ஒன்றை நடத்த ஆரம்பித்தோம். இன்று CTA விற்கு ஐந்து கிளைகளுண்டு. இதில் கிட்டத்தட்ட 1080 மாணவர்கள் தமிழ் கற்கின்றார்கள். ஐந்து கிளைகளும் ஒரே மாதிரியாக எங்கள் நிர்வாகக் குழுவின் கண்காணிப்பில் நிர்வாகிக்கப் படுகின்றது. தற்சமயம் ஐந்து கிளைகளின் முதல்வர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேர் நிர்வாகக் குழுவில் இருக்கின்றோம்.

தமிழ்ப்பள்ளி, செப்டம்பரிலிருந்து மே மாதக் கடைசி வரை ஞாயிறு தோறும் ஒன்றரை மணி நேரத்திற்கு நடைபெறுகின்றது . ஞாயிறு காலை மட்டும் இங்குள்ள பள்ளியையோ, கல்லூரியின் வசதிகளையோ வாடகைக்கு எடுத்து வகுப்புகளை நடத்துகின்றோம். வகுப்புகளிலும் மழலை-1 ல் (PreSchool-1) ஆரம்பித்து 7 ஆம் வகுப்பு (Grade 7) வரை மொத்தம் பன்னிரண்டு வகுப்புகள் உள்ளன. மூன்று வயதிலிருந்து (பெற்றோரை விட்டு வகுப்பில் தனியாக அமரவேண்டும், potty-trained இருக்க வேண்டும் ) பதினான்கு வயது வரையுள்ள மாணவர்கள் உண்டு. ஒவ்வொரு வகுப்பிலும் சொல்லித் தரப்படும் மேலெழுந்தவாரியான உள்ளடக்கம் எங்கள் வலைத்தளத்தில், skillset என்னும் ஆவணத்தில் காணலாம்.

முதல் ஐந்து வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை எங்கள் CTA பாடத்திட்ட குழுவே வடிவமைத்து, இங்கு அமேரிக்க வாழ் சூழலிற்கு ஏற்ப உருவாக்கினார்கள். பிறகு சென்னையில் ஒரு தமிழாசிரியர் குழுவின் எழுத்துக்களின் மூலம் அது நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த புத்தகங்களுடன் சேர்த்து அந்த வகுப்பிற்கான ஒளி,ஒலி குறுந்தகடொன்றும் (DVD) உண்டு. இது மாணவர்கள் கற்க எளிதாக, பயனுள்ளதாக உள்ளது என்பது எங்கள் கணிப்பு. பிற்பட்ட ஏழு வகுப்புக்களுக்கும் நாங்கள் தமிழக அரசின் புத்தகங்களையே உபயோகிக்கின்றோம். ஆனால் பிற்பட்ட வகுப்புகளுக்கு அதிக மாணவர்கள் வருவதில்லை. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு நாளும் என்ன சொல்லித் தரவேண்டும் என்ற விவரமான, ஆழமான பாடத் திட்டத்தை எங்கள் பாடத் திட்டக்குழு மூலம் வகுத்து வைத்திருக்கின்றோம். அதை அந்தந்த ஆசிரியர்களிடம் கொடுத்து விடுவோம். ஆசிரியர்கள் அல்லாத ஆசிரியர் பயிற்சி பெறாத, ஆர்வலர்களே பகுதி நேர ஆசிரியர்களாக மாறிப் பணியாற்றுகின்றனர். எங்கள் சூழலிற்கு இது மிகவும் பொருந்துகின்றது . ஒரு ஆசிரியரின் கீழ் அதிக பட்சம் மாணவர்கள் எட்டு என்பதே எங்கள் வரையறை. இதன்படி எங்கள் பள்ளியில் கிட்டத்தட்ட 150 பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர். வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் இப்பள்ளி பல ஆர்வலர்களின் உழைப்பில், ஆர்வத்தில், முயற்சியில் நடக்கின்றது . ஐந்து கிளைகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 175 ஆர்வலர்களுக்கு மேலுண்டு. நல்லதொரு நடப்பிற்காக, ஊர் கூடி தேர் இழுக்கின்றோம். இது மனதிற்கு நிறைவான ஒரு அனுபவம்.

மேற்கத்தியர்களிடமும் உலக அறிஞர்களிடமும் நாம் தமிழைக் கொண்டு செல்ல, பெர்க்கிலி தமிழ் இருக்கை ஒரு நல்ல அடித்தளம், என்றீர்கள். தமிழ் இலக்கிய ஆராய்ச்சியிலோ, கட்டுரை வடிவிலோ, புத்தக வெளியீட்டிலோ தமிழ் இருக்கை மூலம் நிகழ்ந்தவை குறித்து, குறிப்பிடத்தக்க வகையில் செய்யப்பட்ட முயற்சிகள் குறித்து கருத்துச் சொல்ல முடியுமா?

