உலகின் எம்மொழியிலும் கலைக்களஞ்சியம் உருவாக்குவது என்பது மிக அதிக அளவிலான உழைப்பு தேவைப்படும் ஒரு பணி. அரசுகளும், மிகப்பெரிய நிறுவனங்களுமே இப்பணியினை மேற்கொள்ள முடியும். அவ்வாறு உருவானதை விலை கொடுத்து வாங்க சாமானியர்களால் முடியாதென்ற நிலை பல நூற்றாண்டுகளாக நிலவி வந்தது. இதனைப் பொய்யாக்கும் வகையில் மக்களால் மக்களுக்காக இலவசமாக ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியாக விக்கிப்பீடியாவை ஜிம்மி வேல்சும் லேரி சாங்கரும் 2001 இல் துவங்கினர். மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. விக்கிப்பீடியா நாளொரு மேனியாகப் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து இன்று 267 மொழிகளில் உள்ளது. கலைக்களஞ்சியம் மட்டுமல்லாது அகர முதலி, செய்தித்தளம், பாடநூல்கள், ஊடகக் கோப்புத் தொகுப்பு என பல்வகை விக்கித் திட்டங்களும் உருவாகியுள்ளன. இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் தமிழுக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. பல தமிழ் விக்கித் திட்டங்கள் இன்று வேகமாக வளர்ந்து வருகின்றன. இவற்றின் வளர்ச்சிக்குப் பல பங்களிப்பாளர்கள் இருந்தாலும், தமிழில் விதை ஊன்றி வளர்க்கத் தொடங்கியவர் இ. மயூரநாதன். இவர் 2003 ஆம் ஆண்டில்ல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து, பல்வேறு தமிழ் விக்கித் திட்டங்களுக்கும் அரும் பணியாற்றி வருகிறார். முத்துக்கமலம் இணைய இதழுக்காக அவர் அளித்த நேர்காணல் காண்போமா?
தங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு தாருங்கள்
நான் இலங்கை, யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தவன். 1620 ஆம் ஆண்டில் போத்துக்கேயர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி யாழ்ப்பாண நகரத்தை உருவாக்கிய பின்னர், உள்ளூர் இந்துக்களின் முக்கியமான குடியேற்றமாக உருவானதுதான் இந்த வண்ணார்பண்ணை. பிற்காலத்தில் பிரித்தானியர் ஆட்சியின் போது, இலங்கைத் தமிழரின் பண்பாட்டு எழுச்சியின் மையமாகவும் இது விளங்கியது. எனது தந்தை இரத்தினவேலுப்பிள்ளை இங்கேதான் பிறந்து வளர்ந்தார். அம்மா தங்கலட்சுமி, யாழ்ப்பாணத்தில் இருந்து 4 மைல்கள் தொலைவில் உள்ள உரும்பராயைச் சேர்ந்தவர். வண்ணார்பண்ணையில் இராமகிருஷ்ண மடத்தினரால் நடத்தப்பட்டு வந்த வைத்தீசுவர வித்தியாலயத்திலேயே எனது முழுப் பள்ளிக் கல்வியையும் நான் பெற்றேன். கட்டிடக்கலையில் இளநிலை, முதுநிலைப் பட்டங்களைக் கொழும்புக்கு அண்மையில் உள்ள மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பெற்றேன். பின்னர் 16 ஆண்டுகள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் பணியாற்றிய பின்னர் 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து ஏறத்தாழ 18 ஆண்டுகள் இங்கே எனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன்.
