ஏழு காய் பொங்கல் குழம்பு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரி, உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - 2 1/2 கப்
2. மொச்சைக் கொட்டை, பட்டாணி - 1/4 கப்
3. அவரை - 1/2 கப்
4. கொத்தவரை - 1/2 கப்
5. பீன்ஸ் (சிறிய துண்டுகள்) - 1/2 கப்
6. துவரம் பருப்பு - 1/2 கப்
7. மைசூர் பருப்பு - 6 தேக்கரண்டி
8. புளி - எலுமிச்சை அளவு
9. எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
10. நெய் - 4 தேக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க
12. பெருங்காயம் - 1 துண்டு
13. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
14. கடலைப் பருப்பு - 4 தேக்கரண்டி
15. மல்லி (தனியா) - 6 தேக்கரண்டி
16. மிளகாய் வற்றல் - 13 எண்ணம்
17. மிளகு - 2 தேக்கரண்டி
18. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
19. துருவிய தேங்காய் - 1/2 கப்
தாளிக்க
20. கடுகு - 4 தேக்கரண்டி
21. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
22. நிலக்கடலை - 4 தேக்கரண்டி
23. கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு.
செய்முறை:
1. துவரம் பருப்பு, மைசூர் பருப்பைத் தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைக்கவும்.
2. மூன்று மேசைக்கரண்டி எண்ணெய்யில் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
3. புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும்.
4. பூசணி, பரங்கி, கத்திரி, வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து வடிகட்டவும்.
5. புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்தரித் துண்டுகளைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
6. சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
7. நன்கு கொதித்து, சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
8. பத்து நிமிடம் கொதித்ததும் இறக்கி, 2 மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும் (இதில் சாம்பார் பொடி சேர்க்கக் கூடாது)
9. காரம் அதிகம் விரும்புபவர்கள், மிளகாய் வற்றலை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
10. கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக் குழம்பு தயார்.
குறிப்பு:
1. முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதில் சேர்ப்பதில்லை.
2. நிறைய காய்கறிகள் சேர்ப்பதால் குழம்பு அதிகமாக இருக்கும். மீதியான குழம்பில் மறுநாள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வதக்கிச் சேர்த்து கொதிக்கவிட்டுச் சாப்பிட மிக சுவையாக இருக்கும். இதனை எரித்த குழம்பு என்று சொல்வதுண்டு.
3. இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.