அ) முதலில் பெர்க்கிலி போன்றதொரு உலக அங்கீகாரம் பெற்ற, உலக அறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்வி மையத்தில் தமிழ்ப் பீடம் இருப்பது, தமிழை வெளிநாட்டு அறிஞர்களுக்கு அடையாளம் காட்ட உதவுகின்றது.

ஆ) தமிழ்ப் பீடம் வருடா வருடம் ஏப்ரல்-மே மாதம் போல் தமிழ் சார்ந்த தலைப்புகள் கொண்டு ஒரு குறு மாநாடு ஒன்று நடத்துகின்றது. இதற்கு மொழி இயல் அறிஞர்கள் பலர் வருகை தருகின்றனர். எடுத்துக்காட்டாக கடந்த மூன்று ஆண்டாக சோணாடு (சோழ நாடு), (தமிழகக் ) கோவில்கள், (பண்பாட்டுப்) பாலம் என்னும் தலைப்புகளில் தமிழ்ப் பீடம் குறு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இம்மாநாடுகளில் பல அறிஞர்கள் தம் ஆராய்ச்சியில் கண்டறிந்த விபரங்களையும், ஆராய்ச்சி ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ளுகின்றனர். இது ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம் குன்றிவிடாமல் அதை ஊக்குவித்து வளர்த்து விடுகின்றது. பேராசிரியர் ஹார்ட் புறநானூறை ஆங்கிலத்தில் "The four hundred songs of War and Wisdom" என்று மொழிபெயர்த்து புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இப்பொழுது அகநானூறை மொழிபெயர்த்துக் கொண்டுள்ளார். இதற்கெல்லாம் பெர்க்கிலி தமிழ் பீடச் சூழல் ஒரு உந்து சக்தி என்றே எண்ணுகின்றேன்.இ) பேராசிரியர் ஹார்ட்டின் எண்ணம், இங்கு தமிழ்ப் பீடத்தில் தமிழ் அறிவு கொண்ட மொழி வல்லுனர்களை உருவாக்கினால், அவர்கள் ஆராய்ச்சியாளர்களாகவோ, ஆசிரியர்களாகவோ மற்ற பல்கலைக் கழகங்களுக்கும் ஆராய்ச்சி மையங்களுக்கும் செல்லும் பொழுது மற்ற இடங்களிலும் தமிழின் தாக்கம் தென்படும் என்பதே. அதாவது "Train the Trainers". அவர் கூற்றின்படி இந்தக் கண்ணோட்டத்திலும் தமிழ்ப் பீடம் வெற்றிகரமாகவே செயல்படுகின்றது. மேற்கூறிய செயல்பாடுகளால் தமிழ்ப் பீடம் தமிழ் மொழி வளத்தை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஆயினும் இவை மட்டும் போதாது. செம்மொழி ஆக்கப் பட்டிருக்கும் தமிழுக்கான நடுவன் அரசின், தமிழக அரசின் திட்டங்களில், வெளிநாட்டு மையங்களுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் தமிழைக் கொண்டு செல்ல உதவ வேண்டும்.

உத்தமம், எதையும் நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரம் வாய்ந்த ஒரு அமைப்பு அல்ல என்றாலும் எழுத்துருவிற்கான தரவு போன்ற தன் பரிந்துரையை இந்திய நடுவனரசுக்கு அல்லது Unicode Consortium போன்றவற்றிற்குத் தெரிவித்து இதுதான் உத்தமத்தின் நிலைப்பாடு என்று சொல்லப்பட்டதா?