இன்று சமுதாயத்திலே என்னுடைய நடவடிக்கைகள்,எனது ஆர்வத்துறைகள், இனிச் செய்ய வேண்டியனவாக நான் குறித்து வைத்திருக்கும் விடயங்கள் என்பவை தொடர்பில் சிந்திக்கும் போது எனது கடந்தகால வாழ்க்கையில் இவற்றுக்கான வித்துக்களை என்னால் காண முடிகிறது. தமிழ் விக்கிப்பீடியா தொடர்பில் எனது ஆர்வத்துக்கும், அதில் எனது பங்களிப்பின் தன்மைக்கும் அடிப்படையாக அமைந்தவை என நான் கருதும் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்றைக்கு நான் பல துறைகள் தொடர்பிலும் எழுதுவதற்கு, எனக்கு உள்ள ஆர்வம் சிறுவயதில் எனக்கு இருந்த பல்வேறுபட்ட ஆர்வங்களின் தொடர்ச்சி எனலாம். எனக்கு இசையில் ஆர்வம் உண்டு. எனக்கு ஓரளவு நன்றாகவே பாடக்கூடிய குரல்வளம் இருந்தது. கர்நாடக இசையும் கற்று வந்தேன். ஆனாலும் இடையில் நிறுத்தி விட்டேன். படம் வரைதலிலும் ஓரளவு திறமை இருந்தது. கோலமும் போடுவேன். தவிரப் பனை ஓலையில் அலங்காரப் பெட்டிகள் முடைதல் தொடக்கம், களிமண்ணில் இறை உருவங்கள் செய்தல் வரை பலவகைப்பட்ட கைப்பணி வேலைகளிலும் எனக்குப் பழக்கம் உண்டு. இத்தோடு, தபால்தலை சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல் என்பவற்றிலும் ஈடுபட்டிருந்தேன். இன்றும் இந்த ஆர்வம் எனக்கு உண்டு. எழுதுவதிலும் எனக்கு ஆர்வம் இருந்தது. 10 ஆம் வகுப்பில் படிக்கும் போது ஐந்து மாணவர்கள் சேர்ந்து "விஞ்ஞானி" என்னும் கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வந்தோம். அரசியலிலும் சிறுவயது முதலே ஆர்வம் இருந்தது. எனினும் நான் எக்காலத்திலுமே நேரடியாக அரசியலில் ஈடுபட்டது இல்லை. ஒரு பத்திரிகையாளனைப் போல அவதானியாகவே இருந்துள்ளேன். எனக்கு எட்டு வயதாக இருந்தபோதே எனக்கு இந்த ஆர்வம் தொடங்கி விட்டது. இலங்கையில் 1960 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் தொடக்கம், 1977 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற எல்லாத் தேர்தல்கள் தொடர்பிலுமான துண்டுப் பிரசுரங்கள், தேர்தல் அறிக்கைகள், கட்சிப் பத்திரிகைகள், முடிவு வெளியான பத்திரிகைகள் என ஏராளமான ஆவணங்களை நான் சேகரித்து வைத்திருந்தேன். இதைவிட, உலகின் பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் அப்போது வெளியான பத்திரிகைச் செய்திகள், படங்கள் போன்றவற்றைச் சேகரித்துப் பெரிய அளவு தாள்களில் ஒட்டிப் புத்தகம் போல் கட்டி வைத்திருந்தேன். இவையெல்லாம் இன்று அழிந்து போய்விட்டன. வரலாறு, மொழியியல் போன்ற துறைகளிலும் எனக்கு நீண்ட காலமாகவே ஆர்வம் உண்டு.
தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப கட்ட நாட்களைப் பற்றி சொல்லுங்களேன்.
விரைவில் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவெய்த இருக்கிறது. இதில் ஆரம்ப கட்டம் என்று முதல் ஒன்றரை ஆண்டுக் காலத்தைக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். அதாவது செப்டெம்பர் 2003 இறுதிப் பகுதியில் தொடங்கி பெப்ரவரி 2005 முடிய உள்ள 18 மாதங்கள் இதனுள் அடங்கும். இதில் ஏறத்தாழ 2003 நவம்பர் இறுதி வரை இடைமுகத் தமிழாக்க வேலைகளும், முதற்பக்கம் உருவாக்கும் வேலைகளும் இடம் பெற்றன. தமிழ் விக்கி தொடர்பில் எனது பங்களிப்பு 2003 அக்டோபரில் தொடங்கியது என்று எண்ணுகிறேன். மொழிபெயர்ப்பு வேலைகள் தமிழ் விக்கிக்கு வெளியே இடம் பெற்றதாலும், தொடர்புகள் அனைத்தும் மீட்டா விக்கியிலேயே இடம் பெற்றதாலும் இது குறித்த பதிவுகள் எதுவும் தமிழ் விக்கியில் இல்லை. தமிழ் விக்கியிலும் தொடக்கத்தில் பதிவு செய்து கொள்ளாமலும், பின்னர் "Architecture" என்ற பெயரிலும் பங்களித்து வந்தேன். இக்காலத்தில் தமிழ் விக்கியில் ஆர்வம் கொண்டிருந்தவர்களில் முகுந்தராஜ், அமல்சிங் ஆகிய இருவரையும் குறிப்பிடலாம். விக்கிப்பீடியாத் திட்டம் பற்றியும் அதைத் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்வதன் தேவை பற்றியும் "அகத்தியர்" மடற் குழுவில் எழுதி மற்றவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர் முகுந்தராஜ். இவர் தன்னைப் பயனராகப் பதிவு செய்திராததால் தொடக்க காலத்தில் அவர் ஏதாவது நேரடிப் பங்களிப்புச் செய்தாரா என அறிய முடியவில்லை. மொழிபெயர்ப்பு வேலைகளும், முதற்பக்க வடிவமைப்பு வேலைகளும் நடந்து கொண்டிருந்த போது அக்டோபர் நடுப்பகுதியில் தமிழ் விக்கியில் "சிரின் எபாடி" என்னும் தலைப்பில் முதல் கட்டுரையை எழுதியவர் அமல்சிங். எனினும் அந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின்னர் அவர் தமிழ் விக்கியில் எவ்வித பங்களிப்பும் செய்ததாகத் தெரியவில்லை.
தமிழ் விக்கியின் முதல் 18 மாதத்தில் ஏதாவது தொகுப்புக்களைச் செய்தவர்கள் மொத்தம் 8 பேர்கள் மட்டுமே. இதில் பலர் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு எதையும் செய்யவில்லை. இவர்களுள் ரமணன் என்னும் பயனரைப் பற்றி இங்கு குறிப்பிடலாம். "Free Encycloprdia" என்பதற்கு நான் செய்த மொழி பெயர்ப்பு சரியில்லை என்றும் அதைத் திருத்த வேண்டும் என்றும் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் சுட்டிக்காட்டியது சரி என்பதால் அதை நான் ஏற்றுக் கொண்டேன். இது தொடர்பில் நிறைய வேலைகள் செய்ய இருப்பதாகக் காட்டி விக்கிப்பீடியாத் திட்டத்தின் மேலதிகாரிகள் மூலம் தமிழ் விக்கியில் முதலாவது நிர்வாக அணுக்கம் பெற்ற பயனராகவும் அவர் ஆனார். ஆனால் ஏனோ தெரியவில்லை அதன் பின்னர் அவர் தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதுவும் செய்யவில்லை. இக் காலத்தில் விக்கியில் இணைந்த குறிப்பிடத்தக்க இன்னுமிருவர் சந்தோஷ் குரு. சில காலம் முனைப்பாகப் பங்களித்த இவர் நீண்டகாலம் தொடரவில்லை. இக் காலத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் குறிப்பிடத்தக்கது தமிழ் விக்கிப்பீடியாவில் சுந்தர் இணைந்தது ஆகும். ஏற்கெனவே ஆங்கில விக்கியில் அனுபவம் பெற்றிருந்த அவர் இன்றுவரை தமிழ் விக்கியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். கட்டுரை எண்ணிக்கையைப் பொறுத்த அளவில் இக் காலகட்டம் மிகவும் மெதுவான வளர்ச்சியையே பெற்றது. எழுதப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 500க்கும் குறைவே. போதிய அளவு முனைப்பான பயனர்கள் இல்லாமையே இதற்கு முக்கியமான காரணம்.
அக்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் பல வேலைகளைச் செய்வதற்கு ஆங்கில விக்கியிலேயே கேட்க வேண்டியிருந்தது அல்லது உயரதிகாரிகளை நேரடியாக அணுக வேண்டி இருந்தது. எனக்கு நிர்வாக அணுக்கம் வேண்டிய கோரிக்கையையும் ஆங்கில விக்கியில் "வில்லேஜ் பம்ப்" பக்கத்திலேயே இட்டுப் பெற வேண்டியிருந்தது. தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளைப் பற்றிக் கூட ஆங்கில விக்கியில் விவாதித்த வேளைகளும் உண்டு. சனவரி 2004 இல் ஒரு பயனர் தமிழ் விக்கியில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருப்பதாகவும் இவ்வாறான கடினமான சொற்களைப் பயன்படுத்துவது விக்கிக் கோட்பாடுகளுக்கு ஏற்புடையதுதானா எனக் கேட்டு அவர் ஆங்கில விக்கி வில்லேஜ் பம்ப் பக்கத்தில் ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
ஒரு கலைக்களஞ்சியத்தை பூச்சியத்திலிருந்து உருவாக்குவது மலைப்பான செயல். இதற்கான திட்டமிடுதலை எவ்வாறு செய்தீர்கள். தமிழ் விக்கியின் தொடக்க ஆண்டுகளில் (2005வரை) நீங்களும் பிற முதற்பயனர்களும் எவ்விசயங்களுக்கு முன்னுரிமை அளித்தீர்கள்?