உத்தமம் நடுவன் அரசுடன் எந்த முக்கிய தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. தமிழக அரசின் மூலமாக நடுவன் அரசை அணுகுவது ஒரு நியாயமான எதிர்பார்ப்பே. உத்தமத்திற்கு தமிழக அரசின் அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கத்தான் செய்தது. 1999-ல் சென்னையில் நடந்த இணைய மாநாட்டின் தொடக்கத்தில் இருந்தே, அதாவது உத்தமம் என்ற அமைப்பு அதிகாரபூர்வமாக உண்டாவதற்கு முன்பே, இந்தத் தொடர்பு இருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அநேகர்தான் பிறகு 'உத்தமம்' என்ற அமைப்பை சிங்கையின் பொருளாதார ஆதரவில் ஆரம்பித்தவர்கள். ஆகவே தமிழக அரசின் தொடர்பும் ஆதரவும் உத்தமத்திற்கு தொடர்ந்து இருந்து வந்தது. சென்னை மாநாட்டில் அன்று இணையத்தில் அதிகமாக அறியப்பட்டு உபயோகிக்கப்பட்ட "TSCII" எழுத்துருவிற்கும் சென்னையின் சார்பில் முன் வைக்கப்பட்ட எழுத்துரு தரவிற்கும் இடையில் ஒரு திடமான தெளிவான முடிவைத் தேர்ந்தெடுக்க முடியாமல் ஒரு குழப்பமான முடிவே எடுக்கப்பட்டது என்பது என் எண்ணம். அப்பொழுது தொடங்கிய எழுத்துருவிற்கான விவாதம், உத்தமத்திலும் தொடர்ந்து இன்னும் முடிந்தபாடில்லை. விவாதத்தில் தவறில்லை. ஆனால் அதுவே ஒரு பிளவாகி, மற்ற முயற்சிகளையும், மற்றவர் கண்ணில் உத்தமத்தின் செயல்பாட்டிலும் நம்பிக்கையுறச் செய்துவிட்டது என்பது என் தாழ்மையான கருத்து.

Unicode Consortium (ஒருங்குறிச் சேர்த்தியம்) -த்தின் விவாதக் கூட்டங்களில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மேற்கத்திய நபர் உத்தமத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். ஆனால் அந்த பிரதிநிதித்துவம் சரியான அணுகுமுறையல்ல என்ற வலுவான எண்ணம் கொண்டவர்களும் உத்தமத்தில் இருக்கத்தான் செய்தார்கள் . இதைத் தவிர்த்து உத்தமம் இல்லாமல் தமிழக அரசும் "Unicode Consortium"த்தில் நேரடி பங்குபெற்று இந்த ஒருங்குறித் (UNICODE) தரவிற்கான விவாதத்தை நல்வழியில் நடத்தியிருக்க வேண்டும். 1990களின் கடைசியில் "Unicode Consortium" கூட்டத்திற்காக இங்கு (San Jose, Ca) வந்த தமிழக அரசின் அதிகாரிகளை அறிவேன். அவர்கள் செவிக்கு மட்டும் வேலை கொடுத்து, மற்று எந்த மாற்றுத் தரவுகளையும் முன் வைக்கவில்லை. காலம் கடந்து இந்த முயற்சிகள் தொடருகின்றன. ஆக, இந்த எழுத்துரு விவாதம் இன்றும் தொடர்ந்து, ஒரு பிளவாகி, மற்ற முயற்சிகளையும் பாதிக்கின்றது என்பது என் எண்ணம். இது வருத்தத்திற்கு உரியதுதான் .

உத்தமத்தின் செயல்பாட்டில் நம்பிக்கையும், தொழில்நுட்ப உலகத்தின் எதிர்கால வழிகாட்டி என்ற எண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டும் இல்லையா? அப்போதுதானே உத்தமத்தை செயல்திறனுள்ள ஒரு அமைப்பாக எண்ணி தமிழ் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆர்வலர்கள் இந்த அமைப்பின் அங்கத்தினர்களாகச் சேருவார்கள்...

நீங்கள் கூறுவதில் உண்மையுண்டு. பத்துத் தமிழர்கள் சேர்ந்தால் பன்னிரண்டு கருத்துக்கள் தோன்றுகின்றன என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இதே கருத்தை எனது ஐரிஷ் நண்பனுடன் அவன் சமூகத்தை பற்றி சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆக இது ஓரளவு இயற்கையே என்று தோன்றுகின்றது. ஆனால் நம் சமூக நலனை முன்னிட்டு, வெவ்வேறு கருத்துக்களையும் அணுகு முறைகளையும் தெளிவாக அலசிய பிறகு, ஒருமித்தக் கருத்தோடு நம் குழுமங்கள் செயல்பட வேண்டும். இதில், இப்பக்குவத்தில் நாம் பின்தங்கி உள்ளோமோ என்று நான் நினைப்பதுண்டு. உத்தமம் என்ற இந்த அமைப்பு எல்லாத் தமிழர்களுக்கும் சொந்தமான ஒரு அமைப்புதானே. இதில் மாற்றம் தேவை என்றால் அதில் ஈடுபாடு கொண்டு மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும். தற்சமயம் உத்தமம் மீண்டும் சுறுசுறுப்புடன் முனைப்புடன் செயல்படத் துடிக்கின்றது. இந்த வருட இறுதியிலோ அடுத்த வருட தொடக்கத்திலோ தேர்தல்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஆவல் உள்ளோர் அதில் உறுப்பினர்களாகி அதை நல்வழியில் நடத்த உதவ வேண்டும் .