தமிழ் விக்கிப்பீடியா பூச்சியத்தில் இருந்து தொடங்கியதாகக் கொள்ள முடியாது. தேவையான எல்லா அடிப்படை வசதிகளும் ஏற்கெனவே ஆயத்தமாக இருந்தன. ஆரம்பத்தில் இடைமுகத்துக்கான மொழிபெயர்ப்பு நேரம் எடுப்பதாகவும் குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டியதாகவும் இருந்தது உண்மைதான். அதன் பின்னர் தேவையாக இருந்தது இணைய வசதியோடு கூடிய சமூக நோக்கும், ஓரளவு நேரம் ஒதுக்கக்கூடிய வாய்ப்பும் கொண்ட பயனர்கள் மட்டுமே. இது ஓரளவு எனக்கும் பொருந்தி வந்தபடியால் நான் தொடர்ச்சியாக இப்பணியில் ஈடுபடக்கூடியதாக இருந்தது. தொடக்கத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்ற வேறெவரும் இல்லாததால் சேர்ந்து திட்டமிடுதல் என்ற நிலை இருக்கவில்லை. என்றாலும் நான் கட்டுரைகளை எழுதும் போது சில உத்திகளைக் கைக்கொண்டேன் என்று சொல்லலாம். தொடக்கத்தில் ஆழமானதும், நீளமானதுமான சில கட்டுரைகள் எழுதுவதற்குப் பதிலாகப் பல குறுங்கட்டுரைகளை எழுதுவது உசிதமாகப் பட்டது. அத்துடன் பல துறைகளையும் சேர்ந்த கட்டுரைகள் இருப்பதும் பலவகையான ஆர்வம் கொண்டவர்களையும் தமிழ் விக்கிபால் இழுக்கப் பயன்படும் என்பதால் அறிவியல், வரலாறு, புவியியல், கட்டிடக்கலை, சினிமா என்பன உள்ளிட்ட பல துறைகளிலும் கட்டுரைகள் எழுதப்பட்டன.
விக்கிப்பீடியாவின் தொடக்க ஆண்டுகளில் நீங்கள் எதிர்கொண்ட மிகப்பெரும் சவாலாக எதைக் கருதுகிறீர்கள். அதனை எப்படி எதிர் கொண்டீர்கள்?
தொடக்க ஆண்டுகளில் எதிர் கொண்ட மிகப்பெரிய சவால் பயனர்கள் போதாமை தான். முக்கியமாக முதல் ஒன்றரை ஆண்டுகள் புதிய பயனர்கள் இணைவது மிகவும் குறைவாகவே இருந்தது. இணைந்தவர்களிலும் பெரும்பாலோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதையும் செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். இந்த நிலையை மாற்றுவதற்கு உடனடியாக ஏதாவது செய்வதற்குரிய வாய்ப்புக்களும் ஆட்பலமும் இருக்கவில்லை. சில மடற்குழுக்களில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து எழுதி அதில் பங்களிக்கும்படி கேட்டிருந்தேன். ஆனால் இது போதிய வெற்றியளிக்கவில்லை. நம்பிக்கையுடன் பொறுமையாகத் தொடர்ந்தும் பணியாற்றுவது தவிர வேறு வழி எதும் இருக்கவில்லை.
தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றின் அனைத்து காலகட்டங்களையும் கண்கூடாகக் கண்டவர் என்ற அடிப்படையில், தமிழ் விக்கியின் மிகச் சிறந்த தருணம் எது, மிகச் சோதனையான தருணம் எது என்று கருதுகிறீர்கள்?
தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றில் சோதனையான காலகட்டம் என்றால் தொடக்க காலம்தான் எனலாம். ஏனென்றால் அக்காலத்தில் ஓரிருவரே பங்களித்து வந்தமையால் எந்த நேரத்திலும் தொய்ந்து போவதற்கோ, செயலற்றுப் போவதற்கோ வாய்ப்புகள் அதிகமாக இருந்ததன. கட்டுரை எண்ணிக்கை ஐந்நூறை எட்டிய பின்னரே தமிழ் விக்கியின் வளர்ச்சியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. 2005 மார்ச்சுக்குப் பின்னர் புதிய பயனர்கள் சேர்வது தொடர்ச்சியாக இடம் பெற்றது. இதன் பின்னர் இன்று வரை தமிழ் விக்கியின் வளர்ச்சி சீராக இருந்தது என்றாலும், 2005, 2006 ஆம் ஆண்டுகளின் காலகட்டமே விக்கிப்பீடியாவின் சிறப்பான காலகட்டம் எனலாம் என்பது எனது கருத்து. ஏனெனில் இக் காலகட்டத்திலேயே தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிறப்பாகப் பங்களித்த பல பயனர்கள் இணைந்தனர். இவர்களுள், ரவி, நற்கீரன், கனகு, சிவகுமார், செல்வா, கோபி, உமாபதி, மயூரன், மயூரேசன், கலாநிதி, நிரோஜன், சந்திரவதனா, கலாநிதி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களுள் ரவி, நற்கீரன், கனகு, சிவகுமார், செல்வா போன்றோர் கட்டுரைகளை எழுதியதோடு நில்லாது, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கேற்பட்ட பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டதால் தமிழ் விக்கிப்பீடியா ஒழுங்கமைக்கப்பட்டதோடு தரத்திலும் மேம்பட்டது. இக்கால கட்டத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கையும், பங்களிப்புச் செய்த பயனர்களின் மொத்த எண்ணிக்கையும் பத்து மடங்குகளுக்கு மேலாக வளர்ச்சியடைந்தன. தமிழ் விக்கியின் பிற்கால வளர்ச்சிகளுக்கான அடிப்படைகள் பலவும் இக் காலகட்டத்திலேயே உருவாயின எனலாம். எனவே இதுவே மிகவும் முக்கியமான காலகட்டம் என்பது எனது கருத்து.
2011ல் தமிழ் விக்கிச் சூழல் எவ்வாறு உள்ளது? 2003ல் நீங்கள் தமிழ் விக்கியை உருவாக்கத் தொடங்கிய போது விக்கி இவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணியவை எந்த அளவு நிறைவேறியுள்ளன?
தமிழ் விக்கியை நான் உருவாக்கத் தொடங்கினேன் என்று கூறுவதை விட, "தமிழ் விக்கியின் உருவாக்கத்தில் நான் தொடக்ககாலப் பங்களிப்பாளர்களுள் ஒருவராகப் பணியாற்றினேன்" என்று குறிப்பிடவே நான் விரும்புகிறேன். ஏனென்றால், இன்றைக்குத் தமிழ் விக்கியின் வயது 8 ஐ அண்மிக்கிறது. இந்த எட்டாண்டு காலத்தில் நூற்றுக்கணக்கான பயனர்கள் பங்களிப்புச் செய்துதான் தமிழ் விக்கியை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர். பலருடைய பங்களிப்புகள் என்னுடையதைவிட முக்கியத்துவம் வாய்ந்தவை. என்னுடைய தொடக்ககாலப் பங்களிப்புகள் குறித்துப் பேசவேண்டி ஏற்படுவது தமிழ் விக்கியின் வரலாற்றுப் பதிவுத் தேவைகளுக்காக மட்டுமே.