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ நீங்க‌ள் முன்னெடுத்த‌ துய‌ர் துடைப்பில் குறிப்பிடத்த‌க்க‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளாக‌ எதைக் க‌ருதுகிறீர்க‌ள்?

தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழன் வாழ வேண்டும், வளர வேண்டும். ஈழத்தமிழனும் அவனுடைய நிலப்பரப்பும் நம் அண்டை நாட்டில் குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கும் மேலாக அவன் படும் அல்லல்களுக்கு அளவேயில்லை. ஈழத் தமிழர்களின் துயரங்களும் அதன் அழுத்தங்களும் வெளி உலகத்திற்கு தெரிவதேயில்லை. தமிழகத் தமிழனுக்கே முழுமையாகத் தெரிவதில்லை. அரசின் சட்ட திட்டங்களாலும் செல்வாக்குடைய ஊடகங்களின் இருட்டடைப்பு, திரிபு போன்ற உத்திகளினாலும், தமிழகத் தமிழர்களின் உணர்வுகளைத் திசை திருப்பி வைத்துள்ளார்கள். இந்தச் சூழல் தமிழனாக நாம் ஈழத்தமிழனிற்கு அனுதாபம் காட்டா விட்டாலும், மனித நேயத்தோடான அனுதாபங்களும் குறைவாகவே வெளிக்காட்டும் ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றது. இதையெல்லாம் காண மனம் பொறுக்குதில்லைதான் . ஆயினும் நம்மால் செய்ய முடிந்தது குறைவே. இங்கு Tamils of Northern California (TNC) என்ற ஈழத் தமிழர் அமைப்பொன்று உண்டு. இதில் உறுப்பினனாகயிருந்து, அவர்களுடன் இணைந்து, அகதிகளின் வாழ்வில் ஒரு சிறு ஒளியேற்ற, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO - Tamils Rehabilitaton Organization சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம் இணையத்தள முகவரி: www.troonline.org ), சுனாமி நிவாரணக் குழு, International Medical Health Organization என்ற தொண்டு நிறுவனங்களின் மூலம் பொருள் உதவி செய்து வந்துள்ளேன். மேலும் ITTPO (International Tamil Technical Professionals' Organization -இணையத்தள முகவரி: www.ittpo.org ) என்ற அமைப்பில் பல இயக்குனர்களில் ஒருவனாக நானும் உள்ளேன். என்னால் முடிந்த பொருளுதவியும் இங்கு செய்து வருகின்றேன். போரால் சீரழிந்திருக்கும் வடகிழக்கு ஸ்ரீலங்காவில் ஈழத்துப் பகுதிகளில் தொழில் அறிவு சார்ந்த வளர்ச்சிகளை, அங்குள்ள மக்கள் பலன்பெறும் வகையில் கொண்டு வருவதே இவ்வமைப்பின் குறிக்கோள். இதன் அடிப்படையில்தான் 'VanniTech' (Vanni Institute of Technology - வன்னி தொழில்நுட்பவியல் நிறுவகம் இணையத்தள முகவரி: www.vanni.org ) என்ற தொழில்நுட்பப் பட்டறை ஒன்றை ITTPO தொடங்கி நடத்தி வருகின்றது . ஆனால் போர் சூழலில் இது நொண்டிக் கொண்டுதான் செயல்படுகின்றது. இந்த முயற்சிகளெல்லாம் ஈழத்தமிழனின் துயர்துடைப்பில் ஆக்கபூர்வமான செயல்கள்தான் என்றாலும் , ஈழத் தமிழருக்கான விடியலை நான் இன்னும் காணவில்லை. இருள் கலைந்து விடியல் வந்தே தீரும். அதுவரை பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் நம் முயற்சிகள் தொடரும். தொடர வேண்டும்.இன்றைய அரசியல் சூழலில், ஈழத்தில் சுமூக நிலை நிலவ வேண்டும் என்ற ஒத்த கருத்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர். மருத்துவர். இராமதாசு, மதிமுக நிறுவனர் வைகோ போன்றவர்கள் தங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து ஈழத்தமிழர் பிரச்னைக்கான தீர்வை மத்திய அரசில் முன்வைத்தால் இந்தப் பிரச்னை எளிதில் தீர்க்கப்பட இயலுமே? இதை உணர்த்தும் வகையில் ஏதேனும் கையெழுத்து வேட்டை அல்லது மின்னஞ்சல் உத்தியை மேற்கொள்ளும் உத்தேசம் உண்டா?