நான் தமிழ் விக்கியில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் ஆங்கில விக்கியில் 2,00,000 கட்டுரைகளுக்கும் குறைவாகவே இருந்தன. எனினும் ஒப்பீட்டளவில் அது மிகவும் பெரியது எனவே தமிழ் விக்கி எந்தமாதிரியான வளர்ச்சியைப் பெற வேண்டும் என்பதற்கு அது ஒரு முன்மாதிரியாக இருந்தது. தமிழ் விக்கி தமிழர் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்றவகையில் அமைய வேண்டும் என்பதும் அடிப்படையான எண்ணமாக இருந்தது. மேலும் தொடக்க காலத்திலேயே சில இந்திய மொழி விக்கிகள் தன்னியக்கமாக ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை உருவாக்கிக் கட்டுரை எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தன. இவ்வாறு தமிழ் விக்கியின் தரத்தைக் குறைக்கக்கூடாது என்பதில் முதலில் இருந்தே தெளிவு இருந்தது. பல துறைகளிலும் இருந்து ஏராளமான பயனர்கள் சேர்ந்து பங்களிப்பதன் மூலமே தரத்தைக் குறைக்காமல் கட்டுரைகளின் ஏண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற கருத்தும் ஆராம்பம் முதலே இருந்தது. ஆனாலும் எதிர்பார்த்தபடி அறிஞர்கள் பெரிய அளவில் பங்களிக்க முன்வரவில்லை. இதனால் கட்டுரையின் எண்ணிக்கையும் எதிர்பார்த்தபடி அதிகரிக்கவில்லை. எட்டு ஆண்டுகளில் 1,00,000 கட்டுரைகளாவது இருந்திருக்க வேண்டும். இவற்றில் அரைப் பங்காவது நீளமான தரமான கட்டுரைகளாக இருந்திருக்க வேண்டும். அது நிகழவில்லை. ஆனாலும் நல்ல முனைப்பாகப் பணியாற்றக்கூடிய பல பயனர்களை நாம் பெற்றிருப்பது ஒரு நல்ல விடயம். இப்பொழுது தமிழ் விக்கியில் கட்டுரைகளின் எண்ணிக்கை 37,000 ஐத் தாண்டிவிட்டது. இப்போது கட்டுரைகளின் ஆழம், தரம் என்பவை குறித்தும் அவற்றை மேம்படுத்துவது குறித்தும் சிந்திக்க வேண்டும். இப்போது இது குறித்துப் பொதுவான கலந்துரையாடல் எதுவும் இடம் பெறுவதாகத் தெரியவில்லை. அவ்வப்போது நிலைமைகளை மீளாய்வு செய்து அதற்கொப்ப விக்கி நடவடிக்கைகளின் போக்கை நெறிப்படுத்த வேண்டியது அவசியம். இந்தத் திசையில் பயனர்கள் தமது கவனத்தைத் திருப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது எனது கருத்து.
எட்டாண்டு விக்கி வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட ஒரு இன்ப அதிர்ச்சி நிகழ்வு ஒன்றை நினைவு கூற வேண்டுகிறேன்.
இன்ப அதிர்ச்சி நிகழ்வு என்று கூறுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் மகிச்சியைத் தந்த சில விடயங்கள் இருக்கின்றன. முதலாவதாக அறிவியல் துறை சார்ந்தவரும், பல்கலைக் கழகப் பேராசிரியரும் நல்ல தமிழ் அறிவும், உணர்வும் கொண்டவருமான செல்வா தமிழ் விக்கியில் இணைந்த போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இது தமிழ் விக்கியின் போக்கில் ஒரு புதிய வாய்ப்பு என்று எண்ணினேன். உண்மையில் செல்வாவின் பங்களிப்பு நான் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகவே இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். இன்னொன்று விக்கிமேனியா மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமை. பல நாடுகளையும் சேர்ந்த விக்கிப் பயனர்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பும், தமிழ் விக்கி பற்றிப் பலருக்கும் எடுத்துக் கூறுவதற்குக் கிடைத்த வாய்ப்பும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிக்கு உரியன.
விக்கிப்பீடியா தவிர்த்த பிற தமிழ் விக்கித் திட்டங்களின் வளர்ச்சி பற்றி சொல்லுங்கள்.
பிற தமிழ் விக்கித் திட்டங்களில் விக்சனரி, விக்கி மேற்கோள் என்பன விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலேயே தொடங்கியவை. இவற்றிலும் எனது தொடக்ககாலப் பங்களிப்புகள் உண்டு. இன்று தமிழ் விக்சனரி உலகின் முன்னணி விக்சனரிகளுள் ஒன்றாக, முதல் 10 இடங்களுக்குள் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. இந்த இமாலய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்ட ரவி, சுந்தர் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள் தற்போது இதில் பல பயனர்கள் முனைப்பாகப் பணியாற்றி வருகின்றனர். எனினும் தமிழ் விக்சனரியில் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. முக்கியமாக தமிழ்-தமிழ்-பிறமொழிப் பகுதி திட்டமிட்டு விரிவாக்கப்பட வேண்டியது அவசியம்.
வளர்வதற்கு வாய்ப்புக்கள் உள்ள தமிழ் விக்கிமேற்கோள் திட்டத்தின் வளர்ச்சி போதாது.