ஈழத்தில் நடக்கும் இனவாத அநீதிகளுக்கு தனிப்பட்ட முறையில் நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் அனைவரும் அக்கறை கொண்டவர்கள்தாம். ஆயினும் அவரவர்கள் தங்கள் உள்நாட்டு அரசியல் களத்தின் நெருக்கடிகளில் சிக்குண்டு ஒருமித்தக் கருத்தோடு நடுவன் அரசிடம் ஆணித்தரமாக வழக்காடவில்லை என்பது உண்மை. மேலும் நடுவன் அரசும் தமிழனைச் சந்தேகக் கண்களுடன் நோக்கி, ஸ்ரீலங்கா அரசிற்கு சாதகமான தந்திரமான செயல்பாடுகளில் இறங்குகின்றது. சமீப காலமாக இந்திய அரசு, ஸ்ரீலங்கா அரசிற்கு தரும் ஆயுதங்களை சத்தமின்றி கூட்டியிருக்கின்றது என்பதே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஈழத் தமிழனைக் கொல்வதற்கு நம் நடுவன் அரசிடமிருந்தே உதவி செல்கின்றது. உண்மை பேசத் துணிந்தவனை ஓரம் கட்டி சாயம் பூசி தனிமைப்பட வைக்கும் செல்வாக்குக் கொண்ட பத்திரிக்கையாளர்களும் சில வெகுசன ஊடகங்களும் தமிழகத்தில் உள்ளன. அநேகத் தமிழகத் தமிழனிற்கு இந்த உண்மையே தெரிந்திருக்காத நிலை. மற்றும் சிலருக்கு இது தெரிந்திருந்தும் இதைப் பற்றி விவாதிப்பதற்கோ இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கோ தயக்கம் காட்டும் சூழல். எனவே, தமிழகத் தமிழன் ஒன்றும் செய்ய முடியாத நிலை. ஈழத் தமிழனுக்கு சோதனையான காலமிது . கையெழுத்து வேட்டை / மின்னஞ்சல் உத்திகள் என்பன போன்றவற்றை இங்கு அமெரிக்காவில் பார்த்ததுண்டு. அதை முன் நின்று நடத்தாவிட்டாலும், அதில் கையெழுத்துப் போட்டுப் பங்கு பெற்றதும் உண்டு . இங்கு அது பயன் உள்ளதாகவும் இருந்திருக்கின்றது. ஆனால் இந்த உத்திகள் தமிழகத்தில் எந்த அளவு தாக்கத்தை உண்டு பண்ணும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் தாக்கத்தை உண்டு பண்ணுவதற்கான உத்திகள் பல ஆண்டுகளாக புலம் பெயர்ந்து வாழும் என்னிடமில்லை. ஆயினும் நியாயத்தின் அடிப்படையில் எதிர்பார்ப்புகள் உண்டு. அவை வீண் போகாது என்றே எண்ணுகின்றேன்.

சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம் என்ற அமைப்பு ஈழத் தமிழருக்கானதாக மட்டும் இயங்கும் அமைப்பா? தமிழகத்துக்கும் இதன் பங்களிப்பு ஏதும் உண்டா?

ஈழத் தமிழர்களால் தொடங்கப்பட்டு தற்சமயம் நடைமுறையில் ஈழத்தமிழருக்காக இயங்கும் அமைப்பு இது. அவர்களுக்குத்தானே இந்த உதவி இப்பொழுது அதிகம் தேவைப்படுகின்றது. ஈழத்தில் தொழில் நுட்ப கல்விக் கூடங்களோ, அதைக் கற்பிக்க நல்ல ஆசிரியர்களோ மிக சொற்பம். அவர்கள் தமிழக உறவுகளிடமிருந்து இந்த விடயத்தில் உதவியை நாடியே இருக்கின்றனர். அவர்கள் தமிழகக் கல்விக் கூடங்களிலிருந்தோ தமிழகத்தில் கற்பிக்கும் தொழில் நுட்ப வல்லுனர்கள் / ஆசிரியர்களிடமிருந்தோ வரும் உதவிகளை பெரிதும் மதித்துப் போற்றுவர் .

எதிர்கால திட்டம் என்று மனதுக்குள் நீண்டகாலமாய் உலவும் எண்ணங்கள் ஏதும் உண்டா?

ஆசைகள் உண்டுதான். அதை நனவாக்கும் திட்டங்கள்தான் முழுமை பெறுவதில்லை. ஆகவே வெளியில் பகிர்ந்து கொள்ளுவதில் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆக இப்போதைக்கு வரும் நாட்களை ஒவ்வொன்றாகத்தான் எதிர்கொள்கின்றேன், வாழ்கின்றேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/interview/p4.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License