குறிப்பிட வேண்டிய இன்னொரு தமிழ் விக்கித்திட்டம் "விக்கிச்செய்தி" மூடுவதற்குக் குறித்து வைக்கப்பட்டிருந்த இந்தத் திட்டம் இன்று பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. இதற்கு ஆணி வேராக நின்று உழைத்த பயனர் கனக்ஸ் மிகுந்த பாராட்டுக்கு உரியவர். அவரையும் இத்திட்டத்தில் பணிபுரியும் பிற பயனர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
விக்கி மூலம் வளர்வதற்கும் நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் ஆட்பலம் போதாது.
விக்கி நூல் திட்டத்தின் நிலையும் அவ்வாறே உள்ளது.
உங்கள் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் என்ன நினைக்கிறார்கள்?
பொதுவாகப் பார்க்கும் போது நண்பர்கள் பலரும் குடும்பத்தினரும் எனது விக்கிப்பீடியா ஈடுபாட்டை வரவேற்கிறார்கள் என்றே கொள்ள வேண்டும். இவ்வாறான திட்டமொன்றில் பலரும் ஈடுபட்டு உழைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு அதிகம் கிடையாது. ஆனாலும், சில வேளைகளில் குடும்பத்தினரைப் பொறுத்த வரை நான் கூடுதலாக இதில் நேரம் செலவிடுகிறேன் என்ற ஒரு எண்ணமும் ஏற்படுவது உண்டு. இது பொதுவாக இருக்கக்கூடிய ஒரு பிரச்சினைதான். சென்ற ஆண்டு விக்கிமீடியா பவுன்டேசனின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சூ கார்ட்னரை துபாயில் சந்தித்த போது இதே கேள்வியை என்னிடம் கேட்டார். பின்னர் உலகின் எல்லாப் பகுதிகளிலுமே இந்தப் பிரச்சினை இருப்பது பற்றியும் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரை குடும்பத்தினர் எனக்கு அதிகமாக அழுத்தம் கொடுப்பதில்லை என்பதுடன் அவ்வப்போது உற்சாகப்படுத்துவதும் உண்டு. இதனால் நான் எனது பங்களிப்புக்களைத் தடங்கல் இல்லாமல் செய்ய முடிகிறது. ஆனாலும் இளம் வயதினர் விக்கிப்பீடியாப் பணிகளுக்கும், குடும்பம் சார்ந்த பணிகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண வேண்டியது அவசியம்.
2015ல் தமிழ் விக்கித் திட்டங்கள் எந்த நிலையில் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழ் விக்கித் திட்டங்கள் பலவும் தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகின்ற போதும், விக்கிப்பீடியாவும் விக்சனரியும் கடைசி ஐந்து ஆண்டுகளில் தான் ஓரளவு முனைப்புடன் இயங்குகின்றன எனலாம். இப்போது தமிழ் விக்கித் திட்டங்களில் சிறப்பாக இயங்கும் அனுபவம் வாய்ந்த பயனர்கள் பலர் உள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு வரும் ஆண்டுகளில் தமிழ் விக்கித் திட்டங்களின் வளர்ச்சி வேகத்தைக் கூட்ட முயல வேண்டும்.
2015 ஆம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்ட வேண்டும். அதே வேளை எண்ணிக்கைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடாமல் கட்டுரைகளின் தரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். முக்கியமாக, பல துறைகளையும் சேர்ந்த நீளமான கட்டுரைகள் இடம்பெற வேண்டும். குறிப்பாகத் தமிழ் மக்களுக்கும், மாணவர்களுக்கும் அவசியம் தேவையான துறைகளில் நல்ல தரமான கட்டுரைகள் இருக்க வேண்டும். தமிழர்களின் அறிவுப் பரம்பலுக்கு உதவும் முக்கியமான உசாத்துணையாக விக்கிப்பீடியா வளரவேண்டும் இதற்கான அடிப்படைகளை 2015 ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்குத் திட்டமிட்டுச் செயல்படவேண்டிய தேவை உண்டு.
விக்சனரியும் சொற்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் முதன்மையான விக்சனரிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இதன் தரமும் கூட வேண்டும். தமிழ்-தமிழ்-பிறமொழி விக்சனரிப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் இத்துறையில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். விக்கி நூல், விக்கிமூலம் திட்டங்களையும் பயனுள்ள வகையில் வளர்த்தெடுக்க முடியும். குறிப்பாக விக்கி மூலத்தில் சேர்க்கப்படக் கூடிய விடயங்கள் நிறைய உள்ளன. விக்கி நூல் திட்டத்திலும் மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய நூல்களை எழுத முடியும். எதிர்வரும் ஆண்டுகளில் இவை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.